காஷ்மீரில் மீண்டும் வன்முறை; துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி 6 பேர் படுகாயம்

0
185

201608170422577602_In-KashmirAgainViolenceGunfire5-peopleKills_SECVPFகாஷ்மீரில் நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாயினர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தளபதி பர்கான் வானி மற்றும் அவருடைய கூட்டாளிகள் இருவர் கடந்த மாதம் 9-ந்தேதி காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பிரிவினைவாதிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வன்முறையை ஒடுக்க நடத்தப்பட்ட தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கி சூடு ஆகியவற்றில் இதுவரை 5 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரக்காரர்களில் 59 பேரும், 2 போலீசாரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருவதால் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மத்திய காஷ்மீர் மாவட்டமான பத்காமில் உள்ள அரிபதான் பீர்வா பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலமாக சென்றனர். அவர்கள் மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படையினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அந்த வழியாக வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் வாகனத்தின் மீது அவர்கள் சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இதனால், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பாதுகாப்பு படையினர் விரட்டினர். எனினும் களைந்து செல்லாத ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

இதேபோல் அனந்த்நாக் மாவட்டத்தில் ஜங்கிலாத் கவுசர் என்னும் பகுதியில் நேற்றுகாலை கலவரக்காரர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காஷ்மீர் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது.

காஷ்மீரில், பிரிவினைவாதிகள் நேற்றும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீநகர் மாவட்டம் மற்றும் அனந்த் நகரில் நேற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முழு அடைப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து 39-வது நாளாக முடங்கியது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டன. அரசு பேருந்துகளும் ஓடவில்லை. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இணையதள மற்றும் செல்போன் சேவையும் நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY