வட்டியென்பது நெருப்பாகும் அதன் பக்கம் போகக் கூடாது: மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகைதீன் தெரிவிப்பு

0
337

DSCN9071(விஷேட நிருபர்)

“வட்டியென்பது நெருப்பாகும் அதன் பக்கம் போகக் கூடாது” என மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைதீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் நேற்று (26) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் “ஸலாமா” வட்டியில்லா கடன் வழங்கும் நலன்புரி அமைப்பின் அலுவவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலின் இடைக்கால நிர்வாக சபையின் ஏற்பாட்டில் வட்டியில்லா கடன் வழங்கும் நலன்புரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி முகைதீன்,

“வட்டியையும் வறுமையையும் சமூகத்தில் ஒழிக்க வேண்டும். சமூகத்தில் இன்று வட்டி ஒரு பாரிய கொடுமையாக மாறியிருக்கின்றது.

வட்டியை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும். இன்று வட்டியினால் உயிரிழிப்புக்களும், சொத்திழப்புக்களும் இடம் பெற்று வருகின்றன.

இவ்வாறான வட்டியில்லா கடன் வழங்கும் நலன்புரி அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு அதில் தனவந்தர்களின் உதவியைப் பெற்று கடன் தேவையான மக்களுக்கு வட்டியில்லா கடனை வழங்க வேண்டும்.

வட்டியில்லாக் கடனை வழங்கும் வேலைத்திட்டத்தினை இவ்வாறான பள்ளிவாயல்கள்; மேற் கொள்ள வேண்டும். வட்டியில்லா வேலைத்திட்டத்தின் மூலம் சமூகத்தை வட்டியிலிருந்து பாதுகாக்க முடியும்.

இஸ்லாமியப்பார்வையில் வட்டியென்பது நெருப்பாகும் அதன் பக்கம் போகக் கூடாது அவ்வாறு அதன் பக்கம் போனால் அது சுட்டெரித்து விடும்” என்றார்.

இதன் போது முதல் கட்டமாக இந்த வட்டியில்லா கடன் வழங்குவதற்கான நலன்புரி அமைப்புக்கு பத்து தனவந்தர்கள் முன் வந்து தலா ஒரு இலட்சம் ரூபாவை வழங்கினர். இதன் மூலம் நேற்று பத்து இலட்சம் ரூபா நிதிசேனரிக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் பள்ளிவாயல் இடைக்கால நிருவாகிகள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Salama Batti 1 DSCN9078 DSCN9077 DSCN9076

LEAVE A REPLY