கடைசி டெஸ்டில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

0
183

201608302144127390_2nd-Test-south-africa-beats-new-zealand-by-204-runs-and-won_SECVPFதென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா டு பிளிசிஸ் (112), ஸ்டீபன் குக் (56), குயிண்டான் டி காக் (82), அம்லா (58), டுமினி (88) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 58.3 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் வில்லியம்சன் அதிகபட்சமாக 77 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஸ்டெயின், ரபாடா தலா 3 விக்கெட்டும், பிலாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னில் சுருண்டதால், தென்ஆப்பிரிக்கா அணி 267 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த ரன்னுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக டி காக் 50 ரன்னும், பவுமா 40 ரன்னும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் சவுத்தி 3 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இரண்டு இன்னிங்சையும் சேர்த்து தென்ஆப்பிரிக்கா 399 ரன்கள் அதிகம் பெற்றது. இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 400 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் லாதம், குப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

லாதம், குப்தில் ஆகியோர் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த வில்லியம்சன் 5 ரன்களில் பிலாண்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். அனுபவ வீரர் டெய்லரையும் ஸ்டெயின் டக் அவுட் ஆக்கினார்.

இதனால் நியூசிலாந்து அணி 7 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு நிக்கோல்ஸ் உடன் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 68 ரன்கள் சேர்த்தது. வாட்லிங் 32 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அடுத்து வந்த சான்ட்னெர் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்தில் போல்டானார்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிக்கோல்ஸ் நிலைத்து நின்று விளையாடினார். இவர் 76 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஸ்டெயின் பந்தில் அவுட்டாக, நியூசிலாந்து அணி 58.2 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 204 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 82 ரன்னும், 2-வது இன்னிங்சில் 50 ரன்னும் அடித்த குயிண்டான் டி காக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. முதல் போட்டி மழையினால் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY