அரசியலில் கொடிகட்டிப் பறப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
259

(எம்.ஐ.அப்துல் நஸார்)

Hizbullah in parliamentஅரசியலில் கொடிகட்டிப் பறப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இராஜாங்க அமைச்சர் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 4,417,032 ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிய காத்தான்குடி விடுதி வீதியை தார் இட்டு செப்பனிடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவருமான கே.எல்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்றது. அந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சிலர் இதுதான் உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். வெறுமனே ஐயாயிரம், பத்தாயிரம், இருபத்தையாயிரம் ரூபாய்களைக் கொண்டு வந்து பெரும் விழாக்கழள எடுத்து ஏதோ அவர்கள் அரசியலிலே கொடிகட்டிப் பறக்கின்ற உணர்வோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை மிக விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் தமது வீடுகளுக்குச் சென்று நிம்மதியாக அவர்களது குடும்பத்துடன் இருக்க முடியும். அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்திருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் புதிய அரசாங்கமாகும். புதிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இனங்களுக்கிடையிலே இருக்கின்ற முறுகல் நிலையினைப் போக்கி சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் ஒற்றுமையாக இந்த நாட்டிலே வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்.

இன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவ்வாறான தீர்வுகள்; எந்த ஒரு சமூகத்தையும் பாதிக்கின்ற தீர்வுகளாக அமையாது. இன்று சிலர் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என கூறுகின்றனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலே புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டுமென்று ஜனாதிபதி முதலாவது கூறியபோது, சம்பந்தன் ஐயா, கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இருந்தார்கள். நான் எழுந்து நின்று ஜனாதிபதிக்குச் சொன்னேன் ‘ஜனாதிபதி அவர்களே, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என தெளிவாக எடுத்துச் சொன்னேன். அங்கு பல முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

இன்று இருக்கின்ற இந்த அமைதியைப் போக்கி மீண்டும் முஸ்லிம்களை அடிமைப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு வடக்கையும் கிழக்கையும் இணைப்பதல்ல. மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும். மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வினூடாகத்தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமே தவிர வடக்கையும் கிழக்கையும் இணைப்பது தீர்வல்ல. அது இ

ரத்த ஆறு மீண்டும் இந்த மண்ணிலே ஓடுவதற்கே வழி வகுக்கும்.

அவ்வாறான கோரிக்கையினை விடுப்பவர்கள் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும். சில முஸ்லிம்கள் கூட வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம்கூட அவ்வாறு யோசிக்கின்ற மோசமான நிலையில் இருக்கின்றோம்.

வடக்கில் இருந்து கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்பது ஒரு அடிப்படையான விடயம். அதற்கு கூட்டம் போடவோ கலந்துரையாடவோ அவசியம் இல்லை. வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்கின்ற தலைமைத்துவம் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களோடு ஒட்டியிருக்கின்ற ஒட்டுண்ணிகளும் தெளிவாக இதனைப் பேச வேண்டும். முஸ்லிம் சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

தனது காலத்தில் இனைப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் உறுதியாக இருக்கின்றார். அந்தத் தீர்வு அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற தீர்வாக இருக்க வேண்டும். அந்தத் தீர்வுக்கூடாக இனங்களுக்கு மத்தியில் நிரந்தர அமைதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
சமூகத்தை பாதிக்கின்ற ஏசுகின்ற ஒரு இயக்கமும் அமைப்பும் இருக்கக் கூடாது என்பதில் ஜனாதிபதி மிகவும் தெளிவாக இருக்கின்றார்.

ஆகவே, அவ்வாறான சூழ்நிலை இந்த நாட்டில் உருவாகுவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காத்தன்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தன்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் றஊப் ஏ மஜீட், அரபு நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY