ஒற்றுமையை சீர்குழைக்க பிரதி அமைச்சர் பைசல் காசீம் முயற்சி: கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர்

0
220

(எம்.ஜே.எம்.சஜீத்)

Uthuma Lebbeஅம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரதேசவாத உணர்வுகளைத் தூண்டி தனது அரசியல் இருப்பை தக்கவைக்க பிரதி அமைச்சர் பைசல் காசீம் முயற்;;;சிப்பதாக கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் அமைக்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையும் தடையாக இருந்தார்கள் என பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்து வரும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1998ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்வி அலுவலக, நிருவாக மறுசீரமைப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருந்த அனைத்து பிரதேச கல்வி அலுவலகங்களும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டது. எனினும் பொத்துவில், கிண்ணியா, கோமரங்கடவெல ஆகிய பிரதேச கல்வி அலுவலகங்கள் அவ்வாறே தொடர்ந்தும் இயங்க வேண்டுமென வட கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் கிண்ணியா, கோமரங்கடவெல கல்வி அலுவலகங்கள் வலயக் கல்வி அலுவலகங்களாக தரமுயர்த்தப்பட்டன. அப்போது பொத்துவில் பிரதேச கல்வி அலுவலகம் வலயக்கல்வி அலுவலகமாக தரமுயர்த்தப்படாமல் அநியாயமிழைக்கப்பட்டது. இதன் காரணமாக பொத்துவில் பிரதேச மக்கள் தங்களுக்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்த எம்.ஏ.அப்துல் மஜீத் 2011ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையில் பொத்துவில் பிரதேசத்தில் தனிக்கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டுமென தனிநபர் பிரேரனை ஒன்றை சமர்ப்பித்தார். அப்பிரேரனை மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

2011.06.07ஆம் திகதி நடைபெற்ற பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தலைமையில் நடைபெற்ற போது பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்படவேண்டும் என்ற பிரேரனை கொண்டுவரப்பட்ட போது பொத்துவிலுக்கான தனிக் கல்வி வலயம் அமைப்பதற்கான அவசியத்தினை ஏற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா இதற்கான ஏகமானதான தீர்மானத்தினையும் வழங்கினார்.

கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான அங்கிகாரத்தினைப் பெறுவதற்கு பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் பாடசாலைகள், பொத்துவில் வலயத்துக்குள் உள்ளீர்க்கப்படுவதற்கு சம்மதம் தெரிவிக்காமல் தொடர்ந்தும் திருக்கோவில் கல்வி வலயத்தோடு இணைந்திருப்பதற்கான நிலைப்பாட்டில் இருந்தது. அத்தோடு பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்களப் பாடசாலைகளும் அம்பாரை வலயத்தோடு இணைந்திருப்பதற்கான நிலைப்பாட்டில் இருந்தன.

பேச்சுவார்த்தைகள் ஊடாக பொத்துவில் வலய நிருவாகத்தோடு பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள தமிழ், சிங்கள பாடசாலைகளை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வேளையில் 2011ஆம் ஆண்டு இரண்டு வாரங்களில் பொத்துவில் தனி கல்வி வலயத்தை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் பைசல் காசீம் அன்று தெரிவித்தார். இதனால் தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இடை நிறுத்தப்பட்டன.

2011.11.15ஆம் திகதி பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரிக்கும், பொத்துவில் மத்திய கல்லூரிக்கும் விஜயம் மேற்கொண்ட அப்போதைய கல்வி அமைச்சர் திரு.பந்துல குணவர்த்தன இரண்டு வாரங்களுக்குள் பொத்துவில் தனிக் கல்வி வலயம் அமைக்கப்படும் என பொத்துவில் மக்கள் மத்தியில் உறுதியளித்தார்.

பொத்துவில் பிரதேச கல்வி அபிவிருத்திக்கு மிகவும் அவசியமாக உப கல்வி வலயத்தை ஸ்தாபிக்க வேண்டுமென கிழக்கு மாகாண கல்வி அமைச்சராகயிருந்த திரு. விமல வீர திஸாநாயக்கவிடம் என்னால் வேண்டுகோள் விடுத்ததையடுத்து அவர் கிழக்கு மாகாண அமைச்சரவையில் (2014.07.15) விசேட அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து கிழக்கு மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியதனையடுத்து 2014.08.12ஆம் திகதியன்று முன்னாள் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு பொத்துவில் உப – கல்வி வலயத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர். இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உரையாற்றும் போது பொத்துவில் கல்வி வலயத்தினுடைய அவசியம் பற்றி மக்கள் பிரதிநிதிகள், பொத்துவில் பிரதேச கல்விமான்கள் மத்தியில் வெளிப்படையாகவே தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக மஹிந்த அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சுப் பதவிகளைப் பெற்று மஹிந்த ராஜபக்ஷவை மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு அங்கீகாரம் வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் வாக்குறுதியளிக்கப்பட்ட பொத்துவிலுக்கான தனிக்கல்வி வலயத்தை வழங்க முடியாத தங்களின் பலவீனத்தை மறைப்பதற்காக பொத்துவில் பிரதேச மக்களை நேசிக்கும் எங்களை நோக்கி வீண்பழி சுமத்துவது குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது.

இதேவேளை 2015ம் ஆண்டு முன்னாள் கல்வி அமைச்சர் திரு.விமலவீர திஸாநாயக்க கிழக்கு மாகாண சபையில் பொத்துவில் உப வலயம் தனிக் கல்வி வலயமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என பிரேரனை முன்வைத்தார் அத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

2016ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் றஸாக்(ஜவாத்)இனால் பொத்துவில் தனிக்கல்வி வலயம் தொடர்பான பிரேரனை கொண்டு வரப்பட்டு ஏகமானதாக சபையில் மீண்டும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதே வேளை பொத்துவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும், பொத்துவில் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான தனி வலயக் கல்வி பணிமனை அமைப்பதற்கான கோரிக்கையினை நிறைவேற்றித் தருமாறும் பொத்துவில் பிரதேச மக்கள் பிரதி நிதிகளும், கல்விமான்களும் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண முதலமைச்சரான ஜனாப்.ஹாபீஸ் நசீர் அவர்களை சென்ற 2015.12.30ம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் சந்தித்து அவசர வேண்டுகோள் விடுத்ததாகவும் முதலமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் கடந்த 06 மாத காலமாக மேற்கொள்ளப்படவில்லை எனவும்; பொத்துவில் பிரதேச மக்கள் பிரதிநிதிகளும், கல்விமான்களும் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.

இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனான்டோவை தொடர்பு கொண்டு பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள 20 பாடசாலைகளிலும் நீண்ட காலமாக காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறைகள் தொடர்பாகவும், பொத்துவில் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான கோரிக்கைகள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், பொத்துவில் பிரதேச கல்விமான்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுனரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

இதற்கமைய சென்ற 29.06.2016ம் திகதி கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும், பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைவது தொடர்பான கோரிக்கை தொடர்பாகவும் விசேட கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டு பொத்துவில் பிரதேச பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கல்முனை பிரதேசத்தில் மேலதிகமாக இருக்கின்ற ஆசிரியர்களில் 46 ஆசிரியர்களை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கல்விக் கோட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்வது எனவும் அக்கரைப்பற்று , அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளில் இருந்து 46 ஆசிரியர்களை பொத்துவில் உப வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 01ம் திகதிக்கு முதல் இடமாற்றம் செய்வது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைப்பது தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு பொத்துவில் தனிக் கல்வி வலயம் அமைப்பது தொடர்பாகவும், கல்முனை மத்திய கல்வி வலயம் அமைப்பது தொடர்பான விசேட அமைச்சரவை பத்திரங்களை கிழக்கு மாகாண அமைச்சரவையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபானி சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பொத்துவிலுக்கான தனியான கல்வி வயலம் அமைப்பதற்கான அனுமதி கிடைத்ததும் ஜனாதிபதி, மத்திய கல்வி அமைச்சருடன் தொடர்பு கொண்டு பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் இக்கூட்டத்தில் தெரிவித்தேன். கிழக்கு மாகாண சபையிலும், பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களிலும் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தினை அமைப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளோம். கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபானியை நான் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றேன்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற விசேட அமர்வின் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானியை சந்தித்த வேளையில் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் அமைப்பது தொடர்பான விசேட அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தேன். மிக விரைவில் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.

ஒவ்வொரு தேர்தல்களிலும் பிரதேசவாத உணர்வுகளையும், இனவாத உணர்வுகளையும் மூலதனமாகப் பயன்படுத்தி பொத்துவில் பிரதேச மக்களின் வாக்குகளைச் சூறையாடி அரசியல் அதிகாரத்தை பெற்றும் அப்பிரதேச மக்களின் அவசிய நலன்களில் அக்கரை செலுத்தாது தனது இயலாமையை மூடி மறைப்பதற்கு என்னையும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவையும் பொத்துவில் கல்வி வலயத்தில் தொடர்புபடுத்தி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் பிரதி அமைச்சர் பைசல் காசீமை பொத்துவில் மக்கள் நன்கு அறிவார்கள்;.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கும் எனக்கும் அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் பொத்துவில் பிரதேசத்தை எங்களின் பிரதேசமாக நினைத்து அவர்களின் குரலாகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து பணியாற்றியுள்ளோம் என்பதனை பொத்துவில் மக்கள் நன்கறிந்தவர்களாக இருக்கின்றார்கள்.

எங்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் போதெல்லாம் பொத்துவில் மக்களின் நலனில் அக்கரை செலுத்தி செயல்படுவோம். பொத்துவில் மக்களை ஏமாற்றி தேர்தலில் வாக்குளைப் பெற்றுவிட்டு, பொத்துவில் மக்களுக்கு ஒரு முகமும், ஏனைய பிரதேசங்களுக்கு சென்று வேறொரு முகமும் காட்டும் அரசியல்வாதிகளை அண்மைக்காலமாக பொத்துவில் மக்கள் நன்கு அடையாளம் கண்டுவருகின்றனர்.

என்றும் வெளிப்படையாகவே உண்மைக்கு உண்மையாக பொத்துவில் மக்களை நேசித்து செயற்படும் எமது செயற்பாடுகள் தொடரும். இப்பிரதேச மக்களின் வாக்குகளை எதிர்பார்த்து நாம் ஒரு போதும் இப்பிரதேச மக்களுக்கு பணிபுரியவில்லை. இம்மக்களுக்கு நாங்கள் புரியும் நல்ல பணிகளுக்கு இறைவனின் அருள் எங்களுக்கு என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எப்போதும் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY