நாலாண்டுகளின் பின்னர் கல்குடா மீது சிலருக்கு கரிசனை ஏற்பட்டுள்ளது: பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

0
136

-நாச்சியாதீவு பர்வீன்-

unnamed (12)நாலாண்டுகளின் பின்னர் கல்குடா மீது சிலருக்கு கரிசனை ஏற்பட்டுள்ளது. கல்குடா மக்களின் வாக்குகளினால் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் கடந்த நான்கு ஆண்டு காலமாக மெளனமாக இருந்து விட்டு, இப்போது இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி கதை அளக்கிறார், இவ்வாறான நயவஞ்சக போக்குடைய,அரசியல் சுயலாபத்திற்காக எதனையும் பேசுகின்றவர்களுக்கு எதிர்கால அரசியல் நிலவரம் மிகச்சரியான பாடத்தினை கற்பிக்கும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை நிவ் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையில் ஐந்தாவது தடவையாக நடைபெறும் கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவர்களிக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்

கல்குடாவின் அபிவிருத்தி பற்றி இங்குள்ள சிறுபிள்ளைக்கும் தெரியும். அரசியல் ரீதியான இலாபத்திற்காக இந்த மக்களை ஏமாற்றி காய்நகர்த்தும் கேவலப்போக்கிலிருந்து அந்த மாகாணசபை உறுப்பினர் தன்னை சரி செய்து கொள்ளவேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் பிரதேசத்தின் மீதோ அல்லது இந்த மக்களின் மீதோ எவ்வித அக்கரையும் அற்றவராக அவர் இருந்துவிட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கறார். இது மிகக் கேவலமான அவரது அரசியல் நடத்தையை காட்டுகிறது. எங்களுடைய வாக்குகளின் மூலம் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர் தனது சுயநலத்திற்காக எம்மைவிட்டு மாறியவர்,ஆகக்குறைந்தது அவரை அறிமுகப்படுத்தியவருக்காவது விசுவாசமாக நடந்து கொண்டாரா என்றால் அதுவுமில்லை, எனவே இவ்வாறான போக்குடைய கீழ்த்தரமான அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் நல்ல பதிலை பெற்றுக்கொள்வார்கள்.

கடந்த தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கிய அடுத்த மாற்றுக்கட்சிக்காரர்கள் எதனை சாதித்தார்கள்? அவர்களின் வாக்குறுதிகளை மீண்டும் வியாபாரமாக்க முனைகின்ற காலமே இனி வரவிருக்கின்றது. ஆனால் இந்த அரசியல் நிலவரங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் அப்பால் நான் இந்த பிரதேசத்தை நேசிக்கின்றவன். உங்களை புரிந்து கொண்டவன்,உங்கள் குறைபாடுகள் பற்றி நன்கு உணர்ந்தவன். ஒரு சகோதரனாக,நண்பனாக எப்போதும் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பவன். எனவே இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் நிலையான கொள்கையுடன் செயல் படுகிறேன். அது அரசியல் ரீதியான அடைவுக்காகவோ,அல்லது அரசியல் லாபத்திற்காகவோ அல்ல, மாறாக இறைவன் எனக்கு வழங்கியிருக்கும் பதவியை இந்த அமானிதத்தை நேர்மையாகவும், இதய சுத்தியுடனும் செய்ய விரும்புகிறேன். அதனை எந்த அரசியல் சக்தி தடுக்க முனைந்தாலும்,இறைவன் அருளால் அதனை நிறைவேற்றுவதில் நான் முன் நின்று உழைப்பேன்.

இது எனது மண். நீங்கள் எனது மக்கள், இந்த மண்ணையும்,மக்களையும் தூய்மையாக நேசிக்கின்ற அரசியல்வாதி. இங்குள்ள இளைஞர்கள் பற்றி பல கனவுகளும்,எதிர்பார்ப்புகளும் அதிகம் இருக்கின்றது. நீங்கள் தான் இந்த பிரதேசத்தின் சொத்து என அவர் கூறினார்.

LEAVE A REPLY