வடக்கோடு கிழக்கிற்கு நடந்த திருமணம்

0
160

250px-Sri_Lanka_North_Eastern_Province_locator_map.svgஇலங்கை தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் நிறைவுற்றாலும் அது தமிழ் மக்களிடையே தங்களது உரிமைக் கோசங்களை வலுவாக விதைத்துச் சென்றுள்ளது.

இன்று த.தே.கூ தங்களது தீர்வுத் திட்டங்களை நோக்கி நகர்வதற்கு விடுதலைப் புலிகளின் போராட்டம் தான் பிரதான காரணம் என்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது. விடுதலைப் புலிகளின் முதன்மை இலக்கு வடக்கையும் கிழக்கையும் இணைத்த தமிழீழமாகவே இருந்தது.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டமையானது அவர்களது தமிழீழக் கனவை அடைவதற்கான முதற் சமிஞ்சையாக இருந்தது. இருப்பினும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வட கிழக்கு இணைப்பு என்பது தற்காலிக இணைப்பாகவே இருந்தது.

இதன் நிரந்தர இணைப்பிற்கு 1988.12.31 இற்குள் கிழக்கு மாகாணத்தில் ஒரு பொது வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. கிழக்கு மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு நடாத்தப்படும் போது அவ் வாக்கெடுப்பு தோல்வியைச் சந்திக்கும் என்பது கண்கூடு.

இதனை பிரதானமாக மக்களின் வெளிப்பார்வைக்கு சமர்ப்பித்தே விடுதலைப் புலிகள் இவ் ஒப்பந்தத்தை எதிர்த்திருந்தனர்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டில் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு, கிழக்கை ஒரு போதும் விரும்பியிருக்கவில்லை. இந்திய அரசு உள ரீதியாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முயன்றிருந்தால் குறைந்தது வடக்கு, கிழக்கை நிரந்தரமாக இணைத்து தீர்வை வழங்க முயற்சித்திருக்கும்.

இலங்கையின் அரசியலமைப்பையே மாற்றி தமிழர்களுக்கான தீர்வுப் பொதிகளெனும் பெயரில் பல சவால்களுக்கு மத்தியில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்ட போது இதனைச் செய்வதொன்றும் பெரிதான விடயமுமல்ல. இது இந்திய அரசு இவ் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களின் நலனில் கூட உளரீதியாக செயற்படவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

இவ்விடயத்தில் இந்தியா பூகோள ரீதியான நலன்களை நோக்காகக் கொண்டு செயற்பட்டதா என்பதே இதனைத் தொடர்ந்தெழும் வினாவாகும்.

இவ் இணைப்பானது இலங்கைத் தமிழர்களின் முழுப் பசியையும் ஆற்றாது போனாலும் முன் பசியை தீர்த்துக்கொள்ள ஏதுவாக அமைந்திருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்கள் சிறு விகிதமே வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக இவ் இணைப்பின் தொடர்ச்சியை கிழக்கு மாகாண சிங்கள மக்கள் தங்கள் தனித்துவத்திற்கான சவாலாக பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை.

இச் செயற்பாட்டை பேரின மக்கள் இலங்கை நாட்டைப் பிரித்து தமிழீழம் அமைப்பது போன்று கருதியதால் பேரின மக்களிடையே தேசிய ரீதியான அதிர்வலையை தோற்றுவித்திருந்தது. இவ்விடயத்தை முன்னின்று செயற்படுத்திய முன்னாள் இலங்கை அதிபர்களில் ஒருவரான ஜே.ஆர் ஜெயவர்த்தன பிற்பட்ட காலப்பகுதியில் இதன் விளைவுகளை உணராமலுமில்லை.

பேரின மக்களின் இவ் அச்சத்திற்கு இவ் ஒப்பந்தம் கைச் சாத்திடப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் (1976.05.14ம் திகதி) அனைத்து தமிழ் கட்சிகளின் தலைமைகளும் இணைந்து வட்டுக்கோட்டையில் வைத்து தமிழீழத்தை பிரகடனம் செய்திருந்தனர்.

இதே கொள்கையில் இறுதிவரை விடுதலைப் புலிகளும் உறுதியாக இருந்தனர். இவ் ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகளைத் தவிர ஏனைய அனைத்து தமிழ் தலைமைகளும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

இப்படி இருக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கும் போது சாதாரண பேரின மக்களிடையே அச்சம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். விடுதலைப் புலிகள் தவிர்ந்து ஏனைய தமிழ் தலைமைகள் இதனை ஏற்றுக்கொண்டமைக்கு இந்தியாவுடன் மோதுமளவு அவர்களிடம் வலிமை இல்லாமையும் ஒரு காரணமாகக் குறிப்பிடலாம்.

இலங்கை அரசு வடக்கு, கிழக்கை இணைத்து ஒரு தீர்வுப் பொதியை வழங்குவதானது தமிழீழக் கனவை தங்கள் உள்ளங்களில் பதித்து வைத்துள்ள தமிழ் மக்களின் உள்ளங்களில் வடக்கு, கிழக்கு தங்களது தாயகம் என்ற தமிழீழக் கோசத்தை மேலும் வலுக்கவும் செய்திருக்கும். இது இலங்கை தேசியத்திற்கு சற்று பாதிப்பானது.

தமிழ் மக்களின் உள்ளங்களில் இவ்வாறான சிந்தனைகள் கருக்கொண்டாலும் இலங்கை அரசியலமைப்பு மாகாண சபைகளுக்கு வழங்கும் அதிகாரம் மூலம் அவர்களின் தமிழீழக் கனவை சுவைத்துக்கொள்ள அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

மாகாண சபைகளின் அனைத்து விடயங்களுக்கும் ஆளுநரின் அனுமதி அவசியம். இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டாலும் அதனை மத்திய அரசு மாகாண சபைக்கு வழங்காது தங்களது கைக்குள் வைத்திருக்கும் சட்டங்களும் அரசியலமைப்பில் உட்புகுத்தப்பட்டிருந்தன.

வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் தமிழர்களின் கைகளுக்குச் சென்று அவர்களால் ஏதேனும் சாதிக்க முடியுமாக இருந்தால் 1988ம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் சாதித்திருப்பார்கள்.

எதுவும் செய்ய முடியாத நிலையில் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதல் முதலமைச்சரான வரத ராஜப் பெருமாள் தமிழீழத்தைப் பிரகடனம் செய்துவிட்டு ஓடி ஒழித்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இணைந்த வடக்கு, கிழக்கின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தமிழீழத்தைப் பிரகடனம் செய்தவுடன் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைக் கலைத்து மத்திய அரசின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தார்.

இங்கு நான் கூற வரும் விடயம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதன் மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த குந்தகமும் வராது என்பதாகும்.

இவ்விடயமானது தமிழர்களின் தொடர் போராட்டத்திற்கும் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையாக உருவெடுத்த பல தமிழ் விடுதலை இயங்கங்களின் ஆயுதங்களை களைவதற்கும் இலங்கை அரசுக்கு மிக இலகுவாக அமைந்ததால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு உறுதுணையாக அமைந்தது என்றாலும் தவறில்லை.

இதனை அன்று இந்திய அரசு கையாளாது இலங்கை அரசு கையாளப் போயிருந்தால், இலங்கை அரசு மிகப் பெரும் விலை கொடுக்க வேண்டி நேரிட்டிருக்கும். மஹிந்த அரசு விடுதலைப் புலிகளுக்கெதிராக யுத்தம் செய்து படும் பாடு யாவரும் அறிந்ததே. போலிப் பணத்தை நம்பி பொருள் கொடுத்தால் கசக்குமா என்ன?

கிழக்கு முஸ்லிம்கள் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றக் கூடிய நிலையுள்ளது. இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்து இடம்பெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளின் படி கிழக்கு முதலமைச்சராக ஒரு முஸ்லிமே வரக் கூடிய நிலை இருந்தும் முஸ்லிம் கட்சிகளின் இயலாமை காரணமாகவும் (இது விடயத்தில் மு.காவை குறை கூற முடியாது. இதற்கான முழுப் பொறுப்பும் தே.கா, அ.இ.ம.கா, அமைச்சர்களான பௌசி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரையே சாரும்), மஹிந்த அரசு தமிழர்களை திருப்திப்படுத்தவும் முஸ்லிம்களைப் புறக்கணித்து அம் முதலமைச்சை பிள்ளையானுக்கு வழங்கி இலங்கை அரசு தமிழர்களுக்காக முஸ்லிம்களை நிராகரித்த வரலாற்றை மீண்டுமொரு தடவை பதிவாக்கியது.

13989538_645655508935578_2040750870_nஇரண்டாவது இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இரு தடவைகளும் (மைத்திரி ஆட்சிக்கு முன், பின்) ஒரு முஸ்லிமே முதலமைச்சராக தெரிவாகியிருந்தார்.

இங்கு நான் குறிப்பிட வரும் விடயம் பிரிந்த கிழக்கில் இடம்பெற்ற இரு தேர்தல்களிலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்குரிய சாதக நிலை இருந்தது என்பதாகும்.

கிழக்கு முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே ஆளச் சாத்தியமான கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைத்ததன் மூலம் இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் சிறிதேனும் தாக்கம் செலுத்த இயலாதளவு தமிழர்களின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டார்கள்.

வடக்கு,கிழக்கு இணைக்கப்பட்டதன் மூலம் இனரீதியாக முஸ்லிம்கள் மாத்திரமே தங்கள் தனித்துவத்தை இழக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வடக்கு, கிழக்கு இணைப்பின் தொடர்ச்சி சாத்தியமல்ல என்றிருந்தாலும், இலங்கை அரசு தமிழர்களின் தீர்விற்காக கிழக்கு முஸ்லிம்களை பலி கொடுக்க தயாராக இருந்தது என்பதுதான் இதில் பொதிந்துள்ள முக்கிய விடயமாகும்.

இலங்கை அரசியலமைப்பு அனைத்து இனங்களுக்கும், மதங்களுக்கும் சம உரிமையையே வழங்குகிறது. இப்படி இருக்கையில் இச் செயற்பாடு ஒரு இனத்திற்காக இன்னுமொரு இனம் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கூறி நிற்கின்றது.

இது ஒரு விதத்தில் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும்.இது தற்காலிக இணைப்பாக இருந்தாலும் இரண்டு தசாப்தங்கள் இந்த அடிமை விலங்கிலிருந்து முஸ்லிம்களை யாராலும் விடுவிக்க முடியவில்லை. முஸ்லிம்களின் தற்போதைய நிலைமைகளுடன் ஒப்பிடும் போது அப்போது இலங்கை அரசுக்கு பெரிதான அழுத்தங்கள் இருக்கவில்லை.

தற்போது நாம் இது விடயத்தில் மிகக் கவனமாக செயற்பட வேண்டும். சற்று சலித்தாலும் எம் மீது மீண்டுமோர் அடிமைச் சாசனம் எழுதப்பட்டுவிடும்.

இலங்கை அரசியலமைப்பின் 154-அ-3 யில் இந்த உறுப்புரையின் முற் போந்த ஏற்பாடுகளில் உள்ளது எது எப்படியிருப்பினும், அருகருகாவுள்ள இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண சபையையும், ஆளுநர் ஒருவரையும், பிரதான அமைச்சரையும்.

அமைச்சர் சபையொன்றையும் கொண்ட நிருவாகப் பிரிவொன்றை அமைப்பதற்கும் அத்தகைய மாகாணங்கள் தொடர்ந்து ஒரே நிருவாகப் பிரிவாக நிருவகிக்கப்பட வேண்டுமா அல்லவா என அல்லது அதன் சொந்த மாகாண சபையும், தனியான ஆளுநரையும் பிரதான அமைச்சரையும் அமைச்சர் சபையையும் தனியான நிருவாகப் பிரிவாக அத்தகைய மாகாணம் ஒன்று அமைய வேண்டுமா அல்லவா எனத் தீர்மானிப்பதற்கும் பாராளுமன்றம் ஏதேனும் சட்டத்தின் மூலம் அல்லது சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யலாம் எனக் கூறுகிறது.

இந்த அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவே வடக்கையும் கிழக்கையும் இலங்கை அரசு பிரித்திருந்தது.

எப்போது இவ் ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டதோ அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்கள் மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளை முன் வைத்தே வருகின்றனர்.

அன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பிலான அமிர்தலிங்கத்தின் உரைகள் பாராளுமன்றை அதிர வைத்திருந்தது. ஒன்று கிடைத்த மறு கணம் அடுத்த படியை நோக்கி தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் காய்களை செவ்வனே நகர்த்துகின்றனர்.

பிற்பட்ட காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு அவற்றை இணைத்த முறைமையின் பிரகாரம் பிரிக்கப்பட்டது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை இணைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தமிழ்த் தலைமைகள் அவர்கள் விடயங்களில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.

ஆனால், முஸ்லிம் தலைமைகள்..? தமிழ் தலைமைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்று எவ்வளவு பலமாக போராடுகிறார்களோ குறைந்தது அவர்கள் அளவாவது முஸ்லிம் தலைமைகளும் தங்களுக்குத் தேவையானவற்றை பெற்றுக்கொள்ள போராட வேண்டும். அவர்களின் போராட்டத்திற்கு உதவ பலர் காத்து நிற்பதால் எமது போராட்டம் அவர்கள் போராட்டத்தை விட பல மடங்கு வீரியத்துடன் இருப்பது பொருத்தமானது.

மக்கள் விடுதலை முன்னணி 2006ம் ஆண்டு உயர் நீதி மன்றில் வழக்குத் தாக்கலைச் செய்து இணைந்த வட கிழக்கைப் பிரித்திருந்தது, வடக்கு, கிழக்கை இணைக்கும் போது கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு மக்கள் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென்ற நிபந்தனை அங்கே குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆட்சிக்கு வந்த எந்த ஆட்சியாளர்களும் இந்த பொது வாக்கெடுப்பை நடாத்த முன் வரவில்லை. மக்கள் விடுதலை முன்னணி கிழக்கை வடக்கோடு இணைத்தமையானது கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறியே வழக்குத் தாக்கலைச் செய்திருந்தது. முஸ்லிம்களின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது என்றாலும் தவறில்லை.இந்த வேலையை உண்மையில் யார் செய்திருக்க வேண்டும் என முஸ்லிம் சமூகம் ஒரு கணம் சிந்தித்திக்கொள்ள வேண்டும்.

பதிமூன்றாம் சீர் திருத்தத்திற்கும் அப்பால் சென்று தமிழ் மக்கள் தங்களது தீர்வை சிந்தித்துக் கொண்டிருந்த போதும் வடக்கு, கிழக்கை பிரித்து முஸ்லிம்களின் அடிமைச் சாசனத்தை இல்லாதொழிக்க வழி இருந்தும் அதற்கு மு.கா முயற்சிக்காது முஸ்லிம்களின் அடிமைச் சாசனத்தை மக்கள் விடுதலை முன்னணி நீக்கியமை முஸ்லிம் அரசியல் தலைவர்களின் இயலாமையை புடை போட்டுக் காட்டுகிறது.

உயர் நீதி மன்றம் ஆளும் ஜனாதிபதிக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. அன்று ஜனாதிபதிகியிருந்த சர்வதிகாரம் மூலம் (பத்தொன்பதாம் அரசியலமைப்பிற்கு முன்பு) வேண்டுமென்றால் குறித்த நீதிபதிகளை நீக்கியிருக்கலாம்.

எத்தனை நீதிபதிகளை மாற்றினாலும் இவவிரு மாகாணங்களையும் இணைத்த முறைமையின் பிரகாரம் ஒன்று கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென அல்லது இவ்விணைப்பு செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.

யாராவது உயர் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தால் அது முஸ்லிம்களின் பக்கம் சாதகமாக அமைந்திருக்கும். இலங்கையின் உயர் நீதி மன்றமானது பாராளுமன்றத்தைக் கூட கட்டுப் படுத்தும் ஆற்றல் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வரலாறு சொல்லும் படிப்பினையில் ஒன்று தான் மறைந்த மு.காவின் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் உட்பட எமது முஸ்லிம் தலைமைகள் இவ்விடயத்தில் சரியாக அணுகு முறைகளைக் கையாளவில்லை என்பதாகும்.

குரல் கொடுப்பதால் மாத்திரம் அனைத்து விடயங்களையும் சாதித்து விட முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கெதிராக அஷ்ரப் அதிகம் குரல் கொடுத்தார்

.பின்னர் நிலத்தொடர்பற்ற மாகாணம், தென் கிழக்கு அலகென தனது பாதையை சந்தர்ப்பத்திற்கேற்ப மாற்றிப் பயணித்தார். மரணிக்கும் வரை அவரது கோரிக்கைகளை அவரால் அடைந்துகொள்ள வில்லை. அஷ்ரப் நிலத்தொடர்பற்ற மாகாணம், தென் கிழக்கு அலகென தனது திசையைத் திருப்பியதால் வட கிழக்கு பிரிக்கப்படல் வேண்டும் என்ற சிந்தனை முஸ்லிம் மக்களிடையே மறக்கடிக்கச் செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.கா இணைந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு அதிகம் கரிசனை கொள்ளாமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம். 2005ம் ஆண்டுத் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மு.கா வெளியிட்ட ரணிலை ஆதரிக்க முடிந்தது ஏன்? என்ற மடலில் அமைச்சர் ஹக்கீம் அஷ்ரபின் கனவாக நிலத்தொடர்பற்ற மாகாண சபையையே குறிப்பிட்டுள்ளார்.

இது வடக்கு, கிழக்கு பிரிப்பதை விட இணைந்த வடக்கு, கிழக்கினுள் முஸ்லிம்களுக்கான ஒரு தனியலகே பொருத்தமான தீர்வாகக் கருதி மு.கா பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.

இணைந்த வட கிழக்கின் முதல் முதலமைச்சான வரதராஜப் பெருமாள் இலங்கை தேசியத்திற்கு பாதிப்பான தமிழீழத்தை பிரகடனம் செய்ததன் காரணமாக இலங்கை மத்திய அரசு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை தனது அதிகாரத்திற்குள் கொண்டு வந்தது.

இதன் பிற்பாடு இணைந்த மாகாண சபைகள் பிரியும் வரை அரசு மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தவில்லை. இதன் விளைவாக இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாதிப்புக்கள், புறக்கணிப்புக்களை முஸ்லிம்கள் எதிர் நோக்கவில்லை.

இதுவும் இக் கோரிக்கை மறைந்து சென்றதற்கான காரணங்களில் ஒன்றாகும். உயர் நீதி மன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்ட இணைந்த வடக்கு, கிழக்கை தாங்கள் தான் பிரித்தோம் என இக் குறித்த பிரிப்புடன் சம்பந்தப்பட்ட வழக்குடன் சிறிதேனும் சம்பந்தப்படாத சிலர் மேடைகளில் கூறியும் திரிகின்றனர்.

அன்று முஸ்லிம்கள் மீது இடப்பட்ட அடிமை விலங்கு இன்று முஸ்லிம்கள் தங்களது எதிரியாகக் கருதும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்திலேயே உடைத்தெறியப்பட்டிருந்தது.

இந்த அடிமை விலங்கிலிருந்து இலங்கை முஸ்லிம்களை காப்பாற்ற தனதுயிரை துச்சமாக மதித்து வழக்குத் தாக்கல் செய்த ஒரே ஒரு முஸ்லிம் சம்மாந்துறை ஏ.எஸ் முஹம்மத் புஹாரி ஆகும். இது இலங்கை வரலாற்றில் பதியப்பட்ட ஒரு சாதனை.

இன்று மு.கா முதலமைச்சை பெற்று தன்னை அலங்கரித்தது மட்டுமல்லாது மிகப் பெரும் பேரம் பேசும் சக்தியை பெற்றுக்கொண்டமைக்கும் இவரது முயற்சியே பிரதான காரணமாகும். முஸ்லிம்களுகாக இச் சாதனையைப் புரிந்த அவர் இன்று மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனைத்துத் தேர்தல்களில் களமிறங்குகின்ற போதும் அவருக்கு சொல்லுமளவு வாக்குகள் அளிக்கப்படுவதில்லை.

எமது சமூகம் அரசியலில் ஏமாற்றுபவர்களையே அதிகம் நம்புகிறது. கொள்கையில் நிலைத்திருப்பவர்களை கணக்கிலும் கொள்வதில்லை என்பதற்கு இதுவும் சான்றாகும்.

தொடரும் …

குறிப்பு: இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

LEAVE A REPLY