நல்லது நடந்து கொண்டு வரும்போது மீண்டும் நாட்டைக் குழப்பப்பார்க்கின்றார்கள்: அலிஸாஹிர் மௌலானா

0
187

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

unnamed (5)நாட்டில் நல்ல பல அம்சங்கள் நடந்து கொண்டு வரும்போது மீண்டும் நாட்டைக் குழப்பப்பார்க்கின்றார்கள் இதுதான் குழப்பவாதிகளுக்குக் கைவந்த கலையாகிவிட்டது என ஸ்ரீலமுகா வின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருட காலத்தில் தமது பூர்வீக விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை இழந்த விவசாயிகள் தமது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட உதவி ஆலோசனைக் கூட்டம் ஏறாவூர் அஷ்ஹர் வித்தியாலயத்தில் புதன்கிழமை (ஒகஸ்ட் 17, 2016) இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மட்டக்களப்பு-பதுளை வீதிப் பிரதேசத்தில் 1985 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இனவன்முறைகள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள், யுத்தம் என்பனவற்றின் காரணமாக தமது பூர்வீக விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை இழந்த விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானா; நாட்டிலுள்ள சட்டங்களின் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய பல ஏற்பாடுகள் உள்ளன. ஆனால், நமது நாட்டின் நிருவாகத்துறையிலுள்ள துரதிருஷ்டம் என்னவென்றால், நாட்டிலுள்ள சட்டங்கள் சரிவர அமுலாக்கம் செய்யப்படாததேயாகும். “தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி அதனை பக்தனுக்குக் கொடுப்பதில்லை” என்பது மாதிரி சட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளை அதிகாரிகள் பெற்றுக் கொடுப்பதில்லை.

இதனால்தான் நமது நாட்டில் இத்தனை குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பின் மூலம் விதந்துரைக்கப்பட்டுள்ள அத்தனை அதிகாரங்களும் அடிமட்ட மக்களுக்குக் கிடைக்குமாயின் அவர்கள் அதன் மூலம் அதிக நன்மைகளைப் பெற முடியும். மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் அமுலுக்கு வராமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமது பூர்வீக சொந்தக் காணிகளை இழந்து விட்டுத் தவிக்கும் மக்கள் தமது காணிகளை மீண்டும் பெற்றுக் கொள்ளும் வகையில் விஷேட சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை ஒரு வரப்பிரசாதமாகப் பயன்படுத்தி தமது காணிகளை இழந்து கலங்கிப் போய் நிற்கும் மக்கள் அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்” என்றார். ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 183 விவசாயிகளின் சுமார் 1450 ஏக்கர் காணிகள் இழக்கப்பட்டுள்ளதாக காணிகளை இழந்த விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஐ.எல். அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர்களும் சட்டத்தரணிகளுமான மிருதினி சிறிஸ்குமார், கஜாலினி சுந்தரலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டு காணிகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் தமது காணிகளை மீண்டும் உடமையாக்கிக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தனர்.
முன்னாள் நீதிபதி கலாநிதி ஏ.எல். அப்துல் கபூர், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், ஸ்ரீலமுகா கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம். முபீன், உட்பட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY