அமெரிக்காவை மீண்டும் மிரட்டுகிறது வட கொரியா; நீர் மூழ்கி அணு ஏவுகணை வெற்றிகரமாக பரிட்சிப்பு

0
189

(எம்.ஐ.முபாறக்)

unnamed (5)இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது ஹிரோஷிமா மற்றும் நாகஷாதிய நகரங்கள்மீது அமெரிக்கா நடத்திய அணு குண்டுத் தாக்குதலை அடுத்து அணுவாயுதங்கள் இந்த உலகிற்கு-மனித உயிர்களுக்கு எவ்வளவு ஆபத்தானவை என்பதை முழு உலகமும் அறிந்துகொண்டது. அமெரிக்காகூட அதன் தாக்கத்தை அப்போதுதான் உணர்ந்தது.

அந்த இரண்டு நகரங்களும் இன்னும் அதன் அழிவில் இருந்து முற்றாக மீளவில்லை. அங்கு பிறக்கும் குழந்தைகள் இன்னும் ஊனமுற்றவர்களாகவே பிறக்கின்றனர். அந்தளவிற்கு அணுத் துகள்கள் வளிமண்டலத்தில் கலந்துள்ளன.

இதன் காரணமாக அணுவாயுத உற்பத்திக்கு உலகில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும், சில நாடுகள் மிகவும் இரகசியமாக அணுவாயுதங்களைத் தயாரிப்பதை நிறுத்தவில்லை. தமக்கு எதிராக இன்னொரு நாடு தாக்குதல்கள் நடத்தும்போது அணு ஆயுதங்கள்தான் தம்மைப் பாதுகாக்கும் அதி பலம்வாய்ந்த இறுதி ஆயுதங்கள் என அந்நாடுகள் நம்புகின்றன.

அவ்வாறான சிந்தனையுள்ள நாடுகளுள் ஒன்றுதான் வட கொரியா.உலகில் இருந்து அனேகமாகத் தனித்து விடப்பட்டுள்ள இந்த நாடு உலகிலேயே அதிக அணுவாயுத பலம் கொண்ட நாடாக மாற வேண்டும் என்ற திட்டத்தோடு செயற்பட்டு வருகின்றது.

ஒன்றன் பின் ஒன்றாக-வெற்றிகரமாக தனது அணுப் பரிசோதனையையும் நெடுந்தூர-குறுந்தூர ஏவுகணைப் பரிசோதனைகளையும் வட கொரியா செய்து கொண்டே வருகின்றது.

உலக நாடுகளினதும் ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மிகப் பெரிய அமைப்புகளினதும் எதிர்ப்பையும் மீறி -ஐ.நாவின் பல பொருளாதாரத் தடைகளையும் தாண்டி அந்நாடு கட்டங்கட்டமாக அந்த அணு மற்றும் ஏவுகணைப் பரிசதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதை அவதானிக்கலாம்.

வட கொரியாவின் இந்த நடவடிக்கையால் அதிகம் குழம்பிப் போய் இருப்பது ஏனைய நாடுகளை விடவும் அமெரிக்காதான். வட கொரியாவின் பிரதான இலக்காக அமெரிக்கா இருப்பதே இதற்குக் காரணம்.

தனது கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கின்ற எல்லா நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் எதிரி நாடுகள் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில், வட கொரியா அமெரிக்காவின் எதிரி நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பகைமை இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுற்றதும் அதாவது 1945 முதல் இந்தப் பகைமை ஆரம்பமானது.

பல தசாப்தங்களாக ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது கொரியா. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்ததும் சோவியத் ஒன்றியம் கொரியா மீது படையெடுக்கத் தொடங்கியது. இதை விரும்பாத அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை எதிர்த்து கொரியாவுக்குள் நுழைந்தது. கொரியாவின் வடக்கில் சோவியத் யூனியன் நிலைகொண்டிருக்க தெற்கில் அமெரிக்கா அதன் நிலையைப் பலப்படுத்தியது. இறுதியில் இந்த இரண்டு ஆக்கிரமிப்பாளர்களின் ஏற்பாட்டால் கொரியா நாடு வட கொரியா என்றும் தென் கொரியா என்றும் இரண்டாக்கப் பிரிந்தது.

இரண்டு பகுதிகளிலும் இரு வெவ்வேறு ஆட்சியை நிறுவிவிட்டு அமெரிக்காவும் சோவியத் யூனியனும் அங்கிருந்து சென்றுவிட்டன. அன்று முதல் தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் மோதல்கள்- நிரந்தரப் பகைமை தொடங்கிவிட்டன. வட கொரியாவுக்கு ஆதரவாக சீனாவும் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றன.

வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் 1950 முதல் 53 வரை யுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வலுப்பெற்ற பகைமை இன்றும் தொடர்கின்றது. அமெரிக்கா தென் கொரியாவின் நெருங்கிய நண்பனாகவும் வட கொரியாவின் நிரந்தரப் பகைவனாகவும் செயற்பட்டு வருகின்றது. அமெரிக்காவுடன் இணைந்து ஜப்பானும் வட கொரியாவுக்கு எதிராகவே செயற்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அதி சக்திவாய்ந்த அணுவாயுதங்களே தேவை என வட கொரிய ஆட்சியாளர்களும் மக்களும் கருதத் தொடங்கினர். இதன் விளைவாக அந்த நாடு அணுவாயுங்களையும் அமெரிக்காவை வட கொரியாவில் இருந்து கொண்டே தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் தயாரிப்பதற்கான முயற்சிகளில்-அணு ஆராய்ச்சியில் 1970 முதல் ஈடுபடத் தொடங்கியது.

அந்த ஆராய்ச்சியில் பல தடவைகள் வட கொரியா தோல்வி கண்டபோதிலும், அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும் அணு ஆராய்ச்சியை மாத்திரம் நிறுத்தவில்லை. 1990 ஆம் ஆண்டு அந்த நாட்டில் ஏற்பட்ட பெரும் பஞ்சம் நிலைமையிலும் கூட அவர்களின் அணு ஆராய்ச்சி நிறுத்தப்படவில்லை.

2006 ஆம் ஆண்டு அந்நாடு முதலாவது அணுவாயுதப் பரிசோதனையை மேற்கொண்டது. 2009, 2013 மற்றும் 2016 ஆகிய வருடங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு நான்கு தடவைகள் அணுவாயுதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பரிசதனைகள் அனைத்தும் ஒன்றை விட ஒன்று வெற்றிகரமாகவே அமைந்தன.

2006 இல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை ஒரு கிலோதொன் சக்தியையும், 2009 இல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை இரண்டு கிலோதொன் சக்தியையும், 2013 இல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை 7 கிலோதொன் சக்தியையும் மற்றும் 2016 இல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை 9 கிலோதொன் சக்தியையும் கொண்டிருந்தன. அணுப் பரிசோதனையில் வட கொரியா கட்டங்கட்டமாக முன்னேறி வந்திருப்பதை அவதானிக்கலாம். இதனால், உட்சாகமடைந்துள்ள வட கொரியா சர்வதேசத்தின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்தும் பரிசோதைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

இதனுடன் இணைந்ததாக நெடுந்தூர மற்றும் குறுந்தூர ஏவுகணைகளையும் அது வெற்றிகரமாகப் பரிசோதனை செய்து வருகின்றது. இந்த வருடம் ஜனவரியில் வட கொரியா நான்காவது அணுவாயுதப் பரிசோதனையை மேற்கொண்டதைத் தொடர்ந்து அடுத்த மாதம் பெப்ரவரியில் நெடுந்தூர ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டது.

இந்த நாடு இவ்வாறு பரிசோதனை செய்கின்ற போதெல்லாம் ஐ.நா இந்நாட்டுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் மார்ச் மாதமும் மற்றுமொரு பொருளாதாரத் தடையை ஐ.நா விதித்துள்ளது. ஆனால், எந்தத் தடைக்கும் அஞ்சாது வட கொரியா அதன் திட்டத்தைத் தொடர்ந்தவண்ணமே உள்ளது.

வட கொரியாவின் அனைத்து அணுவாயுதப் பரிசோதனைகளும் ஏவுகணைப் பரிசோதனைகளும் அமெரிக்காவை இலக்காகக் கொண்டிருப்பதுதான் இங்கு முக்கியமான விடயம். அமெரிக்காவைத் தாக்கப் போவதாக வட கொரியா வெளிப்படையாகவே கூறி வருகின்றது. அதற்கான வல்லமையை வட கொரியா இப்போது பெற்றுவிட்டதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

வட கொரியா 2012 ஆம் ஆண்டு முதலாவதாகப் பரிசோதித்த நெடுந்தூர கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையின் பாகங்களை எடுத்து ஆய்வு செய்த தென் கொரியா அது 10,000 கிலோ மீற்றர் தொலைவிற்குச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்று தெரிவித்தது. அதாவது, அந்த ஏவுகணை வட கொரியாவில் இருந்து அமெரிக்காவைத் தாக்கும் தூரத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட ரகசிய அறிக்கையும் இந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளது. வட கொரியா இதுவரை ஆயிரம் ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ளது என்றும் அவற்றுள் அதிகமானவை அமெரிக்காவைத் தாக்கும் வல்லமை கொண்டவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது வட கொரியா தகவல்கள் தெரிவிக்கின்றன..

அது மாத்திரமன்றி ஆயிரம் மீற்றர் கடந்து ஜப்பான் போன்ற நாடுகளைத் தாக்கக்கூடிய ஆற்றல்கொண்ட ஏவுகணைகளும் அவற்றுள் அடங்குகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. இவை வட கொரியாவின் மற்றுமொரு எதிரி நாடான ஜப்பானை இலக்கு வைத்துத் தயாரிக்கப்பட்டவை என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இதனால், அமெரிக்கா எந்நேரமும் வட கொரியாவை தாக்குவதற்கான ஏற்பாட்டையே செய்து வருகின்றது. அமெரிக்கா ஜப்பானில் 40 ஆயிரம் படைகளையும் தென் கொரியாவில் 28 ஆயிரம் படைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.இந்தப் படைகளிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வட கொரியா அதன் அணு மற்றும் ஏவுகணைத் தயாரிப்புகளை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றது.

இருப்பினும், வட கொரியாவின் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; தனது நற்பு நாடுகளை எல்லாம் கைக்குள் போட்டுக் கொண்டு வட கொரியாவுக்கு எதிராகத் திருப்பி வருகின்றது. அமெரிக்காவினதும் தென் கொரியாவினதும் முயற்சியால்தான் இந்த வருடம் மார்ச் மாதம் கூட வட கொரியாவுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இருந்தும்,வட கொரியா அதன் அடுத்த இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருக்கின்றது. தன்னுடன் இருக்கின்ற 20 அணுக் கருவிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் இப்போது அந்நாடு ஈடுபட்டுள்ளது.

இதன் தொடராக புதன் கிழமை அதிகாலை மற்றுமொரு அணு ஏவுகணையை வட கொரியா பரிசோதனை செய்துள்ளது. நீர் மூழ்கிக் கப்பலில் தாக்குதல் நடத்தக்கூடிய இந்த ஏவுகனைப் பரிசோதனை மீண்டும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மீண்டு இதற்கு எதிரான காய் நகர்த்தல்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

ஓரிரு நாட்களுக்கு முன் தென் கொரிய இராணுவமும் அமெரிக்க இராணுவமும் இணைந்து மேற்கொண்ட பயிட்சி நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தப் பரிசோதனையை வட கொரியா மேற்கொண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY