அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்: ஐ.நா.பிரதிநிதிகளிடம் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எடுத்துரைப்பு

0
183

(அப்துல்சலாம் யாசீம்)

unnamed (4)ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா வளாகத்தில் இயங்குகின்ற ஐக்கிய இராச்சிய நாட்டின் மிஷனைச் சேர்ந்த சிரேட்ட மனித உரிமைகள் ஆலோசகர் திரு. பொப்லாஸ்ட் அவர்களும், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த நல்லிணக்க ஆலோசகர் திரு.போல்கிறீன் அவர்களும் நேற்று திருக்கோணமலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.சி.தண்டாயுதபாணி அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நீண்ட கால இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகள், மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் பேசப்பட்டது. தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்ற மாகாண சபைகள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சனைகளுக்கான ஒரு தீர்வாகக் 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டதாகும்.

1987ம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்தின் வழியாக கொண்டு வரப்பட்ட இச்சபைகளின் அதிகாரங்கள் தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய அளவில் இருக்கவில்லை எனவும், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்ட சந்தர்ப்பங்களையும் கல்வி அமைச்சர் இக்கலந்துரையாடலில் சுட்டிக் காட்டினார். மாகாண சபைகள் சட்டத்தின் பிரகாரம் ஆளுநர் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர், அமைச்சர்கள் என்போரை விட அதிகாரம் மிக்கவராக இருப்பதனால் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்த்து வைப்பதில் முரண்பாட்டு நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் மாகாண சபைகள் தொடர்பாக கூறப்பட்டுள்ள மாகாண நிரல், ஒதுக்கிய நிரல், ஒருங்கியை நிரல் முதலான விடயங்களிலும் கூட அதிகார மீறல் தொடர்பான நிலைமைகளும் ஏற்படுகின்றது. சட்டமியற்றும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு உள்ளபோதிலும் அது வரையறைகளுக்கு உட்பட்டதாகவும், காலதாமதப்படுவதாகவும் அமைச்சர் எடுத்துக் காட்டினார்.

தற்போதைய அரசால் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆனாலும் தமிழ் மக்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய முறைமைகளை இந்த அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டிருக்க வேண்டும். சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட சமஸ்டிக் கட்டமைப்பை அரசியல் தீர்வுக்கான பிரதான உபாயமாகக் கொள்வது சிறந்த வழியாகும். தங்களது விபகாரங்களை தாங்களே கையாளக்கூடிய வகையில் அதிகாரங்கள் பிராந்திய ரீதியாக பகிரப்படவேண்டும். ‘சமஸ்டி’ என்ற சொல் பிரிவினை அல்ல. சமஸ்டியை பிரிவினையாகக் காட்டுவதற்கு இனவாதத் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்

தமிழர்கள் இந்நாட்டில் ஏனைய இனத்தவர்களுடன் இணைந்து வாழத் தயாராக இருக்கின்றார்கள். எல்லா இனத்தவர்களும் சம உரிமை பெற்று சமாதானமாக வாழுவதை விரும்புகின்றார்கள். அந்த வகையில் அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கக்கூடிய ஒரு ஆட்சி முறை இந்த நாட்டிற்கு அவசியமானது, என்பதையும் கல்வி அமைச்சர் எடுத்துக் காட்டினார்.

LEAVE A REPLY