ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் நடைபெறும் வகுப்பில் மாற்றம் செய்யப்படுவது அவசியமாகும்

0
197

exam studentsஇம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு எனது வாழ்த்தை தெரிவிப்பதுடன் இந்தப் பரீட்சையில் அனைவரும் சித்தியடைந்து தங்களது எதிர்கால கல்வியில் ஒளிமயமான நிலைமையை அடைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையானது மாணவர்களுக்கு கல்வி ரீதியாக பல்வேறு நன்மைகளைப் பயப்பதாக அமைந்திருந்தாலும் அந்தப் பரீட்சை நடைபெறும் வகுப்பில் மாற்றம் செய்யப்படுவது அவசியமாகும். இதன் மூலமே சிறுவர்களின் மனவலிமையை வளர்க்கக் கூடியதாகவிருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.ஸி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐந்தாம் ஆண்டில் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறுவதால் சிறிய பராயத்தினராக காணப்படும் மாணவர்கள் உள ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இந்தப் பரீட்சையானது அவர்களது வயது மற்றும் கற்கும் வகுப்பு ஆகியனவற்றுக்கு மேலான ஒரு சுமையாகவே காணப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் உள ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

தங்களது தரத்துக்கு மேலான ஒரு சுமையாகவும் இதனை மாணவர்கள் கருதுகின்றனர். ஒரு வருடத்தில் மூன்று பரீட்சைகளுடன் நான்காவது பரீட்சையாக இதற்கு தோற்ற வேண்டியுள்ளதால் அவர்களுக்கு மனோ பலம் குன்றி தளர்வும் ஏற்படுகிறது. அத்துடன் அது கட்டாயமாக திணிக்கப்பட்ட ஓர் அழுத்தமாகவும் அவர்களால் உணரப்படுகிறது.

இவ்வாறான நிலைமை ஒரு பிள்ளைக்கு ஏற்படும் போது அந்தப் பிள்ளையின் பெற்றோரும் அதனைத் தாங்கிக் கொள்ளும் சக்தியற்றவர்களாகவே உள்ளனர். மேலும் ஆரம்பக் கல்விப் படித்தரத்தில் இவ்வாறான அழுத்தமான மன நிலைமைகள் பிள்ளைகளுக்கு ஏற்படுவதன் மூலம் அவர்கள் எதிர்காலக் கல்வி மீதான ஆர்வமும் அக்கறையும் இல்லாமல் செய்யப்படும் சாத்தியங்களும் அதிகம் காணப்படுகின்றன.

எனவே, இவற்றினைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் ஆண்டில் புலமைப் பரிசில் பரீட்சையை நடத்தாமல் 7 ஆம் அல்லது 8 ஆம் வகுப்புகளில் அதனை நடத்துவதன் மூலம் இவ்வாறான நிலைமைகளிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்க முடியும். எனவே, கல்வியமைச்சு இந்த விடயத்தை கருத்தில் கொண்டு மாற்றங்களை முன்னெடுப்பது பொருத்தமாக அமையும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY