அமுலில் உள்ள (இஸ்லாமிய அல்ல) முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் அவசியம்!

0
793

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

Masihuddeen inamullahமுஸ்லிம்களுக்கென தனியான விவாக விவாகரத்து சட்டங்கள், வாரிசுரிமை, வக்பு சட்டங்கள் இருப்பதனை எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் விட்டுக் கொடுக்கவோ சமரசம் செய்யவோ தயாரில்லை.

ஆனால், இலங்கையில் அமுலில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.

இளவயது திருமணங்கள் தடுக்கப் பட வேண்டுமா என்ற விவகாரத்தை ஒரு “உரிமை”யாக எடுத்துக் கொண்டு தர்க்கிப்பதனை அனுமதிக்க முடியாது.

தற்போதைய சமூக பொருளாதார, இரவல் கலாசார மற்றும் உடலியல், உளநிலை காரணிகளை கருத்தில் கொண்டு உலமாக்கள் சிறுமியர் பொறுப்புணர்வு “ருஷ்து” வயதெல்லையை 18 அல்லது அதற்கு மேல் நிர்ணயிப்பதில் தவறில்லை, மாறாக கடமையாகும்.

குறிப்பாக கைக்கூலி சீதனம் சீர்வரிசை போன்ற வழி கெட்ட வரதட்சணைக் கலாச்சாரங்களை அனுமதிக்கும் தனியார் சட்டம் அமுலில் உள்ள ஒரு நாட்டில் பெண்களுக்கு எதிரான சமூக அநீதிகள், கொடுமைகள் அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் இளவயது திருமணங்கள் கட்டாயமாக தடை செய்யப் படல் வேண்டும் என உலமாக்கள் இஜ்திஹாத் முடிவு ஒன்றை வெளியிடுவது காலத்தின் கட்டாயமாகும்.

அநீதிகள் இடம் பெறுவதை தவிர்த்தல், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் துஷ்பிரயோகம் செய்யப் தடுத்தல், சமூக கலாசார அநீதிகள் இடம் பெறுவதை தடுத்தல், சிறுமியர்களது உரிமைகளை பாதுகாப்பை உத்தரவாதப் படுத்தல் போன்ற மார்க்கத்தில் முன்னுரிமைப் படுத்தப் பட வேண்டிய அம்சங்களை ஒரு “சலுகை” க்காக சமரசம் செய்ய வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை.

பருவ வயது வந்த 14, 15, 16 வயது சிறுவர்களை திருமணத்திற்கு அனுமதித்த காலமும் வரலாற்றில் இருந்தது, முஹம்மத் பின் காசிம் ஆசிய நாடுகள் நோக்கி படையினருக்கு தலைமை தாங்கும் பொழுது அவரது வயது 16.

ஒரு சிறுமி திருமணத்திற்குரிய உடல் உள, அறிவு வளர்ச்சியை பக்குவத்தை பெற்றிருக்கின்றாரா என்பதனை அறிவு பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக பண்டைய மரபுகளிற்கு அப்பால் தீர்மானிப்பதனை இஸ்லாமிய ஷாரீஆவின் அடிப்படை இலக்குகள் தடுப்பதற்கில்லை.

இளவயது திருமணம் என்பது ஒரு தனித்த, வயதுடன் மாத்திரம் மட்டுப் படுகின்ற ஒரு விவகாரமல்ல, மாறாக இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பில் வாரிசுரிமைச் சட்டங்கள், ஒரு விதவை மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள், சமூக பொருளாதார கலாசார ,உடலியல், உளவியல் காரணிகள் என பரந்த பரப்புக்களுடன் தொடர்பு பட்ட ஒரு விவகாரமாகும்.

ஒரு பெண்ணுக்கு அவளது கல்வி, தொழில், திருமணம், துணைவன் போன்ற விவகாரங்களில் பலாத்காரம் பிரயாகிக்கப் படுவதனை அனுமதிக்க முடியாது, அவர்கள் சுயமாக இஸ்லாமிய வரைமுறைகள் மீறாது தீர்மானம் எடுக்கின்ற சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப் படல் வேண்டும்.

திருமணம் சார்ந்த பலநூறு சமூகக் கொடுமைகளுக்கு ஆளாகி தனக்கொரு துணையை விலைக்கு வாங்க கடல் கடந்து அரபியின் வீட்டில் அடிமைச் சேவகம் செய்ய ஆயிரக் கணக்கான சகோதரிகள் மஹ்ரமின்றி வெளியேறும் அவலத்திற்கு தீர்வு சொல்ல முடியாத ஒரு சமூகத்தில் இள வயது திருமணம் தடுக்கப் படல் வேண்டும்.

அது மாத விடாய் காலத்தில் உடலுறவை தவிர்ப்பது போல, வலியும் விளைவுகளும் கவனத்தில் கொள்ளப் படல் வேண்டும்.

இத்தகைய காரணிகளை கருத்தில் கொண்டு ஒவ்வொருவராக சான்றிதழ் வழங்கி அனுமதி வழங்கவும் முடியாது எனவே இளவயது திருமணங்களை தடுப்பதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்ளப் படுவதனை தனிப்பட்ட முறையில் பூரணமாக நான் ஆதரிக்கின்றேன்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் விடுவரப்படுவத்தோடு காதி நீதி மன்ற கட்டமைப்பு ஒரு தரப்படுத்தலுக்கு உட்படுத்தப் படல் வேண்டும், காழி மார்களின் தகைமைகள் நிர்ணயம் செய்யப் படுத்தல் வேண்டும்.

எனது இந்தப் பதிவு குறித்த விவகாரம் இன்னும் விரிவாகவும், ஆழமாகவும் உரிய தரப்புக்களால், உரிய மட்டங்களில் ஆராயப் பட நிச்சயமாக வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டுள்ளது.

இறுதியாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன், மேற்படி விவகாரத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் தனது உள்வீட்டு விவகாரமாகவே அணுக வேண்டும், ஏனைய அந்நிய பெண்ணிய அமைப்புக்கள், உரிமை அமைப்புக்கள், வெகுசன ஊடங்களில் இதனை சர்ச்சைக்குரிய விவகாரமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

LEAVE A REPLY