மட்டக்களப்பில் மக்கள் கருத்திறியும் அமர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எட்டவில்லை

0
120

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (9)இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வுகள் பற்றிய விழிப்புணர்வு மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில சமூக அமைப்புக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

நல்லிணக்கத்திற்கான பொதுமக்களின் கருத்தறியும் செயலணியின் மூன்று அமர்வுகள் ஏற்கெனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவடைந்துள்ளன. நான்காவதும் இறுதியுமான அமர்வு செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 16, 2016) மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின் தலைவர் ஏ. செல்வேந்திரன் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்; நல்லிணக்கத்திற்கான பொதுமக்களின் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட அமர்வுகள் இடம்பெறுவதற்கு முன்பதாக அதன் வலய மட்ட செயலணி, பொதுமக்களுக்கு எந்தவிதமான அறிவூட்டலையும் முன்கூட்டியே செய்திருக்கவில்லை. எனவே, இந்த அமர்வு நடக்கும்போது எதனை அங்கு முன்வைப்பது என்று தெரியாதவர்களாக மக்கள் அமர்வுக்கு வருகை தருகின்றார்கள்.

இது ஒருபுறமிருக்க புத்திஜீவிகளான 11 பேர் கொண்ட நல்லிணக்க ஆலோசனைகளைப் பெறும் பொறிமுறை தேசிய செயலணியின் ஒரு அங்கத்தவர் கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்று அமர்வுகளில் ஒரு அமர்வில் கூட சமுகமளிக்கவில்லை.

அது ஒருபுறமிருக்க மாவட்டத்துக்கான வலய மட்ட செயலணியின் தலைவரான சன்னி ஒக்கர்ஸ் என்பவரும் கூட இந்த அமர்வுகளில் ஒன்றிலாயினும் பங்கு கொண்டு மக்களின் கருத்துக்களைப் பெறுவதில் ஆர்வமூட்டாதது வருத்தமளிக்கிறது.

மக்களுக்கு ஏற்கெனவே இதுபற்றித் தெளிவூட்டப்பட்டிருந்தால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறிமுறைக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் இருந்தும் காத்திரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும்.

ஆகையினால், மட்டக்களப்பு மாவட்ட அமர்வுகள் காத்திரமான கருத்துக்கள் பெறுவதற்கான தெளிவூட்டல் இல்லாததால் தோல்வியடைந்ததாகவே கருதவேண்டியுள்ளது” என்றார்.

செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது அமர்வு வாழைச்சேனை பிரதேச செயலகத்திலும், இரண்டாவது அமர்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திலும், மூன்றாவது அமர்வு மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்திலும் இடம்பெற்று முடிந்துள்ள அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி  காலை 8:30 தொடக்கம் மாலை 4:30 மணிவரை இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வுகள் தொடர்பான மேலதிக விவரங்களை செயலணிக்குழுவின் 0114232857 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப் பொறிமுறைக்கு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் அக்கறை காட்டுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சரித்திரபூர்வமான இந்தக் கருத்தறியும் பொறிமுறை வடிவமைப்பு ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்று செயலணி அறிவித்துள்ளது.

சட்டத்துறை நிபுணரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பலவற்றின் முன்னாள் ஆணையாளருமான மனோரி முத்தட்டுவேகம  தலைமையிலான 11 பேர் கொண்ட செயலணி இந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களின் கருத்தறியும் அமர்வுகளை நாடெங்கிலும் நடாத்தி வருகின்றது.

இந்த செயலணியில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அதன் செயலாளராகக் கடமையாற்றுகின்ற அதேவேளை காமினி வியாங்கொட  விஷாகா தர்மதாஸ ஏளையமய  சாந்தா அபிமன்னசிங்கம், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு கே.டபிள்யூ ஜனரஞ்சன, மு. று. பேராசிரியர் தயா சோமசுந்தரம்  கலாநிதி பர்ஸானா ஹனீபா னுச. குயசணயயெ பேராசிரியர் கமீலா சமரசிங்ஹ மற்றும் மிராக் றஹீம் ஆசையம சுயாநநஅ ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாகக் கடமையாற்றுகின்றனர்.

அதன் நாடளாவிய வலய மட்ட செயலணியில் 92 பேர் அங்கத்தவர்களாக உள்ளார்கள்.

LEAVE A REPLY