கிழக்கு முதலமைச்சருக்கு NFGG நன்றி தெரிவிக்கிறது!

0
201

(NFGG ஊடகப் பிரிவு)

NFGG Logo 1காத்தான்குடி நகர சபை தொடர்பில் உரிய கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற் கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நன்றியைத் தெரிவித்திருக்கிறது. ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கிழக்கு மாகாண முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காத்தான்குடி நகர சபைச் செயலாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு புதிய செயலாள் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி நகர சபையில் நிலவி வந்த முறை கேடுகள் மற்றும் நிதி துஸ்பிரயோகங்கள் என்பன ஆதார பூர்வமாக வெளியானதன் பேரிலேயே இந்த இடமாற்றமும் புதிய நியமனமும் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இவ்விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற் கொண்ட கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG ) நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

காத்தான்குடி நகர சபையில் நடை பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் ஏனைய துஸ்பிரயோகங்கள் தொடர்பாக நீண்ட காலமாக குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2011 இல் இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலினைத் தொடர்ந்து அங்கு பிரதான எதிர் கட்சியாக அங்கம் வகித்த NFGG அங்கு நடை பெறும் விடயங்களை தொடர்ச்சியாக மக்களுக்கு தெளிவு படுத்தி வந்தது.

அத்தோடு பொருத்தமான சந்தர்ப்பங்களில் உரிய இடங்களில் உரிய முறைப்பாடுகளை மேற் கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற் கொண்டிருந்தது. அத்தோடு நகர சபையின் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக் கூறலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தது.

இந்நிலையில் கடந்த 15.5.2015 திகதியோடு நகர சபையின் பதவிக்காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து சபையின் செயலாளர்களின் கீழ் நகர சபை நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. அந்தவகையில் காத்தான்குடி நகர சபைச் செயலாளராக இருந்த திரு.சர்வேஸ்வரன் அவர்களின் தலைமையில். நகர சபையின் முழு நிர்வாகமும் இயங்கி வந்தது.

இக்காலப் பகுதியில் பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகங்கள் நடை பெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்கத் தொடங்கின. எமது கவனத்திற்கும் அவை கொண்டு வரப்பட்டன.

அது போலவே பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடமும் இந்த முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டன.

சமூக நலன் சார்ந்த முக்கிய விடயமான இது, அரசியல் தரப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளாக மாறிவிடக்கூடாது என்பதனால் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் நாம் நடவடிக்கைகளை மேற் கொண்டோம். பொது நிறுவனங்களின் முயற்சியோடும் ஏனைய அரசியல் தரப்புகளின் ஒத்துழைப்போடும் இதற்கான தீர்வு காணப்படுவதே மிகவும் பொருத்தம் என நாம் கருதினோம்.

எனவே நாம் நேரடியாக உடனடியாக இவ்விடயத்தில் தலையிடுவதனை தாமதித்து வந்தோம்.

ஆனால் உரிய தீர்வுகள் எதுவும் காணப்படாமல் விவகாரம் இழுத்தடிப்பு செய்ப்பட்டு வருவதை உணர்ந்த நாம் இறுதியாக மக்கள் முன்னிலையில் இந்த விடயங்களை சமர்ப்பித்தோம்.

நகர சபையின் முறை கேடுகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் எமக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களை உரிய ஆதாரங்களுடன் ‘நாசமாகிறது நகர சபை’ என்ற தலைப்பிலான ‘புதிய நாளை’ பத்திரிகை மூலமாக இரு வாரங்களுக்கு முன்னர் மக்களுக்குத் தெளிவு படுத்தினோம்.

நகர சபை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பாரதூரத்தை எமது வெளியீட்டின் பின்னர் அனைவரும் புரிந்து கொண்டனர். அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சரோடும் நேரடியாகத் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தோம். அவரும் நாம் முன் வைத்த நியாயங்களை ஏற்றுக் கொண்டதோடு உடனடியாக இதற்கான தீர்வொன்றைக் காண்பதாகவும் எம்மிடம் உறுதியளித்தார்.

அதற்கிணங்க செயலாளரின் இந்த இடமாற்றமும் புதிய செயலாளர் நியமனமும் தற்போது இடம் பெற்றிருக்கின்றது. நகர சபையின் புதிய செயலாளராக காத்தான்குடியைச் சேர்ந்த S.M. முஹம்மட் சாபி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் பெற்றுள்ள இப்புதிய செயலாளர் சாபி அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவரது தலைமையின் கீழ் நகர சபையின் ஏனைய நேர்மையான திறமையான நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு நமது நகர சபை வருங்காலத்தில் சிறப்பான சேவையினை பொது மக்களுக்கு வழங்கும் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.

நல்லாட்சியை உறுதிப்படுத்தும், மக்களுக்கு விசுவாசமான நகர சபை நிர்வாகத்தை கொண்டு நடாத்துவதற்கு எம்மால் முடிந்த சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு நாம் எப்போதும் தாயாராகவே இருக்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகளை மேற் கொண்டு சிறப்பான தீர்வினைப் பெற்றுத் தந்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

LEAVE A REPLY