அபிவிருத்திக்காக கொண்டு வரப்படுகின்ற நிதிகள் மக்களுக்கு சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா? ஷிப்லி பாறூக்

0
244

(M.T. ஹைதர் அலி)

HRS_5675பிரதேசத்தின் அபிவிருத்திக்காக கொண்டு வரப்படும் நிதியானது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் முன்னெடுப்புக்களுக்கு மத்தியிலும் கொண்டுவரப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அபிவிருத்திக்காக கொண்டு வரப்படுகின்ற நிதியானது சரியான முறையில் சரியான இடத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்றால் அது மக்களுக்கு சிறந்த முறையில் பயனளிக்கவில்லை என்பதனையும் உத்தியோகத்தர்கள் தமது கடமையினை சிறந்த முறையில் மேற்கொள்ளவில்லை என்பதனையும் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேசங்களில் இடப்பட்டுள்ள கொன்றீட் வீதிகள் சரியான முறையில் போடப்படாமையினால் பல்வேறு சிரமங்களுக்கு மக்கள் முகம்கொடுத்து வருகின்றனர். உதாரணமாக மழை காலங்களில் வெள்ள நீர் வற்றாமல் அல்லது வடிந்தோட முடியாமல் போடப்பட்டுள்ள வீதிகளை நாம் காணலாம் இவ்வாறான குறைபாடுகள் எதிர்வரும் காலங்களில் வீதி செப்பனிடும் விடயங்களில் தவிர்க்கப்பட வேண்டும்.

இதனை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நீங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்தி செயற்பாடுகளை கடந்த காலங்கள் போலல்லாது சிறந்த முறையில் கண்காணித்து அதற்கான செயற்திட்டங்களை வடிவமைத்து மக்களுக்கு பயன்படக்கூடியவாறு தமது திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.

அவ்வாறு நீங்கள் செயற்படும் பொழுது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கொந்திராத்துகாரர்கள் தமது நிறுவனத்துக்கு வர வேண்டிய நிதி இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தினால் தனது வேலைகளை சிறந்தமுறையில் மேற்கொள்வார்கள்.

காத்தான்குடி பிரதேசத்தில் மத்திய அரசுக்கூடாகவும் கிழக்கு மாகான சபையுடாகவும் வீதி அபிவிருத்தி பாடசாலை அபிவிருத்தி பூங்கா அபிவிருத்தி போன்ற பல அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டும் நடைமுறைப்படுத்தவும் உள்ளது.

எனவே நீங்கள் கடமை புரியும் கிராம சேவகர் பிரிவுகளில் என்னென்ன திட்டங்கள் பிரதேச செயலகத்தினூடாகவா அல்லது நகர சபையினூடாகவா நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதனை நீங்கள் அறிவீர்கள் அவ்வாறான திட்டங்களை வாரத்தில் 2 அல்லது 3 முறை நேரடியாக சென்று பார்வையிட்டு கண்காணிப்பதனூடாக அபிவிருத்தி திட்டங்கள் எமது மக்கள் பிரயோசனமடையக் கூடியதாக அமையும், ஏனெனில் எமது பிரதேசத்தில் கடந்த காலங்களில் சிறந்த திட்டமிடல், கண்காணிப்பு மேற்பார்வை இல்லாமையினால் சில வீதிகள் இரு முறையும், போடப்பட்ட வீதிகள் உடைக்கப்பட்டு மீண்டும் கொங்றீட் இடப்பட்டு பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டிருப்பதனை அறிவோம். அதேபோன்று வடிகான்களுக்கு இடப்பட்டுள்ள மூடிகள் தரமற்று காணப்படுவதனால் வாகனங்கள் செல்லும்போது அவைகள் சேதமடைந்து மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதனையும் அறிவோம் அதற்கு காரணம் நாம் அதனை சரியான முறையில் கண்காணிக்காமல் விட்டமையே, அதன் காரணமாக திட்டங்களை நடைமுறைப்படுத்தும் கொந்திராத்துக்காரர்கள் தரமற்ற மோசமான மூடிகளை இட்டார்கள்.

எனவே நீங்கள் நேரடியாக சென்று அதன் தரத்தினை பார்வையிடுங்கள் அதில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் அல்லது கொந்திராத்துக்காரர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தால் அதனை உடனடியாக அறிக்கை வடிவில் உயர் அதிகாரிகளுக்கு அறிவியுங்கள் அதனது பிரதி ஒன்றினை எங்களுக்கு அனுப்புங்கள் அதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ச்சியாக மேற்கொள்வோம்.

அதேபோன்று நீங்கள் அவதானித்து உங்கள் பிரதேசத்தில் தேவைகளை அறிந்து எதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமோ அதற்கு முன்னுரிமைப்படுத்தி அதனை சிறந்தமுறையில் செயற்படுத்தி மக்களுக்கு பிரயோசனப்படும் திட்டாமாக நாம் அதனை மாற்றி அமைக்கவேண்டும் என்று பல்வேறுபட்ட விடயங்களை எடுத்துரைத்து அதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. M. சிவராஜா, மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

HRS_5684

LEAVE A REPLY