பெண்ணை தாக்கிவிட்டு பணம், நகை கொள்ளை: காத்தான்குடியில் சம்பவம்

0
168

(விஷேட நிருபர்)

Kattankudy Robberyகாத்தான்குடியிலுள்ள வீடொன்றில் பெண்ணொருவை தாக்கி விட்டு வீட்டிலிருந்த பணம் தங்க நகை என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி-02, பரீட் நகர் பிரதேசத்திலுள்ள எம்.ஏ.எம்.சாபிர் என்பவரின் வீட்டில் இன்று (30) அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் கணவன், மனைவி, பிள்ளைகள் உறக்கத்தில் இருந்த போது அதிகாலை சுமார் 2.00 மணியளவில் மனைவி தூக்கத்திலிருந்து விழித்து மல சல கூடத்திற்கு சென்றுள்ளார்.

இதன் போது வீட்டினுள் மறைந்திருந்த இனம் தெரியாத கள்ளன் ஒருவன் அவரை பொல்லினால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். மனைவியின் சப்தத்தில் கண் விழித்த கணவர் குறித்த திருடனை பிடிக்க முற்பட்ட போது அங்கிருந்து திருடன் தப்பிச் சென்றுள்ளான்.

வீட்டிலிருந்த இரண்டரை இலட்சம் ரூபா பணம் மற்றும் இருபது பவுண் தங்க நகை என்பனவும் இதன் போது கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

தாக்கப்பட்ட மனைவி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY