சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்

0
97

201608230447003337_Former-Singapore-President-dead-at-92_SECVPFஇந்திய வம்சாவளியை சேர்ந்தவரான சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார். சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவர் பக்கவாதம் ஏற்பட்டு, கடந்த மாதம் 31-ந்தேதி, சிங்கப்பூர் ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியிலேயே உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு சிங்கப்பூர் பிரதமரும், அவருடைய மந்திரிசபை சகாக்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். நாதன் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பது பற்றியும், இறுதிச்சடங்குகள் பற்றியும் பின்னர் தெரிவிக்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறைந்த எஸ்.ஆர்.நாதன், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவர், 1999-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுவரை சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தார். 2 தடவை அதிபராக இருந்துள்ளார். நீண்ட காலம் அதிபராக இருந்தவரும் அவர்தான். மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிக்க வாய்ப்புகள் வந்த போதிலும், ‘மீண்டும் அதிபர் பதவியை கோரமாட்டேன்’ என்று அறிவித்து விட்டு, 2011-ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து விலகினார். பின்னர், தென்கிழக்கு ஆசிய கல்வி நிறுவனம், சிங்கப்பூர் மேலாண்மை பல் கலைக்கழகம் ஆகியவற்றில் கவுரவ பதவிகளை வகித்தார்.

சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூவுக்கு நெருக்கமாக இருந்தவர், எஸ்.ஆர்.நாதன். அதிபர் ஆவதற்கு முன்பு, அரசு உயர் அதிகாரியாக பணியாற்றினார். சிவில் சர்வீசஸ் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பாதுகாப்பு, உளவு, வெளியுறவு போன்ற துறைகளிலும் பணியாற்றி உள்ளார். 1988-ம் ஆண்டு, மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதராகவும், 1990-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டுவரை, அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதராகவும் பணியாற்றி உள்ளார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் இருந்துள்ளார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது, 2012-ம் ஆண்டு, நாதனுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவருக்கு மனைவி, மகன், மகள் மற்றும் 3 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

LEAVE A REPLY