ஐக்கிய நாடுகள் சபையினால் கௌரவிக்கப்பட்ட சவூதி மாணவி

0
337

ss(எம்.ஐ.அப்துல் நஸார்)

பதினெட்டு வயதிற்கும் குறைந்த மாணவியொருவர் ஐக்கிய நாடுகள் சபையினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

85 நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் இளைஞர், யுவதிகள் பங்குபற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் மன்ற கூட்டத் தொடரிலேயே றஸான் அல்-அகீல் என்ற மாணவிக்கு ‘நாட்டின் சிறந்த பிரதிநிதி’ என்ற கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

‘எண்ணமொன்றுடன் பணி ஊக்கத்தை உருவாக்குதல்’ மற்றும் ‘நாம் நாளைய தலைவர்கள் மாத்திரமல்ல இன்றும் தலைவர்களே’ ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளைச் சமர்ப்பித்த பின்னர் அம் மாணவி கௌரவிக்கப்பட்டார்.

அனைத்து தடைகளையும் தாண்டி சவூதி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள 2030 தூர நோக்கினை அடிப்படையாக வைத்து இளைஞர்களின் பார்வையில் உலகம் என்பது பற்றி ஐக்கிய நாடுகள் சபை மேடையில் றஸான் அல்-அகீல் உரை நிகழ்த்தினார்.

அந்த அமர்வில் தான் பங்கேற்றபோது தலைமைத்துவம் மற்றும் சமூக சேவையில் ஐக்கிய நாடுகள் சபையில் இளைஞர்களின் வகிபாகம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியதாக இணைய தளமொன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

இந்த அமர்வுகள் சமாதானமும் பாதுகாப்பும், பொருளாதார உறுதிப்பாடு, பூகோளம் வெப்பமடைதல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் தரமான கல்வியினை வழங்குதல் என்பன பற்றியதாக அமைந்திருந்தன.

ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் மன்றத்தின் குழுவொன்றினால் ஒரு வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் பெறுபேறாகவே தனக்கு இந்த விருதைப் பொறும் சந்தர்ப்பம் கிடைத்தாக றஸான் அல்-அகீல் தெரிவித்தார்.

அவர் இவ் விருதுக்கு தெரிவு செய்யப்படுவதற்கு, வினாக்கொத்துக்கு விடையளித்தல், தனிப்பட்ட நேர்காணலும் அமர்வில் பங்குபற்றுதலை கண்காணித்தலும் மற்றும் உலகம் தொடர்பிலும் சவூதி அரசாங்கம் தொடர்பிலும் அந்த மாணவியால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் மதிப்பீடு செய்யப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபை, அரசாங்கம், தனியார் மற்றும் சவூதி அரசாங்கத்தின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பில் குறித்த சவூதி மாணவி நம்பிக்கை கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை வறுமை ஒழிப்பு, பட்டினி, அனைவருக்கும் கல்வி, ஆண் பெண் சமத்துவம் மற்றும் பூகோளம் வெப்பமடைதலைக் கட்டுப்படுத்தல் போன்ற இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கு முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY