காத்தான்குடி பிரதான வீதி விபத்துக்கள்: RDA யினருக்கு NFGG நன்றி தெரிவிப்பு!

0
191

(NFGG ஊடகப்பிரிவு)

IMG-20160819-WA0001காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்துச்செல்லும் விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தமது ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை(RDA)யினருக்கு NFGG நன்றி தெரிவித்திருக்கின்றது.

அது போலவே NFGGயின முன்னெடுப்புகளை தொடர்ந்து தமது தரப்பிலும் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏனைய அரசியல் பிரதி நிதிகளின் முயற்சிகளும் பாராட்டுக்குரியது.

காத்தான்குடி பிரதான வீதியில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் சில உயிர்களை பறிக்கும் அளவிற்கும் அத்துடன் நிரந்தர ஊனங்களை உருவாக்கும் அளவிற்கும் பாரதூரமானவையாகவும் அமைந்துள்ளன. காத்தான்குடி பிரதான வீதியில் இரு மருங்கிலும் அமைந்திருக்கும் மற்றும் அதிகரித்து வரும் வர்த்தக நிலையங்கள் காரணமாக இப்பகுதியில் சன செரிசலும் வாகன நெரிசலும் தவிர்க்க முடியாதுள்ளது.

இப்பகுதியில் போதுமான வாகன தரிப்பிட வசதிகள் இல்லை என்பதுவே வாகன நெரிசலுக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். அந்த வகையில் நமது வர்த்தகர்களின் சந்தை வாய்ப்பை தக்கவைத்து, அதிகரித்துக்கொள்ளும் வகையிலேயே பிரதான வீதி ஒழுங்கமைப்புகளும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் அமைதல் வேண்டும்.

IMG-20160819-WA0000சில வருடங்களுக்கு முன்னர் பிரதான வீதி விஸ்தரிக்கப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே இவ்விடயங்களை நாம் வலியுறுத்தி வந்திருகின்றோம். மாத்திரமன்றி பிரதான வீதி அமைப்பு வாகன தரிப்பிட வசதிகளுடன் எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற யோசனைகளை உரிய வரைபடங்களுடன் தயாரித்து சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக கையளித்தும் இருந்தோம். ஆனால் அவையெல்லாம் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இந்த வீதி அபிவிருத்தி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு தற்போது நிலவி வரும் வீதி விபத்துக்களுக்கான காரணமும் அதுவேயாகும்.

இந்நிலையிலேயே பிரதான வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் முதல் NFGG தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. அதில் முதல் நடவடிக்கையாக மட்டக்களப்பு RDA உயர் அதிகாரிகளுடனும் பொறியியலாளர்களுடனும் இரண்டு கட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் முதலாவது கலந்துரையாடல் கடந்த மார்ச் மாதம் 21ம் திகதியும், இரண்டாவது கலந்துரையாடல் ஏப்ரல் 11ம் திகதியும் நடைபெற்றது. இதில் உடனடி நடவடிக்கையாக பிரதான வீதியின் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் வேகத்தடுப்புக் கீலங்களை அமைக்க வேண்டுமென்ற யோசனைகளை RDA இடம் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் முன்வைத்தார்.

இது பொருத்தமான தீர்வு என RDA அதிகாரிகள் ஏற்றுக்கொண்டாலும் அதனை அமைப்பதற்கு அவசியமான இயந்திரங்கள் தம்மிடமோ மட்டக்களப்பில் வேறு எவரிடமோ இல்லை என தெரிவித்தனர். இதனால் வேகத்தடுப்பு கீலங்களை அமைக்க சிறிது காலம் தேவைப்படும் எனவும் தெரிவித்தனர்.

எனினும் காத்தான்குடி பிரதான வீதி விபத்துக்களின் பாரதூரத்தினை கருத்திற்கொண்ட NFGG இதனை அமைப்பதை தாமதப்படுத்த முடியாது எனக் கருதியது. எனவே இதனை அமைப்பதற்கான இயந்திரங்களை பிற இடங்களில் இருந்து சொந்த நிதியினைக்கொண்டு வாடகைக்கு பெற்றுத்தருவதாகவும் இதனை தாமதிக்காது நிறைவேற்றும்படியும் RDA யிடம் கோரப்பட்டது.

இந்த வலியுறுத்தலில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்ட அவர்கள் எப்படியாவது இதனை விரைவாக அமைப்பதாக உறுதியளித்தனர். அத்தோடு NFGGகோரிக்கைக்கு இணங்க இந்த வேகத்தடுப்பு கீலங்களை அமைப்பதற்கான கேள்வி மனுக்களை கோரும் அறிவித்தல்களை உடனடியாக வெளியிடுவதாகவும் தெரிவித்தனர்.

அதற்கமைவாகவே கேள்வி மனுக்கள் கோரப்பட்டு ஒப்பந்தக்காரர் தெரிவு செய்யப்பட்டு, தற்போது பிரதான வீதியில் வேகத்தடுப்பு கீலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறு தமது கோரிக்கையினை ஏற்று தாமதமின்றி நடவடிக்கைகளை மேற்கொண்ட மட்டக்களப்பு RDA நிர்வாகிகளுக்கு NFGG நன்றிகளை தெரிவித்துள்ளது. அதுபோலவே பிரதான வீதி விபத்து விடயத்தில் NFGG கவனம் செலுத்தியதை தொடர்ந்து தாமும் முன்வந்து இதில் நடவடிக்கைகளை மேற்கொண்ட ஏனைய அரசியல் பிரமுகர்களது முயற்சிகளும் பாராட்டுக்குரியது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்புக் கீலங்கள் வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் காணப்படுகின்றதா என்பதினை நாம் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றோம். இது பற்றிய 3ம் கட்ட கலந்துரையாடல் ஒன்றினை கடந்த 15.08.16 அன்று RDA தரப்பினருடன் மேற்கொண்டோம்.

அமைக்கப்பட்டுள்ள வேகத்தடுப்பு கீலங்களின் பருமன் போதாது என உணரப்படும் பட்சத்தில் அதனை இன்னும் ஒரு படி கூட்ட வேண்டும் எனும் யோசனையினையும் இன்னும் சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளோம். அவற்றை எதிர்வரும் காலங்களில் RDA யின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவுள்ளோம்.

பிரதான வீதி விபத்துக்கள் தொடர்பில் எமது 2ம் கட்ட நடவடிக்கையாக ஒரு விரிவான பிரசுரம் ஒன்றினையும் நாம் வெளியிட்டிருந்தோம். ஏப்ரல் 22ம் திகதி வெளியிடப்பட்ட அப்பிரசுரத்தில் வாகன விபத்துக்கான 8 வகையான பிரதான காரணிகளையும் அதற்கான 6 வகையான தீர்வுகளையும் முன்வைத்திருந்தோம்.

அத்தீர்வுகளில் ஒன்றாகவே வேகத்தடுப்பு கீலங்களினை அமைப்பதும் உள்ளடங்கியிருந்தது. அது போலவே பிரதான வீதியின் முக்கியமான பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிஞ்ஞை விளக்குகளை அமைப்பதும் ஒரு முக்கியமான தீர்வாகும். அது தொடர்பில் நாம் தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம்.

RDA உடனான எமது கடந்த சந்திப்பின் போது இது பற்றி கலந்துரையாடி சில முடிவுகளுக்கு வந்துள்ளோம். இதனையும் அமுல்படுத்துகின்ற வேலைத்திட்டங்கள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்தோடு நாம் ஏற்கனவே முன்வைத்த 6 வகையான தீர்வுகளையும் அமுல்படுத்துகின்ற போது மாத்திரமே பிரதான வீதி விபத்துக்களை முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமாகும். ஆனால் இது பற்றிய தொடர்ச்சியான அக்கறை எமது மக்கள் மத்தியில் இருப்பதாக தெரியவில்லை.

விபத்துக்கள் நடக்கும் போது அது பற்றிப்பேசுவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் எனும் நிலையே தொடர்கின்றது. எனவே பிரதான வீதி விபத்து தொடர்பில் கடந்த ஏப்ரலில் நாம் முன்வைத்த தீர்வு யோசனைகளை அனைவரும் மீண்டுமொரு முறை முழுமையாக வாசிக்கும்படியும் இவற்றை விரைவாக பூர்த்தி செய்வதற்கான அக்கறையினையும் ஆதரவினையும் வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதுபோலவே சம்மேளனம் உள்ளிட்ட பொது நிறுவனங்களும் இந்த தீர்வு யோசனைகளை முழுமையாக அமுல்படுத்துவது பற்றி உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY