எனது வெற்றியை ஜமைக்கா மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: உசேன் போல்ட்

0
197

201608160902367888_Dedicate-my-victory-to-the-people-of-Jamaica-Usain-Bolt_SECVPFஒலிம்பிக் தடகளத்தில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்திற்கு எப்போதும் தனித்துவமான வரவேற்பு உண்டு. கண்ணிமைக்கும் நேரத்தில் வெற்றியாளரை அடையாளம் காட்டும் இந்த ஓட்டத்தை பார்க்கும் போது நம் உள்ளமும் வீரர்களுடன் சேர்ந்து ஓடுவது போல் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். குறுகிய நேர ஓட்டமான இதில் ஜெயிக்கும் வீரரே உலகின் அதிவேக மனிதராக அழைக்கப்படுகிறார்.

ரசிகர்களின் உற்சாகமான ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் ஜெட் வேகத்தில் ஓடிய ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் எதிர்பார்த்தபடியே வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 9.81 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை கழுத்தில் சூடினார்.

இந்த முறை உசேன் போல்டின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவேன் என்று ஜஸ்டின் கேத்லின் சூளுரைத்திருந்தார். ஆனால் 100 மீட்டர் ஓட்டத்தில் தன்னை அசைத்து பார்க்க இப்போதைக்கு இந்த உலகில் ஆள் இல்லை என்பதை உசேன் போல்ட் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

இந்த வெற்றியை ஜமைக்கா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக உசேன் போல்ட் டுவிட்டர் மூலம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

நான் ரொம்ப வேகத்தில் ஓடவில்லை. இதை விட இன்னும் சீக்கிரமாக இலக்கை அடைய வேண்டும் என்று விரும்பினேன். ஆனாலும் சாம்பியன் ஆகியிருப்பது மிகவும் பெருமிதம் அளிக்கிறது. எனது மிகச்சிறந்த வெற்றிகளில் இதுவும் ஒன்று. இங்கு நான் சாதிக்கப்போகிறேன் என்று உங்களிடம் (நிருபர்கள்) கூறினேன். அதை செய்து காட்டியிருக்கிறேன். திட்டமிடலை களத்தில் செயல்படுத்திய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.

‘எனது சாதனைக்கு அழிவே கிடையாது. அந்த புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்’ என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் இரண்டு பதக்கம் வெல்ல வேண்டி இருக்கிறது. அது முடிந்ததும் ‘அழிவில்லாத சாதனை’ என்ற கூற்றை ஏற்றுக்கொள்வேன்.

ரசிகர்களின் ஆதரவு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. ஏதோ கால்பந்து மைதானத்தில் இருப்பது போன்று உணர்ந்தேன். அவர்களுக்கு நன்றி. எனது எஞ்சிய இரு பந்தயத்தையும் இதே போன்று கண்டுகளியுங்கள்.

LEAVE A REPLY