உள்ளுராட்சி மன்றங்களை தரமுயர்த்த ஆணைக்குழு; முஸ்லிம் சமூகம் ஆர்வம் காட்ட வேண்டும்! NFGG கேரிக்கை

0
200

(NFGG ஊடகப்பிரிவு)

NFGG Logo 1“உள்ளுராட்சி மன்றங்களை தரமுயர்த்துவதற்கான நடை முறைகளை உருவாக்குவதற் கான ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொது மக்களின் ஆலோசனைகளும் கோரப்பட்டுளன. எனவே, முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமது ஆலோசனைகளை அடுத்த இரு வாரங்களுக்குள் அனுப்பி வைப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் ” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கை மூலமாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நமது நாட்டில் உள்ளுராட்சி மன்றங்கள் பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை என்ற மூன்று தரங்களில் காணப்படுகின்றன. காலத்திற்குக் காலம் தரமுயர்த்தல்களும் புதிய உள்ளுராட்சி மன்றங்களின் உருவாக்கமும் நடை பெற்றே வருகின்றன. இருப்பினும் இதற்கான முறையான நிபந்தனைகளோ அல்லது நடை முறைகளோ இதுவரை பின்பற்றப்படவில்லை.

இந்நிலைமையினைக் கருத்தில் கொண்டு புதிய உள்ளுராட்சி மன்றங்களின் உருவாக்கமும் தரமுயர்த்தல்களும் முறையாக மேற் கொள்ளப்படுவதனை உறுதி செய்வதற்கான நிபந்தனைகளையும் நடை முறைகளையும் உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.

இதில் முதற் கட்டமாக 12 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இவ்விடயம் தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயங்களும் ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளன.

அவ்வாறான அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான கால எல்லை கடந்த 15ம் திகதியோடு நிறைவடைவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றிய மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு NFGG பிரதிநிதிகள் உள்ளுராட்சி அமைச்சின் சட்ட அதிகாரியோடு சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இச்சந்திப்பின் போது NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது வரை பொதுமக்களிடமிருந்து இவ்விடயம் தொடர்பில் போதுமான ஆலோசனைகள் கிடைக்கவில்லை என்றும் , இன்னும் சில நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அந்த சட்ட அதிகரி தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் உள்ளுராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் மற்றும் புதிய உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்குதல் தொடர்பிலும் உள்ள தேவைகள் பரவலாக உணரப்பட்டு வருகிறது. இதுவரை காலமும் அவ்வப்போது இவ்வாறான விடயங்கள் அரசியல் வாதிகளினால் எழுந்தமானமாகவே மேற் கொள்ளப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் இவ்விடயத்தை முறையாகக் கையாள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்தக்குழு நியமனமும் அபிப்பிராய கோரலும் அமைந்துள்ளன.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் சிவில் சமூக மற்றும் அரசியல் பிரதிநிதிகள் அனைவரும் இவ்விடயம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். நமது சமூகத்தின் தேவைகளையும், உள்வாங்கி உள்ளுராட்சி மன்றங்களின் தரமுயர்த்தல் தொடர்பான ஒழுங்கு முறைகளை அமைத்துக் கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பான ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கு NFGGயும் தாயாராகி வருகின்றது.

சிவில் சமூக பிரதிநிதிகளும் துறை சார்ந்தவர்களும் தமது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எம்மோடும் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு 077 3868126″

LEAVE A REPLY