(Must Read) காத்தான்குடி மாணவன் றிஜானுக்கு நடந்தது என்ன? மின்சார தாக்கமா? அசிட் வீச்சா?

0
89

DSCN8969காத்தான்குடி முதலாம் குறிச்சி ரெலிகொம் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த 17.8.2016ம் திகதி புதன்கிழமை இரவு இடம்பெற்ற மின்சாரம் தாக்கி 16 வயதுடைய எம்.ஆர்.றிஜான் என்ற மாணவன் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும், யூகங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வது இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

மாணவனுக்கு மின்சாரம் தாக்கியதா அல்லது மாணவனை வேறு யாராவது தாக்கினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த மேற்படி றிஜான் எனும் மாணவன் புதிய காத்தான்குடி அல் அமீன் வீதியில் வசித்து வருகின்றார்.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் 10ம் ஆண்டில் கல்வி கற்று வரும் இவர் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாகும்.

Kattankudy-boy-burn-by-electricஇவருக்கு பாடசாலை விடுமுறை என்பதால் இவர் தனது தந்தையின் மிக நெருக்கமுடைய நண்பரின் ரெலிகொம் வீதியிலுள்ள பிடவைக்கடையில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த பிடவைக் கடையின் மேல் மாடியின் வீதிப்பக்கமாக உயர் மின் கடத்தி கம்பி (33000 வோர்ல்டேஜ்) இணைப்புள்ளது.

இதனால் இந்த மேல்மாடிப்பக்கம் இந்த மாணவனைச் செல்லவேண்டாம் என இந்தக் கடை முதலாளியினாலும் அங்குள்ள கே.பி. எனப்படும் கணக்காளரினாலும் அறிவுறுத்தப்பட்டே வந்துள்ளார்.

ஏனெனில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் இளைஞர் ஒருவர் இதே கட்டிடத்தின் மேல்மாடியில் வைத்து மின்சார தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதால் இந்த மாணவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இந்த பிடவைக்கடை அமைந்துள்ள இந்தப் பகுதியில் தான், 1995ம் ஆண்டு மின்சாரத்தினால் பாரிய அனர்த்தம் ஒன்றும் இடம் பெற்றிருந்தது.

DSCN8986இந்த பகுதியிலுள்ள உயர் மின் கடத்தி கம்பி (33000 வோர்ல்டேஜ்) இணைப்பு அறுந்து விழுந்ததால் இந்தக் கடைக்கு முன்பகுதியிலுள்ள வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்ததுடன் அங்கிருந்த கோழி பண்ணையொன்றும் தீப்பிடித்து எரிந்து 100க்கு மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. அதே போன்று சில வீடுகளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 17.8.2016 புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தப் பிடவைக்கடையில் வேலைக்கமர்த்தப்பட்ட இந்த பாடசாலை மாணவன் மேல்மாடிக்கு சென்ற போது பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

DSCN8984இந்த மாணவன் அந்த கடையின் மேல் மாடிக்கு சென்ற போது அந்தக் கடையின் மேல் மாடியின் அருகில் செல்லும் மின்சாரம் தாக்கியதாகவும் அதனால் அவர் காயமடைந்துள்ளார் எனவும் சில செய்தி இணைய தளங்களும் ஒரு சில அச்சு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

இன்னும் சில செய்தி இணையதளங்கள் இந்த மாணவனை மின்சாரம் தாக்கவில்லை, இந்த மாணவன் மீது அசிட் வீசப்பட்டே படுகாயமடைந்துள்ளார், அசிட் வீசி இந்தக் கொடுமையை செய்தவர்கள் கண்டு பிடிக்கப்படல் வேண்டுமென செய்தி வெளியிட்டு இருந்தன.

அந்த வகையில் இந்த மாணவனுக்கு இடம் பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் நான்கு சாராரின் அறிக்கைள் முக்கியமானதாகும்.

1. காத்தான்குடி பொலிசாரின் அறிக்கை
2. இலங்கை மின்சார சபையின் அறிக்கை
3. இந்த மாணவரின் மருத்துவ வைத்திய அறிக்கை
4. சாட்சியங்கள்

இதனடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதரவுடன் நேற்று (24) புதன்கிழமையன்று தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மாணவரின் விபரம் தொடர்பில் விணவினேன்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வைத்தியசாலைக்கு சென்று மாணவரின் வைத்திய அறிக்கையை கோரியுள்ளதாகவும் மாணவரை பார்வையிட்டதுடன் மாணவரிடம் விடயங்களை கேட்டறிந்து கொண்டதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.

அத்துடன் தேவையேற்படின் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கொன்றை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளையும் அழைத்து வந்து குறித்த வர்த்தக நிலையத்தினையும் காண்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த மாணவனுக்கு அசிட் அல்லது ஏதோ ஒரு இரசாயண திரவம் வீசப்பட்டுள்ளதாகவும் இந்த மாணவன் தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அடிபடுகின்றதே என கேட்டதற்கு அவ்வாறு அந்த மாணவன் தாக்கப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் மின்சாரம் தாக்கும் சி.சி.ரி.வி. காணொளி உள்ளது எனவும் அதை தான் பார்த்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவர் தொடர்பான மருத்து அறிக்கை கிடைத்தவுடன் மேலும் விசாரணையை துரிதப்படுத்த முடியும் எனவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

DSCN8989இதையடுத்து இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி பிராந்திய மின் அத்தியட்சகர் எம்.நௌபர் அவர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்ட போது உங்களை தவிர யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என தெரிவித்த அவர் நேற்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் உரிய கடைக்கு சென்று குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன் விசாரணைகளிலும் ஈடுபட்டார்.

இதன் போது குறித்த மாணவரை மின்சாரம் தாக்கியமைக்கான சில சான்றுகள் அங்கு காணப்படுவதாகவும் காத்தான்குடி பிராந்திய மின் அத்தியட்சகர் எம்.நௌபர் தெரிவித்தார்.

மாணவர் ஈரத்துடன் அந்த இடத்திற்கு சென்றிருக்க வேண்டும். அல்லது கம்பியில் படக் கூடியவாறு மாணவர் உமிழ்ந்திருக்க வேண்டும். இவ்வாறானவற்றினாலும் மாணவரை மின்சாரம் தாக்கியிருக்க கூடும் என்றும் தெரிவித்தார்.

DSCN8973மின்சாரம் தாக்கும் ஒருவருக்கு அது கால் பாதத்திலிருந்து தாக்க ஆரம்பிக்கும், காலில் காயம் ஏற்படும், கால் பாதங்கள் பாதிக்கும் என்று தெரிவித்த அவர், அவ்விடத்தில் சில நெருப்பு பொரிகள் பட்ட அடையாளங்களையும் கால் பாதம் பொசுங்கிய இடத்தினையும் பார்வையிட்டார்.

அவ்விடத்திலுள்ள மின் கம்பியில் சிறிய பொசுங்கியுள்ள அடையாளம் ஒன்றையும் காண்பித்து இது மின்சாரத்தாக்கத்திற்கான அடையாளம் எனவும் குறிப்பிட்டார்.

மின்சாரம் தாக்கும் ஒருவருக்கு யாரோ ஒருவர் தாக்குவது போன்ற உணர்வே ஏற்படும் எனவும் தெரிவித்த மின் அத்தியட்சகர், தொடர்ந்தும் தான் விசாரணை செய்வதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து குறித்த கடையிலிருந்தவர்களையும் விசாரணை செய்தார்.

பின்னர் நேற்று மதியம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டுள்ள மாணவரை சந்தித்து சில விடயங்களை கேட்டறிந்து கொண்டேன்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர் கருத்து தெரிவிக்கையில், தனது தோலில் கம்பு ஒன்றினால் தாக்குவது போன்றிருந்தது. நான் மயக்க முற்று கீழே விழுந்து விட்டேன். அம்பியுலன்ஸ் வண்டியில் வரும் போது எனக்கு சுய நினைவு வந்தது. என்னை யாரோ தாக்கியருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

உங்களை அந்த மேல் மாடிக்கு செல்ல வேண்டாம் என்று கடையில் உள்ளவர்கள் கூறினார்களா எனக் கேட்டதற்கு, “ஆம் மேல் மாடிக்கு செல்ல வேண்டாம் என நான் கடையில் சேர்ந்து இரண்டு மூன்று தினங்களில் கூறினார்கள்” என்றும் தெரிவித்தார்.

இவரின் மருத்துவ அறிக்கையை பெற முயற்சித்த போது இன்னும் ஓரிரு தினங்களில் கிடைக்கும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

DSCN8974குறித்த பாதிக்கப்பட்டுள்ள மாணவரின் தாய் கருத்து தெரிவிக்கும் போது, “எனது மகனுக்கு யாரோ அநியாயம் செய்துள்ளார்கள். இந்த சம்பவம் இடம் பெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் எனது அயலிலுள்ள ஒருவருடன் ஏற்பட்ட தகராறின் போது எனது மகனுக்கு அந்த அயல் வீட்டுப் பெண் ஒருவர் திட்டியதையும் நினைவு கூர்ந்து யாரையும் வைத்து எனது மகனை தாக்கியிருக்க கூடும்” என தெரிவித்தார்.

கடை உரிமையாளர் தெரிவிக்கையில், “மின்சாரம் தாக்கியதற்கான தெளிவான ஆதாரம் சி.சி.ரி.வி. காணொளியாகும். மின்சாரம் தாக்குவது தெளிவாக தெரிகின்றது.

மாணவரை தாக்குவதற்கு அங்கு சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறு மேல் மாடிக்கு சென்று மாணவரை தாக்கியிருந்தால் அது சி.சி.ரி.வி. காணொளியில் தெரிந்திருக்கும்” என்றும் கூறினார்.

கடையிலுள்ள கணக்காளரிடம் கேட்ட போது, நடந்த விடயத்தை விபரித்தார். உங்கள் மீதும் சந்தேகம் எற்பட்டுள்ளதே எனக் கேட்டதற்கு, “எனக்கு சரியான கவலை நான் பல தடவைகள் அவரை மேலே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளேன். அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடப்பதை கண்டு நான் உடனே முதலாளிக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினேன். அயல் வீட்டாரின் உதவியையும் நாடினேன். எனக்கு அவருக்கும் எந்தவொரு முரண்பாடும் கிடையாது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

கடையின் அயல் வீட்டுக்காரரிடம் இது தொடர்பில் கேட்ட போது, “குறித்த தினத்தன்று ஒரு சுமார் 7.30 மணியிருக்கும் கடையின் மேல் மாடிக்கு அருகிலுள்ள மின்சார கம்பியிலிருந்து ஒரு மின் வெட்டுவது போன்று ஒரு வெளிச்சம் தெரிந்தது. அதே போன்று மின்கம்பியிருந்து ஒரு சத்தமும் கேட்டது” என தெரிவித்தனர்.

பின்னர் சில நிமிடங்களில் எமது வீட்டுக்கு வந்த கடை கணக்காளர் உடனே வாருங்கள் பொடியனை கரண் அடித்து விட்டது. வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவுங்கள் என்றார். நான் தான் அவ்விடத்திற்கு முதலில் சென்றேன்” என்றார் அயல் வீட்டுக்காரன்.

இதில் சந்தேகப்படுவதற்கு எதுவுமில்லை. மின்சாரமே தாக்கியுள்ளது எனவும் வேறு யாரும் மாணவரை தாக்கும் நிலை அங்கு இல்லை எனவும் அயல் வீட்டுக்காரர் அடித்துக் கூறினார்.

குறித்த நேரத்தில் மின்சாரக் கம்பியிலிருந்து மின்பொறி பறந்ததும் மின் கம்பியில் சப்தம் கேட்டதும் உண்மைதானா எனக் கேட்டதற்கு எங்களது வீட்டிலிருக்கும் போதே அது தெளிவாக விளங்கியது என்றும் அயலவர் கூறினார்.

அல்லாஹ்மீது ஆணையாக நீங்கள் சொல்வது உண்மையா எனக் கேட்டதற்கு “ஆம்” என்று கூறியதுடன் 1995ம் ஆண்டு மின்சாரத்தினால் பாதிக்கப்பட்ட எமக்கு இதுவரை எந்த நஷ்ட ஈடும் கிடைக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

குறித்த கடைக்கு பக்கத்திலுள்ள இரும்புக்கடை உரிமையாளரிடம் கேட்ட போது, “நான் அந்த நேரம் இருக்கவில்லை. எனினும் என்னிடத்தில் அயலவர்கள் விபரத்தினை தெரிவித்தனர்” என்றார்.

இந்த விடயம் தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் மருத்து அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை வைத்து விசாரணையை மேலும் தொடங்குவதா? அல்லது மின்சாரத் தாக்குதலா? என திட்டவட்டமாக பொலிசார் முடிவு செய்வார்கள்.

காயங்களுக்குள்ளாகியுள்ள மாணவரின் வலியும் வேதனையையும் பார்க்கும் போது மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. வறிய குடும்பம், தந்தை வெளிநாடு சென்று ஒரு மாதமேயாகும் அவருக்கும் அங்கு கஷ்டமான நிலையாகும்.

இந்த நிலையில் இந்த குடும்பத்தின் வேதனையும் கவலையும் அவர்களின் முகங்களில் தெளிவாக தெரிகின்றது.

குறித்த பாடசாலை மாணவரை கடைக்கு அனுப்பியது மாணவரின் பெற்றோரின் பிழையாகும், அதே போன்று மாணவரை வேலைக்கமர்த்தியது கடை முதலாளியின் பிழையாகும்.

கடையின் மேல் மாடியினால் செல்லும் உயர் மின் கம்பிக்கு இவ்வளவு நாளாக பாதுகாப்பு கவசம் போடாமல் இருப்பது கடை உரிமையாளரின் பிழையாகும்.

இவ்வாறு இது தொடர்பில் பலர் மீது குற்றங்களையும் அவதானங்களையும் செலுத்த முடியும்.

எது எப்படி இருந்த போதிலும், இந்த பாதிக்கப்பட்டுள்ள மாணவருக்கு சுகம் கிடைக்கவும் இதன் உண்மை வெளிவரவும் பிராத்திப்போமாக.

எம்.எஸ்.எம்.நூர்தீன்,
ஊடகவியலாளர்

முன்னர் நாம் எமது இணையதளத்தில் வெளியிட்டிருந்த இது தொடர்பான தகவல்கள்.

1. காத்தான்குடியில் மின்சாரம் தாக்கியதில் றிஜான் எனும் சிறுவன் படுகாயம்

2. (CCTV Video) சிறுவன் றிஜானுக்கு மின்சாரம் தாக்கியதா? அல்லது அசிட் வீசப்பட்டதா? காணொளியைப் பாருங்கள்

மேல்மாடியில் எடுக்கப்பட்ட கத்தரிக்கப்படாத முழுமையான சி.சி.ரி.வி. காணொளி

DSCN8985 DSCN8983 DSCN8979 DSCN8988 DSCN8982 DSCN8984 DSCN8975

LEAVE A REPLY