உலகின் மறுபக்கத்திலுள்ள மனிதர்களைக் கொண்டு இந்த உலகை சீரமைக்க வேண்டும்

0
117

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (6)சம கால உலகத்தை சீராக்க வேண்டுமானால் உலகின் மறுபக்கத்திலுள்ள மனிதர்களைக் கொண்டு இந்த உலகத்தைப் புதிதாக உருவாக்க வேண்டும் என ஜேர்மன் தொழினுட்ப நிறுவனத்தின் மோதல் நிலைமாற்ற உள்ளுர் முன்னெடுப்புகளுக்கான  திட்டத்தின் வளவியலாளர் லக்ஷ்மன் பெரேரா தெரிவித்தார்.

சகவாழ்வுக்கான கலையாற்றல் பயிற்சிப் பட்டறை பின்தொடர் நிகழ்வு அனுராதபுரம் சர்வோதய பயிற்சி மண்டபத்தில் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 29, 2016) இடம்பெற்றது.

சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், கல்வியியலாளர்கள், சமாதான சகவாழ்வுச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள். நுண்கலை ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோருக்கென ஒழுங்கு செய்யப்பட்ட சமூக ஒருமைப்பாடும் சகவாழ்வு எண்ணக்கருவும்  எனும் தொனிப்பொருளிலான பயிற்சிநெறியில் சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனமும் இலங்கை மன்றக் கல்லூரியும் இந்தப் பயிற்சி நெறிகளை வடிவமைத்து வளங்கி வருகின்றன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “இந்த உலகம் தற்போது பல்வேறு மத, கலாச்சார, பண்பாடு எனும் மூடத்தனங்களுக்குள் சிக்குண்டு சின்னாபின்னப்பட்டு சிதறிக் கிடக்கின்றது.

அதனால், உலகில் வீண் குழப்பங்களும், அழிவுகளும், அநியாயங்களும் இடம்பெறுவதோடு அரக்கத்தனங்களும் மனித மனங்களில் குடிகொண்டு விட்டது.

கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பயங்கரமான பிடிக்குள் சிக்குண்டிருக்கும் இந்த உலகத்தை அனைத்து மனித குலத்துக்கும், ஏனைய ஜீவராசிகளுக்கும் இயற்கைக்கும் பொருத்தமான இடமாக மாற்றியமைக்க வேண்டும்.

உலக வரைபடத்தை துண்டு துண்டாக்கி விட்டு அதனை நேர்த்தியாகப் பொருத்துவதென்பது முடியாத காரியம். ஏனெனில் அந்த உலகத்தின் நேர்த்தியை சமகால மனிதர்கள் அசிங்கப்படுத்தி சீரழித்து விட்டார்கள்.

இந்த உலகை மீண்டும் சீரமைக்க வேண்டுமாக இருந்தால் உலக வரைபடத்தின் பின்னால் ஒரு சிறப்பான மனிதனை வரைந்து அதன் பின்னர் துண்டு துண்டாக வெட்டினாலும் அதிலுள்ள மனிதன் சீரானவனாக இருப்பதால் சீரழிந்து சின்னாபின்னப்பட்டு சிதைந்து கிடக்கும் இந்த உலகை அந்தப் பின்புறத்திலுள்ள மனிதனைக் மீண்டும் சீரானதாகப் பொருத்தி விட முடியும்” என்றார்.

மனிதர்களுக்கிடையிலான மனிதாபிமான உறவுகளில் பிளவுகளோடும் மோதல்களோடும் பண்பாடு கொண்டுள்ள நெருக்கமான தொடர்பு பற்றி அறிவார்ந்த ரீதியில் சிந்திக்க வைப்பதே இந்தப் பயிற்சி நெறியின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

மனித மனங்களில் சிந்தனையில் ஆக்கபூர்வமான மாற்றம் வேண்டும். இச்சிந்தனை மாற்றம் இன்று அவசியமானது. மனித சமூகப் பிளவுகளுக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கும் சிறந்த அறிவார்ந்த பண்பாடு அவசியம்” என்றும் அவர் கூறினார்.

போலியான பல்வேறு அம்சங்களைத் தக்கவைத்துக் கொண்டு இந்த உலகை சீரழித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டு உலகின் மறுபக்கத்திலுள்ள மனிதர்களைக் கொண்டு பிளவுபட்டிருக்கும் இந்தப் பூகோளத்தை மறுசீரமைக்க வேண்டும் எனவும் லக்ஷ்மன் பெரேரா தெரிவித்தார்.

LEAVE A REPLY