அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை காணும் முகமாக முக்கியமான கலந்துரையாடல்

0
136

unnamed (1)அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை காணும் முகமாக முக்கியமான கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (18) அம்பாறை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட செயலாளர் துஷித்த பீ வணிகசிங்கவுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்;, பிரதியமைச்சர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர் மற்றும் யூ.எல்.எம்.என்.முபீன், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றி, நீண்டகாலமாக நிலவிவரும் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு மேலும் தாமதமின்றி, உரிய தீர்வு காண்பது தொடர்பில் ஆராய்ந்தனர்.

கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தமது வறுமை நிலையையும், பொருளாதார பாதிப்பையும் கவனத்தில் கொண்டு செய்கை பண்ணப்படாதுள்ள காணிகளை சீனி தொழிற்சாலையினர் பொறுப்பேற்று மாதாந்தம் அல்லது வருடம்தோறும் நியாயமான பணத் தொகையொன்றை வழங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது சூடான வாக்குவாதங்களும் இடம்பெற்றன. கரும்பு செய்கையாளர்களுக்கும், சீனித் தொழிற்சாலையினருக்குமிடையிலான உடன்பாடின்மை காரணமாகவும், முறுகல் நிலை காரணமாகவும் இழுபறியில் இருக்கும் இந்த வாழ்வாதாரப் பிரச்சினைக்கு சாத்தியமானதும், நிரந்தரமானதுமான தீர்வை காணும் விதத்தில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்தாலோசிப்பதெனவும் உரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY