அரசியல்வாதிகளின் பின்னடைவுகளை சீர்செய்வதற்கு அதிகாரிகள் துணைபோகக்கூடாது

0
192

(பாத்திமா நிஜா)

14037829_591528351018473_16130820_o“அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை சீர் செய்வதற்கு அதிகாரிகள் ஒருபோதும் துனைபோகக்கூடாது” என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, வியாழேந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் ஆகியோரின் இணைத்தலைமையில் (16) ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக பங்களிப்புச் செய்தவன் நான். அதன் அடிப்படையில் எமது நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த மண்ணின் அபிவிருத்திக்காக சிரேஷ்ட அரசியல் தலைவர்களோடு இணைந்து செயலாற்றுவதற்காக இந்த இணைத்தலைமையை எனக்கு வழங்கியுள்ளார். அதற்காக ஜனாதிபதி அவர்களுக்கும், எனது பெயரை முன்மொழிந்த அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகம் மட்டக்களப்பு மாவட்டத்திலே அரசாங்கம் ஒதுக்குகின்ற நிதிகளை விரைவாக செலவு செய்து மக்களுக்கு பணியாற்றுகின்ற ஒரு பிரதேச செயலகமாக திகழ்கிறது. அதற்காக இப்பிரதேச செயலகம் பல பாராட்டுக்களையும் பெற்றதாக அறிகின்றேன். இவ்வாறான செயற்பாட்டுக்கு காரணமாகவிருந்த பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் எனது மனப்பூாவமான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக எமது பிரதேசத்திலே மக்கள் செல்வாக்கில்லாத ஒரு சில அரசியல் வாதிகள் தங்களுடைய அரசியல் பின்னடைவுகளை சீர்செய்வதற்காக அரச அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் பயன்படுத்தி அவர்களின் அரசியல் ரீதியான செல்வாக்கை கட்டியெழுப்புவதை அறியமுடிகிறது. இவ்வாறான விடயங்களுக்கு அரச அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் துணைபோகக் கூடாது என்பதனை இச்சந்தர்ப்பத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அரச அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் தங்களது கடமைகளை சுயாதீனமாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும். குறிப்பாக மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தனித்துவமாகவும் செயற்பட வேண்டும். விசேடமாக எமது பிரதேச செயலகத்திற்குட்ப்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளிலும் சமமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக மிச்நகர், மீராகேணி ஆகிய பிரதேசத்தில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை கட்டியெழுப்புவதற்கு பிரதேச செயலகம் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். மேலும் இப்பிரதேச அரசியல் தலைவர்களும் உதவி செய்ய வேண்டும்.

இப்பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கலந்துகொள்வதனையிட்டு சந்தோசமடைவதாக கூறினார். அவரின் வருகையினையிட்டு நானும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த யுத்த காலத்தின்போது தமிழ் மக்களோடு இணைந்து வாழ்ந்த எமது முஸ்லிம் சமூகம் பிற்காலத்தில் பல இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவித்த வரலாறுகளை பாராளுமன்ற உறுப்பினராகிய நீங்களும் நன்கறிந்திருப்பீர்கள். குறிப்பாக முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாகவும் பல பின்னடைவுகளையும் சந்தித்திருந்தார்கள். ஆனாலும் இன்று அந்த மக்களுக்கு காணிப்பிரச்சிணைகள், பொருளாதாரப்பிரச்சிணைகள் என ஏராளமான பிரச்சிணைகள் காணப்படுகின்றது.

இருந்தபோதும் இந்த மக்களுடைய விடயத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்படுவதுடன் இனவாத சிந்தனையோடும் சிலர் செயற்படுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தினுடைய நியாயபூர்வமான உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினராகிய நீங்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலும் முஸ்லிம்களும் பங்கேற்றிருக்கின்றார்கள் குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்திலிருந்து 122 பேர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து மரணித்திருக்கின்றார்கள் இதனை தமிழ் அரசியல் தலைவர்கள் மறந்து செயற்படுகின்றனர். மாறாக முஸ்லிம் மக்களின் நிருவாகத்தை நீதியாக செயற்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினராகிய உங்களின் உதவிகளும் தேவையாகவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY