தனிமனித மாற்றமே சமூக மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளி….

0
197

unnamed(M.T. ஹைதர் அலி)

நாட்டில் தற்போது அதிகமாக பேசப்படுகின்ற விடயம் ஊழலை ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும். கடந்த அரசாங்கத்தின் போது நிகழ்ந்த ஊழலை நிருபித்து நீதிக்கு முன் ஊழல் செய்தவர்களை நிறுத்த வேண்டும் என்று பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் அதனை பற்றி பேசும்போது இதனை அடிமட்டத்தில் இருந்து பேசவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. உதாரணமாக கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்யப்பட்டிருக்கின்றது, மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது என்று பேசும் நாங்கள், உண்மையில் அந்த விடயங்கள் எங்களில் இருந்து எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்ற விடயத்திற்கு விடைகான வேண்டிய அவசியம் இருக்கின்றது, இலங்கை நாட்டை பொறுத்தமட்டில் இப்பொழுது ஊழலை பற்றி பேசுகின்றவர்கள்கூட தங்களது வியாபாரங்களில் ஈட்டப்படுகின்ற சரியான இலாபத்தை அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாமல் அதனை மறைத்து செலவினங்களை அதிகமாக காட்டி உண்மைக்கு புறம்பான , குறைந்த இலாபங்களை வெளிப்படுத்தி அரசாங்கத்திற்கு வரவேண்டிய வரி பணத்தினை இல்லாமல் செய்வதும் ஒருவகையான ஊழல்தான்.

ஆகவே ஊழல் என்பது வெறும் பார்வைக்கு தெரிபவற்றை மாத்திரம் நாங்கள் வரையறுத்துவிட முடியாது. அதுமாத்திரமல்லாமல் அரசாங்கத்திற்கு எதிரக செயற்படுகின்ற விடயத்தில் பல வகையான விடயங்களை கூறமுடியும் உதாரணமாக ஒரு நபரை இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றிக்கு அனுப்புவதாக இருந்தால் அதற்கு தகுதியான கடவுச்சீட்டு ஒன்றினை பெறுவதற்காக ரூபாய் 25,000 தொடக்கம் 100,000 வரையிலான தொகைகளை இலஞ்சமாக கொடுப்பது இன்னுமொரு நபரை ஊழல் செய்வதற்கு தூண்டுகின்ற விடயமாகவே அதனை நாம் பார்கின்றோம்.

இவ்வாறு தங்களது தொழில் நிமித்தம் இவ்வாறான பணத்தை இலஞ்சமாக கொடுத்து கடவுச்சீட்டுக்களை பெற்று வீசா கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளுக்கு அதிக பணம்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவது என்பது ஊழல் மாத்திரமன்றி இன்னுமொருவரை இலஞ்சம் பெறுவதற்கு தூண்டும் ஒரு செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.

அத்துடன் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களிடம் வெளிநாட்டு நாணயங்களை குறிப்பாக அமெரிக்க டாலர்களை பணமாக கொடுத்து அனுப்புகின்ற அதாவது பணச்சலவை செய்கின்ற செயலானது நாட்டிற்கு செய்கின்றன ஒரு ஊழலும் மிகப்பெரிய மோசடியுமாகவே நாம் பார்கின்றோம்.

இதேரீதியில் பெறுமதிமிக்க சொத்தொன்றினை நகர்புறங்களில் 4 அல்லது 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கும்போது அதற்குரிய உண்மையான பெறுமதியை ஆவணங்களில் பதிவு செய்து அரசாங்கத்திற்குரிய வரியினை செலுத்தாமல் இருப்பதற்காகவும் அந்த பணத்தை எவ்வாறு ஈட்டினோம் என்பதை அரசாங்கத்திடம் இருந்து மறைப்பதற்காகவும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் இரண்டு வகையான ஊழல் உள்ளது.

அதில் முதலாவது தங்களது வருமானம் எவ்வாறு பெறப்பட்டது என்ற விடயத்தை விற்பவரும், வாங்குபவரும் அதனை மறைப்பதனூடாக அதிலே இருந்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியினை செலுத்தாமலும், இரண்டாவதாக வாங்குகின்ற பெறுமதி மிக்க காணி, கட்டிடங்கள் போன்ற சொத்துக்களின் பெறுமதியை குறைத்து காட்டி அரசாங்கத்திற்கு உண்மையாக செலுத்த வேண்டிய வரிப்பணத்தை செலுத்தாமல் தவிர்ப்பதனூடாக மிகப்பெரும் ஊழலில் ஈடுபடுகின்றனர்.

ஆகவே நாட்டில் இருக்கின்ற ஊழலினை முற்று முழுதாக ஒழிக்கவேண்டுமாக இருந்தால் அடிமட்டத்திலிருந்து வ்வ்வொரு தனிமனிதனும் இவ்வாறான ஊழல்களில் ஈடுபடாமல் அவதானமாக இருக்கவேண்டும், சின்ன சின்ன விடயங்களில் இருந்துதான் பெரும் பெரும் ஊழல்கள் ஆரம்பிக்கின்றன.

ஆகவே அடிமட்டத்தில் இருந்து மாற்றத்தை கொண்டுவருவதனூடாக மாத்திரம்தான் நாட்டிலே ஊழலை ஒழிக்க முடியும், இல்லாவிடின் இவ்வாறான ஊழல்களில் நாம் மேற்கூறியவாறு சிறிய சிறிய ஊழல்களைசெய்து பழகியவர்கள் தாங்கள் ஒரு அதிகாரத்தினை பெறுகின்ற பொழுது ஏற்கனவே இவ்வாறான ஊழலில் ஈடுபட்டவர்கள் அதிகாரத்தினூடாக கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிகப்பெரும் ஊழல்வாதிகளாக மாறுவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

எனவே அதிகாரத்தினை பெறுவதற்காக நாம் இன்னுமொருவர் மீது சேறுபூசுதல் என்ற விடயத்திற்கு அப்பால் சென்று நாம் எதனை செய்து இருக்கின்றோம், எவ்வாறு இந்த ஊழல்களிலிருந்து முற்றுமுழுதாக நாம் ஒதுங்க வேண்டும் என்கின்ற விடயங்களை முன்னிறுத்துவோமாக இருந்தால் இலங்கையில் இருந்து ஊழலை இல்லாமல் செய்யலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

அதேபோன்று நாம் பேசுகின்ற எவ்வாறான விடயமாக இருந்தாலும் அதனை நாம் பேசும்போது அந்த விடயத்தில் நாம் எவ்வாறு தூய்மையாக இருக்கின்றோம் என்று நம்மை நாம் ஒருகணம் கேட்க வேண்டும். உதாரணமாக கூறப்போனால் ஒரு ஊரில் மாற்றம் ஒன்றினை கொண்டுவரப்போகின்றோம் அல்லது ஒரு புரட்சியை செய்யப்போகின்றோம் என்று சொல்லும்போது அதிலே எமது பங்களிப்பு என்ன? அதில் நாம் எதனை செய்து இருக்கின்றோம்?அதிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும்? என்கின்ற கேள்விகளுக்கு விடை கண்டு விட்டுத்தான் மாற்றத்திற்கான கருத்தினை சமூக அரங்கில் முன்வைக்க வேண்டும், இல்லாவிட்டால் நாம் கூறும் கருத்து மக்களை ஏமாற்றி அரசியல் புரிகின்றார்கள் என்று யாரை குறை காண்கின்றோமோ அதே கூட்டத்தில்தான் நாமும் இருக்கின்றோம் என்பது ஊரறிந்த இரகசியமாக இருக்கும், இவ்வாறான செயற்பாடுகள் சமூகரீதியான மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய கருத்தாகவோ அல்லது சமூகத்தில் தாக்கத்தினை செலுத்தக்கூடிய கருத்தாகவோ ஒருபோதும் இருக்காது.

ஏனெனில் நாம் மாறுகின்ற பொழுதுதான் எம்மை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு நாம் பேசும் விடயங்களை மக்கள் எடுத்து நடக்கின்ற சமூகமாக மாறுவார்கள், அதனைவிடுத்து அத்தனை விடயங்களையும் நம்முள் வைத்துக்கொண்டு அதனை செய்யகூடாது என்று மக்களுக்கு கூறும்போது மக்கள் எம்மீது கேள்விகளை தொடுப்பதனூடக அவ்வாறான விடயங்களை தடுப்பதற்கு பதிலாக இன்னும் அதிகமானவர்கள் அந்தவிடயங்களை செய்வதற்கு ஊக்குவிக்கும் ஒரு செயலகமாறும் என்பதில் ஐயமில்லை.

ஒவ்வோர் தனி மனிதனுடைய மாற்றமே ஒட்டு மொத்த சமூகமாற்றத்திற்கான தொடக்கப்புள்ளி.

LEAVE A REPLY