இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ‪நல்லிணக்கப்பொறிமுறைக்கான கருத்தறிதலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகள் புறக்கணிப்பு

0
98

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

unnamed (2)ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் குற்றச்சாட்டு;

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ‪நல்லிணக்கப்பொறிமுறைக்கான கருத்தறிதலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு வியாழக்கிழமை (ஓகஸ்ட் 18, 2016) பட்டிப்பளை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது செயலணியின் முன் ஆஜராகி பிரதேச மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

தொடர்ந்து அங்கு தமது கருத்துக்களைப் பதிவு செய்த ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட்;

“இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள ‪நல்லிணக்கப் ‪‎பொறிமுறைக்காக ‪மக்களிடம்‎கருத்தறியும் செயலணியிடம் பின்வரும் கரிசனையை முன்வைக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 4 பிரதேச செயலகப் பிரிவுகள் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.

இதன்படி காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 13757 குடும்பங்களும், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் 10722 குடும்பங்களும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் 7412 குடும்பங்களும், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் 8201 குடும்பங்களும் வாழ்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் ஊர்கள் கடந்த 30 வருட கால யுத்தத்தின்போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களாகும். குறிப்பாக 1985 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தப் பிரதேசங்களில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் பின்னர் முஸ்லிம் ஊர்கள் பல வருடங்களாக திறந்தவெளி அகதி முகாம்களாகவே காணப்பட்டன.

உயிர், உடமை, அசையும் அசையாச் சொத்துக்கள், பூர்வீக வாழ்விடங்கள், கல்வி, பொருளாதாரம் என்று அனைத்தையுமே இழந்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களாக வாழ்கின்ற சரித்திரம் இந்த மக்களுக்குண்டு. அதேவேளை பல்வேறு இன ரீதியான புறக்கணிப்புக்களையும் இந்த பிரதேச முஸ்லிம்கள் அனுபவித்து வந்திருக்கின்றார்கள்.

இது ஒரு சுருக்கமான பின்னணி. ஆயினும், இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்தின் 2 இலட்சம் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தமுள்ள சுமார் 40 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களின் கருத்துக்களைப் பெறுவதிலும் புறக்கணிப்பு இடம்பெற்றிருப்பது கவலையளிக்கிறது.

அதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லிணக்கப்‪‎பொறிமுறைக்கான ‪மக்களிடம் ‎கருத்தறியும் செயலணியின் அமர்வுகள் ஐந்தும் தமிழ்ப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நமது கரிசனை என்னவென்றால் 4 முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளில் ஓரிடத்திலாவது இந்த கருத்தறியும் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதேயாகும்.

ஆகையினால் இந்த செயலணி கூட யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் புறக்கணிக்கிறதா என்கின்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, எவ்வாறேனும் முஸ்லிம் மக்களின் கருத்துக்களும் நல்லிணக்கப் பொறிமுறைக்கு அவசியம் என்ற கருத்தை உள்வாங்குமாறும் அதற்கான கருத்துப் பெறும் அமர்வொன்றை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவொன்றில் ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY