(Aarticle) நிலைமாறு கால நீதி

0
1048

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC08104நிலைமாறு கால நீதி என்பது இரண்டு சொற்களை கொண்டுள்ளது. அதாவது நிலைமாறும் காலம் மற்றது நீதி. இதன்படி நிலைமாறும் காலம் என்பது ஒரு கால கட்டத்திலிருந்து இன்னுமொரு கால கட்டத்திற்கு மாறும் நிலையைக் குறிக்கும்.

நீதி என்பது நாடுகளில் பிரகடனம் செய்யப்பட்டு அமுலாக்கப்படும் நீதியை குறிப்பதாகும்.

பிடுவதாகும். நீல் ஜே க்ரிட்ஸ் (Neil J Kritz) என்ற ஆய்வாளர் 1995 இல் எழுதிய (How Emerging Democracies Reckon with Former Regimes,) ‘எழுகின்ற ஜனநாயகங்கள் முன்னாள் ஆட்சிகளை எவ்வாறு கணிக்கின்றன’ என்ற தொகுப்பு நூலுக்கு (Transitional Justice) நிலைமாறு கால நீதி எனப் பெயரிட்டார்.

இந் நூலில் புதிதாக எழும் ஜனாநாயக விழுமியங்கள் எவ்வாறு பழைய ஒடுக்குமுறை அரசுகளுடன் ஒன்றிணைந்து செல்ல முடியும் என்பது கலந்துரையாடப்படுகின்றது.

சுமார் பத்தாண்டுகளின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் 2004ஆம் ஆண்டு வெளியிட்ட மோதல் மற்றும் மோதலுக்கு பிற்பட்ட சமுதாயங்களில் சட்ட ஆட்சியும் நிலைமாறு கால நீதியும் (The rule of law and transitional justice in conflict and post-conflict societies) என்ற அறிக்கையில் நிலைமாறு கால நீதியைப் பற்றி பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.

நல்லிணக்கம், நீதியை நிலைநிறுத்தல், பொறுப்புக் கூறல் என்பவற்றை உறுதி செய்ய கடந்த காலத்தில் நடைபெற்ற பாரிய உரிமை மீறல்களைக் கண்டறியும் பொறிமுறையும், செல்நெறியுமே நிலைமாறுகால நீதி எனக் கூறியுள்ளார்.

இதன்படி நிலைமாறு கால நீதி என்பது புதிதாக உருவாக்கப்பட்ட நீதி முறைமையொன்றல்ல, மாறாக கடந்த காலத்தில் நடைபெற்ற பாரிய உரிமை மீறல்களைக் கண்டறியும் பொறிமுறையும், செல்நெறியுமாகும்.

அதாவது மனித உரிமை மீறப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதும் எதிர்காலத்தில் அவ்வாறான மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சட்ட ஆட்சியை நிலைநிறுத்தும் முயற்சியுமாகும்.

உலக நாடுகள் அனைத்திலும் அந்தந்த நாடுகளின் வழக்கிலிருந்த சமூக வழக்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சமவாயங்களுக்கு அமைவாக சட்டங்களை உருவாக்கிக்கொண்டுள்ளன.

DSC08120இதேவேளை நாட்டின் பிரதான நீதி நூலாக அரசியலமைப்பை உருவாக்கி அமுல்படுத்துகின்றன.

இதன்படி அரசியலமைப்பானது நாட்டின் அனைத்து பிரஜைகளும் பாராபட்சமற்ற ரீதியில் உரிமைகளை அனுபவிப்பதை உத்தரவாதம் செய்கின்றது.

ஆனால், நடைமுறையில் நீதியும் சட்டமும் முறையாக பின்பற்றப்படாமையினாலும் மற்றும் சட்டத்தை அமுல்படுத்துகையில் பாரபட்சம் காட்டுகின்றமையினாலும், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் நீதி சாதகமாக அமைதல் போன்ற காரணங்களாலும் நாட்டினுள் இன, வர்க்க, கலாசார, மத முரண்பாடுகள் உருவாகி அவை மோதல்களுக்கும் வித்திடுகின்றன.

இவ்வாறு உருவாகும் கலகங்கள் பல வருடங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகையில் யுத்தத்தில் பங்குபற்றிய பிரிவினர் யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்ற நிலையை உணர்ந்து சமாதானத்தை உருவாக்க முனைவர்.

அத்தறுவாயில், மீண்டும் ஒரு மோதல் நிலை உருவாகாதிருக்கும் வகையில் யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டோருக்கு உண்மையை தெரிந்துக்கொள்ள வாய்ப்பளித்தல், பாதிப்புற்றோருக்கு இழப்பீடு வழங்கல், யுத்தக் குற்றம் புரிந்தோருக்கு தண்டனை வழங்கல், மற்றும் நாட்டின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவருதல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவர். இ;ப்பொறிமுறையையே நிலைமாறு கால நீதியென்கின்றனர்.

இந் நிலைமாறு கால நீதிப் பொறிமுறைமையை நடைமுறைப்படுத்துகையில் உண்மையைக் கண்டறிதல், வழக்குத் தொடுத்தல், இழப்பீடு வழங்கல் மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் எனும் நான்கு விடயத்தின் அடிப்படையில் நிலைமாறு கால நீதி முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே மனித உரிமைகளை பேணி நிரந்தர சமாதான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஐ.நா சபை கூறுகின்றது. இவை பற்றி மேலும் விளக்குகையில்

(Truth Seeking) உண்மையைக் கண்டறிதல்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாம் முகம் கொடுத்த அனைத்து மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள் மற்றும் காணாமல்; போனோரைப் பற்றிய உண்மையைக் கண்டறிய வாய்ப்பளித்தல்.

வழக்குத் தொடுத்தல் (Prosecution)

யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாரிய மனித உரிமை மீறல் குற்றங்களான மனிதப் படுகொலைகள், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, காணாமல் போதல் உட்பட யுத்தக் குற்றம் புரிந்தவர்களுக்கெதிராக விசாரித்து தண்டனை வழங்குதல்.

இழப்பீடு/பரிகாரம் (Reparation)

யுத்தத்தின் போது பொதுமக்கள் அடைந்த உயிர், உடைமை, வாழ்வாதார இழப்புக்கள், உளவியல் பாதிப்புக்கள் என்பனவற்றை அடையாளம் கண்டு அவற்றிற்கு இழப்பீடு வழங்கல். இவ்விழப்பீடுகள் நிதியாகவும், பொருளாகவும், உளவியல் ரீதியானதாகவும் அமையலாம்.

கட்டமைப்பு மாற்றம் (Institution Changes)

நாட்டில் காணப்படும் அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் கட்டமைப்பு போன்றவற்றினை மறுசீலனைக்கு உட்படுத்தி யுத்தத்திற்கு காரணமாயிருந்தவற்றை அடையாளம் கண்டு நாட்டின் அனைத்து இனங்கள் மற்றும் பிரஜைகளின் மனித உரிமைகளை உத்தரவாதம் செய்யும் வகையில் கட்டமைப்பு மாற்றத்தை உருவாக்கல்.

இச்செயற்பாடுகளே நிலைமாறு கால நீதி என்பதாகும். இச்செயற்பாடானது யுத்தம் நடைபெறும் மற்றும் யுத்தம் முடிவுற்ற நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் பின்புலத்தில் யுத்தம் முடிவடைந்த நம் நாட்டின் செயற்பாடுகளை நோக்குவோமாயின் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. சபை நிலைமாறு கால நீதிச் செயற்பாட்டினை முன்னெடுக்கும்படி நிர்ப்பந்தித்தது.

யுத்த வெற்றியில் இறுமாப்படைந்திருந்த முன்னைய அரசாங்கம் ஐ.நா. சபையின் அழுத்தம் காரணமாக கற்ற பாடங்கள் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை உருவாக்கியது.

இதுவே நிலைமாறு கால நீதிச் செயற்பாட்டின் முதல் நடவடிக்கையாக அமைந்தது. இவ்வாணைக்குழு காணாமற் போனோரை கண்டறிதல், போர்க்குற்றமிழைத்தோருக்கு தண்டனை அளித்தல், நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ளோரை விசாரித்தல், சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீட்டை அகற்றல் மற்றம் இராணுவ மயமாக்கலை நிறுத்தல், பொதுச் சேவை, காவற்துறை மற்றும் நீதித்துறை அரசியல் மயப்படுத்தலை நிறுத்தல், மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் அவசியம் என்பதை விதந்துரைத்தது.

காணமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழு

கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் விதந்துரைப்பின் விளைவாகவும் ஐ.நா. அழுத்தம் காரணமாக மெக்ஸ்வெல் பரணகமவின் தலைமையில் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதுடன் அவ்வாணைக்குழு விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

ஆட்சி மாற்றமும் நிலை மாறு கால நீதி முன்னெடுப்புகளும்

DSC08106இந்த முன்னெடுப்புகளுக்கு மத்தியில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இலங்கையில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஓகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் நிலைமாறு கால நீதிக்கான புதிய முன்னெடுப்புகள் தொடங்கின.

புதிய ஜனாதிபதி பதவியேற்ற நூறு நாட்களுக்குள் ஜனாபதியின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் அரசியலமைப்பிற்கு 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டதுடன், பொதுத்தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசியலமைப்பிற்கு மக்கள் கருத்தறியும் வகையில் கருத்தறியும் குழு உருவாக்கப்பட்டு கருத்துக் கோரல் மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக மக்களின் கருத்து அறியும் குழு நியமிக்கப்பட்டது.

தற்போது நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்காக மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரஜைகளின் பங்கு

இப்பின்புலத்தில் பிரஜைகளாகிய நாம் இந்த நிலைமாறு கால நீதி செயற்பாடுகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை கவனத்தில்; கொள்வது அவசியமாகின்றது.

நாட்டின் பிரஜை என்ற ரீதியில் நம் நாடு எவ்வாறு நடாத்திச் செல்லப்பட வேண்டும் மற்றும் நாட்டினை வழி நடாத்த தேர்ந்தெடுக்கப்படுவர்கள் (ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்) எவ்வாறு செயற்பட வேண்டும் மற்றும் நாட்டின் அரச மற்றும் திணைக்கள அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டியுள்ளது.

மேலும், தனிமனித, இன மற்றும் குழுக்களின் மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். இப்பாரிய பொறுப்பினை நாம் நிறைவேற்ற வேண்டுமாயின் நிலைமாறு கால நீதிச் செயல்முறையின் கீழ் அரசாங்கம் நியமிக்கும் அனைத்து ஆணைக்குழுவின் முன்னாலும் ஆஜராகி எமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.

அவ்வாறு கருத்துக்களை முன்வைக்க முன்னர் எமக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

அவற்றுள் அரசியல், பொருளாதார, கலாசார, சமூக உரிமை மறுப்புகள் யாவை என்பதை கண்டறிந்து சமர்ப்பித்தல் இன்றியமையாதாகும்.

இதனைச் செய்ய முனைகையில் சமூகத்தின் அனைத்து பிரிவினர்களுடனும் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களைப் பெறுவதுடன் பெண்கள், சிறுவர்களது சிறப்பு பிரச்சினைகளுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும்.

இன்று உருவாகியுள்ள நிலைமாறு கால நீதிப் பொறிமுறைக்கு எமது ஆலோசனைகளை, பிரச்சினைகளை முன்வைக்கத் தவறின் புதிதாக உருவாகும் கட்டமைப்பிற்குள் எமது உரிமைகள் உள்ளடக்கப்படாமல் போய்விடலாம்.

அவ்வாறன நிலையேற்படின் மீண்டும் ஓரங்கட்டப்பட்ட சமூகமாக நாம் வாழ நேரிடும்.

LEAVE A REPLY