யுத்தத்தை வெற்றி கொண்ட இந்த நாடு மதவாதத்தின் காரணமாக தோல்வியடைந்து கொண்டிருக்கின்றது: நல்லிணக்கம் மற்றும் சமூகவலுவூட்டலுக்கான நிலையம்

0
200

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

unnamed (7)யுத்தத்தை வெற்றி கொண்ட இந்த நாடு மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்குப் பதிலாக மதவாதத்தின் காரணமாக தோல்வியடைந்து கொண்டிருக்கின்றது என நல்லிணக்கம் மற்றும் சமூகவலுவூட்டலுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு வியாழக்கிழமை (ஓகஸ்ட் 18, 2016) பட்டிப்பளை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது செயலணியின் முன் ஆஜராகி பிரதேச மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

தொடர்ந்து அங்கு தமது கருத்துக்களைப் பதிவு செய்த மகஜர் ஒன்றைக் கையளித்த ஏறாவூர் நல்லிணக்கம் மற்றும்; சமூகவலுவூட்டலுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நஸீர், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாட்டுப் பற்றோடு நாம் இந்த யோசனைகளை முன்வைக்கின்றோம். இலங்கையில் கடந்த காலத்தில் இப்படியான பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன, அவர்களும் மக்களது கருத்துக்களைப் பெற்றார்கள். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்ற கருத்தை நாங்களும் முன்வைத்தோம். ஆயினும், பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டதாக இல்லை.

சகல மக்களும் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக ஏதோ நீதி, நிவாரணம் கிடைக்கலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், துரதிருஷ்டம் மக்களது அபிலாஷைகள் நிறைவேறவில்லை. சமூக நல்லிணக்கத்திற்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் சார்பில் நாம் முன்வைக்கும் சில யோசனைகள். குறிப்பாக கருத்தறியும் அமர்வு பற்றி மக்களுக்குப் போதுமான தெளிவான விளக்கம் இல்லை, அதன் காரணமாக செயலணியின் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை மக்கள் சமர்ப்பிக்கிறார்கள். யானைப் பிரச்சினை, குடி தண்ணீர், வீதி, கிராம சேவகர் இல்லாத நிலைமை, இறால்பண்ணை அமைத்தல் இப்படி பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைக்கிறார்கள்.

எனவே, இந்தக் கருத்தறிதல்கள் பற்றி ஊடகங்கள் ஊடாக போதிய தெளிவை ஊட்ட சந்தர்ப்பம் இருந்தும் அது தவறவிடப்பட்டுள்ளது. தெளிவூட்டப்பட்டிருந்தால் காத்திரமான கருத்துக்கள் மக்களிடமிருந்து கிடைத்திருக்கும். மேலும், மக்கள் சொன்ன கருத்துக்களை முழுமையாகப் பதிந்தெடுத்துப் பெற்றுக் கொள்வதற்கான எந்த வசதியும் இல்லாதிருப்பது இந்த செயலணியின் பலவீனமாக பார்க்க வேண்டியுள்ளது. இந்த அமர்வுகளில் மக்களின் சந்தேகங்களுக்கு தெளிவை வழங்கக் கூடிய தேசிய செயலணியின் பொறுப்பு வாய்ந்த உறுப்பினர் எவராவது அமர்வு தொடங்கி முடியும் வரை அமர்ந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.
யுத்தத்திற்குப் பின்னரான வெற்றிக்களிப்பில் பெரும்பான்மை இனமான சிங்கள பௌத்தர்களின் மதவெறி ஆதிக்க உணர்வைக் கட்டுப்படுத்த எந்தவித சட்ட நடவடிக்கைளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த நாட்டில் சுதந்திரத்திற்குப் பின் தொடங்கி தற்போது வரை சட்டமும் நீதியும் சரிவர அமுல்படுத்தப்படாததே சந்தேகங்களுக்கும் கசப்புணர்வுகள் வளர்வதற்கும் தொடர்ந்து காரணங்களாய் இருந்து வருகின்றது. அரசியல் யாப்பில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்த நாட்டில் இரு மொழி அமுலாக்கம் சட்டப்புத்தகத்தில் மாத்திரமே உள்ளது. பௌத்த மதவெறி அமைப்புக்களின் செயற்பாடுகள் காரணமாக சிறுபான்மை மக்கள் அச்சமும் பீதியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு கிழக்கில் படையினர் புத்த வழிபாட்டிடங்களை அமைப்பது பதற்றத்தை அதிகரித்திருக்கின்றது. எந்தவொரு இடத்திலும் பௌத்த மத அடையாளங்கள். எனவே, அந்த மதத்தை வழிபடுவதற்குரிய போதியளவு மக்கள் குறித்த பிரதேசத்தில் இல்லாதவிடத்து அந்த மத அடையாளங்கள் அங்கிருக்க வேண்டிய அவசியமில்லை. எதிர்காலத்தில் மதச் சின்னங்கள், அடையாளங்களை நிறுவும்பொழுது அந்தப் பிரதேசத்தில் உள்ள சிவில் சமூக மக்களின் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் கருத்துக்கள் பெறப்பட்டபின்பே மத அடையாளங்கள் நிறுவப்பட வேண்டும். இது சட்டமாக்கப்பட வேண்டும். பௌத்த மத சின்னங்கள், அடையாளங்கள் வைக்கப்படுவதன் பின்னணியில் படையினரதோ பொலிஸாரினதோ பின்புலங்கள் பலமாக இருப்பதை இந்த நாடே அறியும். இந்த நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்.

மேலும், அரசாங்க அலுவலகம் என்பது இந்த நாட்டிலுள்ளவர்களுக்கும் மற்றும் வெளிநாட்டவருக்கும் தங்களது அலுவல்களை முடித்துக் கொள்வதற்கான பொதுவான இடமாகும். ஆனால், பிரதேச செயலகம். மாவட்டச் செயலகம், கல்வித் திணைக்களம் இதுபோன்ற பல்வேறு அரசாங்க அலுவலகங்களில் ஒரு சமயத்திற்குரிய மத வழிபாட்டிடங்களை அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதேபோன்று அரசாங்க மற்றும் தனியார் பொதுப் போக்கவரத்து பஸ்களில் தனியொரு மதத்தின் அல்லது ஒரு சில மதத்தின் அடையாளங்கள் இருப்பதையும் மத சம்பந்தமான பாடல்கள் ஒலிக்கப்படுவதையும் தவிர்க்க வேண்டும். அரசாங்கப் பாடசாலைகளில், மதம் சார்ந்து இனம் சார்ந்து இடப்பட்டுள்ள பெயர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

அதேபோன்று அரசியல்வாதிகளின் பெயர்களில் பொதுக்கட்டிடங்களுக்கும் அரசாங்க அலுவலகங்களுக்கும், வைத்தியசாலைகளுக்கும் பெயர் சூட்டுவதைத் தடை செய்ய வேண்டும். தேசிய கீதம் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் இசைப்பதற்கு உள்ள இன, மொழிவாதத் தடையை உடனடியாக நீக்க வேண்டும். இவைகள் அனைத்தும் சட்டத் திருத்தங்களாகக் கொண்டு வரப்பட்டு உடனடியாக அவை அமுலுக்கு வரவேண்டும்.

இன்னும், நாட்டிலே அரச உயர்மட்ட அதிகாரிகள் தொடங்கி அடி மட்ட ஊழியர்கள் வரை இலஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது நாட்டுக்கு ஒரு சாபக்கேடாக உள்ளதோடு இன முரண்பாட்டுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அரச காணிகள் அனைத்து இன மக்களுக்கும் தேவைக்கேற்ப சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரில் இயங்கும் அரசாங்கத் திணைக்களம் சிங்கள பௌத்த இருப்பை மாத்திரம் மீள் உறுதி செய்வதாக அதன் நடவடிக்கைகள் காணப்படுவது குறித்து சிறுபான்மை இனங்கள் மத்தியில் நிலவும் நியாயமான சந்தேகங்கள் நீக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டு முஸ்லிம்கள் யுத்தத்தில் பங்கெடுக்காத அதேவேளை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அன்றும் இன்றும் துணை நிற்பவர்கள். ஆனால், யுத்தத்தில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புக்கள். மனக்காயங்கள் என்பவற்றுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் இனச் சுத்திகரிப்புச் செய்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் உடனடியாக தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்க இருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.

மேலும், முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றியமை மற்றும் படுகொலை செய்தமை பற்றிய நீதியான விசாரணை வேண்டும். சம்பந்தப்பட்டவர்களில் பலர் இப்பொழுதும் உயிருடன் இருக்கலாம். தண்டனை வழங்குதல் என்பதற்கு அப்பால் முஸ்லிம்களுக்கு ஏன் அநியாயம் இழைக்கப்பட்டன என்பது பற்றிக் கண்டறிய வேண்டும். மேலும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக அமைக்கப்படும் எந்தவொரு விசாரணை ஆணைக்குழு, செயலணி என்பனவற்றில் பாதிக்கப்பட்ட, உள்ளுர் சுற்றுச் சூழல், பூகோளவியல், உள்ளுர் மொழி வழக்குத் தெரிந்த அனுபவஸ்தர்கள் இடம்பெற வேண்டும்.

LEAVE A REPLY