(Details Attached) நாசமாகிறது காத்தான்குடி நகரசபை !!

0
226

(NFGG ஊடகப் பிரிவு)

02காத்தான்குடி நகர சபையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் நேற்று (12.08.2016) வெளியிடப்பட்ட ‘புதிய நாளை’ பத்திரிகையின் எழுத்து வடிவம் வாசகர்களுக்காக இங்கு முழுமையாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

* நகரசபையின் கையிருப்பிலிருந்த பல லட்சம் பெறுமதியான பொருட்கள் மாயம்.

* கொள்வனவுகளிலும் ‘டெண்டர்’ நடைமுறைகளிலும் பாரிய மோசடிகள்

* அபிவிருத்தி என்ற பெயரில் பொதுப்பணம் கொள்ளை.

* காணிக்கொள்வனவில் செயலாளரினால் இலட்சக்கணக்கில் திருட்டு.

* அனாவசிய நியமனங்களினால் பல மில்லியன் மக்களின் வரிப்பணம் நாசம்

* ஊழல் மோசடிகளுக்கு ஒத்துழைக்க மறுத்த ஊழியர்கள் ஓரங்கட்டல்.

05காத்தான்குடி நகர சபையில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் வீண் விரயங்கள் தொடர்பான எராளமான குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பில் ஆதாரபூர்வமான பல தகவல்கள் பல்வேறு தரப்பினர்களினதும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் எமக்கும் தரப்பட்டுள்ளது. நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படும் இந்த நிதி மோசடிகள், துஷ்பிரயோகங்கள் மிகவும் பாரதூரமானவை. நமது மக்களின் மீது நேர்மையான அக்கறை கொண்ட எவராலும் புறக்கணிக்கப்பட முடியாதவை. அது போலவே பொதுச்சொத்து என்ற அமானிதத்தின் பெறுமதியை தெரிந்த எந்தவொரு முஸ்லிமினாலும் இவற்றை அனுமதிக்கவும் முடியாது.

எமது காத்தான்குடி நகரசபையானது, கிட்டத்தட்ட ஐம்பத்தி ஐயாயிரம் மக்கள் தொகையினையும் 6.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்ட பிர தேச மாகும். ஏறத்தாழ 23000 வரி அறவிடப்படுகின்ற ஆதனங்கள் ( காணிகள், வீடுகள், கடைகள் , வர்த்தக ஸ்தாபனங்கள் அடங்கலாக ) இந்த நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ளன. அத்தோடு ஏனைய உள்;ராட்சி மன்றங்களோடு ஒப்பிடும் போது மிக வும் கூடுதலான அதிகரித்த வரியே காத்தான்குடி நகர சபையானால் அறவீடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஏனைய நகர சபைகளுடன் ஒப்பிடும் போது காத்தான்குடி நகரசபையானது பாரிய வருமானத்தினைக் கொண்டுள்ளது. இந்த வருட வருமான மதிப்பீட்டின் படி மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை யில் வரி வருமானத்தை இது கொண்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்காக கிடைக்கின்ற நிதிகள் என்பனவும் ஏராளமாகும்.

இவ்வாறு கிடைக்கின்ற வருமானமும் ஏனைய நிதிகளும் முறையாக பொறுப்புடன் கையாளப்படுமாயின் மக்களின் அன்றாட பிரச்சனைகள் பலவற்றிற்கான தீர்வுகளை தாராளமாக வழங்க முடியும். மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் கணிசமாக உயர்த்த முடியும். ஆனால் நடைபெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த நிதி மோசடி மற்றும் துஷ்பிரயோகங்கள் காரணமாக நகர சபை நிர்வாகமும் அதன் சேவைகளும் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. மக்களுக்கு நாளாந்தம் வழங்க வேண்டிய அடிப்படைத் தேவையான குப்பை அகற்றுதல், வடிகாண் பராமரிப்பு போன்ற சேவைகளைக்கூட கிரமமாக செய்ய முடியாமல் நகர சபை திண்டாடுகிறது. இதற்கு பொது மக்களே சாட்சிகளாய் இருக்கின்றனர்.

09மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகங்களும்

எமக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின்படி, நகர சபைக்கு சொந்தமான பெறுமதியான பொருட்களின் திருட்டு, அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் மோசடிகள், வாகன பராமரிப்பில் நடைபெறும் மோசடிகள், கொள்வனவுகளில் நடைபெறும் மோசடிகள், ஆளணி விடயங்களில் நடைபெறும் துஷ்பிரயோகங்களும் மோசடிகளும் என ஏராளமான மோசடிகள் நடைபெறு வதாக தெரிகிறது. பின்வரும் சம்பவங்களை சில உதாரணங்களாக சொல்ல முடியும்.

நகர சபை கையிலிருப்பிலிருந்து காணாமல் போயுள்ள பல இலட்சம் பெறுமதியான பொருட்கள்:

பல்வேறு வேலைத்திட்டங்களுக்காகவும் ஏனைய வகைகளிலும் நகர சபையின் கையிருப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருந்த பல லட்சம் பெறுமதியான பொருட்களும் வாகன உதிரிப்பாகங்களும் திருடப்பட்டுள்ளன. உதாரணமாக ஆற்றங்கரைப்பகுதியில் சில வருடங்களுக்கு முன்னால் கொகோ கோலா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சாக்கடை வடிகான் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கொள்வனவு செய்யப்பட்ட ஏராள மான நீர்க்குழாய்கள் நகர சபையின் களஞ்சிய சாலையில் இருந்துள்ளன. அவை கடந்த பல மாதங்களாக காணாமல் போயுள்ளன. அந்த வகையில் கிட்டத்தட்ட 50 திற்கும் அதிகமான குழாய்கள் அங்கிருந்துள்ளன. ஏறத்தாழ 9 இலட்ச ரூபாய் பெறுமதியான அவை அனைத்துமே திருடப்பட்டுள்ளன.

அது போலவே காத்தான்குடி பொது மைதானத்திற்கு அருகிலிருந்த பழைய கல்வி அலுவலக கட்டிடம் 2 வருடங்களுக்கு முன்னால் காத்தான்குடி நகர சபையினால் உடைத்து அகற்றப்பட்டது. கல்வித்திணைக்களத்தின் எந்தவொரு அனும தியும் பெறாமலேயே அது மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதிலிருந்து அகற்றப்பட்ட பல இலட்சம் பெறுமதியான இரும்புக்கூரை முகடுகள், கம்பிகள் ,மற்றும் கூரை ஓடுகள் ஜன்னல் மற்றும் கதவுகள் போன்ற பல மரப் பொருட்கள் நகர சபையின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளன. இவை அனைத்தும் தற்போது காணாமல் போயுள்ளன.

மேலும், சுனாமியின் பின்னர் நகரசபைக்கு கிடைத்த பௌசர் வாகனம் ஒன்றும் காணாமல் போயுள்ளதாகவும் இது தனியார் ஒருவருக்கு விற்கப்பட்டு பணம் பெறப்பட்டுள் ளாதாகவும் மற்றுமொரு முறைப்பாடும் கிடைத்துள்ளது.

அது போலவே நகர சபை வாகனம் ஒன்றினது பிரதான உடற்பாகம் (Body) புதிதாக பிரதியீடு செய்யப்பட்ட பின்னர் பழைய உடற்பாகமானது நகர சபையின் கையிலிருப்பில் இருந்திருக்கிறது. இதன் பெறுமதி ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. அதுவும் தற்பொழுது காணாமல் போயிருக்கிறது.

அது போலவே இதில் ஆச்சரியப்படத்தக்க மற்றொரு விடயம் ஒன்றும் உள்ளது. அதாவது, இப்பொருட்கள் அனைத்துமே உரிய ஆவணப்படுத்தல்கள் எதுவுமின்றியே நகர சபையின் கையிருப்பில் இருந்து வந்துள்ள நிலை யிலேயே இப்பொழுது இவை யாருக்கும் தெரியாமல் காணாமல் போயுள்ளன. உண்மையில் திருடப்படுவதற்கு ஏதுவாகத்தான் இவை இவ்வாறு ஆவணங்கள் எதுவுமில்லாமல் வைக்கப்பட்டிருந்தனவா என்ற சந்தேகம் இப்பொழுது வலுவாக எழுகிறது.

அதுபோலவே கையிருப்பில் இருப்பதாகக் கணக்குக் காட்டப்பட்ட பல பொருட்களும்கூட ‘அடிமாட்டு விலைக்கு’ விற்கப்பட்டுள்ளன. உதாரணமாக கடந்த வருடம் கையிருப்பேட்டின்படி நகர சபையில் பாவிக்கப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று இருந்துள்ளது. இது வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்கபப்பட்டுள்ளதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பல பொருட்கள் முறையான ஏல நடவடிக்கைகள் எதுவுமின்றி மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் மோசடிகள்:

மக்களின் வரிப்பணமான நகர சபையின் நிதியைக் கொண்டும் ஏனைய நிதிகளைக் கொண்டும் சிறிய மற்றும் பெரிய வேலைத்திட்டங்கள் பல மேற்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றிலும் பல வகையான நிதி மோசடிகள் தொடர்ந்தும் நடை பெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகி றது. உதாரணமாக ஒரு உள்ளக வீதி ஒன்றினை நகர சபை அண்மையில் புனரமைத்தது. இதற்காக 29 டிரக்டர் சல்லிக்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 29000 ரூபாய்கள் மட்டுமே ஆகும்.இதற்காக பயன்படுத்தப்பட்ட எந்திரம் ஆளணிகள் அனைத்துமே நகரசபைக்கு சொந்தமானவைகளாகும். ஆக, இவ்வீதிக்காக செலவு செய்யப்பட்ட தொகை 30000 இனை தாண்ட முடியாது. அப்படி இருக்கின்ற நிலையில் இவ்வீதி போடப்பட்டதற்காக 2 லட்ச ருபாய் அளவில் நகர சபை நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளது.

அது போலவே கடற்கரையில் அமைந்துள்ள புதிய மடுவத்தில் உயிர்வாயு சேகரிப்பிற்காக தாங்கி ஒன்றினை எதுவித முறையான திட்டமுமின்றி நகர சபை கட்டியது. இதற்காக பல மில்லியன் ரூபாய்கள் இது வரை செலவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மாத்திரம் 3-4 மில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தக்கட்டமைப்பு பாவிக்கமுடியாத நிலையில் ஏறத்தாள கைவிடப்பட்டிருக்கிறது.

மிக நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்த மாடறுக்கும் மடுவத்தை நவீன முறையில் அமைப்பதாகச் சொல்லி பொது மக்களிடம் பணம் அறவீடு செய்யப்பட்டு காணிவாங்கப்பட்டு மடுவம் அமைக்கப்பட்டது.

அதற்குப் பாரிய தொகை வெளி உதவிகளும் கிடைத்தன. ஆனால் அங்கு எந்த நவீனத்தையும் எம்மால் காண முடியவில்லை. பழைய முறையிலேயே புதிய மடுவமும் கையாளப்படுகிறது.

காணிப்பரப்பெங்கும் கழிவுகள் மண்னென்ணை கலந்து புதைக்கப்பட்டதன் காரணமாக பாரிய சூழல் சுகாதார அச்சுறுத்தல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

அந்த மடுவ வளவிற்குள் இருந்த தென்னை மரங்கள் அனைத்தும் வேகமாக இறந்து விடுவது இதற்கு நல்ல அத்தாட்சியாகும்.

வாகன பராமரிப்பில் நடைபெறும் மோசடிகள்:

நகர சபைக்கு சொந்தமான வாகனங்களை பராமரிப்பதிலும் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. உதாரணத்திற்கு சில விடயங்களை சொல்ல முடியும்.

துஊடீ வாகனத்தை ஒரு மணித்தியாலத்திற்கு இயக்குவதற்கு 9 லீற்றர் டீசல் மட்டுமே செலவு செய்யப்பட முடியும். ஆனால் மணித்தியாலயத்திற்கு 16 லீற்றர் டீசல் செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டள்ளது. இவ்வாறு எரிபொ ருள் பாவனைகளில் பெருந்தொகைப்பணம் மோசடி செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அது போலவே அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளின் சொந்த கொந்தராத்து வேலைகளுக்காகவும் ஏனைய தனிப்பட்ட வேலைகளுக்காகவும் துஊடீ இயந்திரம் எவ்வித கொடுப்பனவுகளுமின்றி மோசடியான முறை யில் பாவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நகர சபைக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகை வருமானம் இழக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் துஊடீ யினை ஓட்டிச்சென்ற சாரதிக்கு உரிய கொடுப்பன வும் விடுமுறை சலுகைகளும் நகர சபையினால் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கான எந்த வருமானங்களும் கிடைத்ததாக எந்தப்பதிவுகளும் இல்லை.

அது போலவே நகரசபைச் செயலாளரின் பாவனைக்கென உள்ள ‘பிக்அப்’ வாகனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருளளவு மாதமொன்றிக்கு 140 லீட்டர் ஆகும். ஆனால் 250 தொடக்கும் 400 லீட்டர் அளவு பாவனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி, மாதமொன்றிக்கு பல ஆயிரம் ரூபாய்கள் நகரசபைப் பணத்திலிருந்து வீண்விரயம் செய்யப்படுகிறது.

அது போலவே வாகன பராமரிப்பு செலவு விடயத்திலும் பாரிய மோசடிகள் நடைபெற்றுள்ளன. கடந்த வருடம் முழுவதற்குமான பராமரிப்பு செலவாக செய்யப்பட்ட தொகை 4.5 மில்லியன் ரூபாய்களாகும். இவ்வருடம் ஜூலை மாதம் வரை 3.5 மில்லியன் ரூபாய்கள் வாகன பராமரிப்பிற்கென செலவு செய்யப்பட்டுள்ளது. இப்படி செலவுகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் கூட நாளாந்தம் குப்பை அகற்றுவதற்கு 6 டிரக்டர்கள் மாத்திரமே பாவிக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. ஏனைய டிரக்டர்கள் இயங்க முடியாத நிலையில் முடங்கிக்கிடக்கின்றன.

மேலும் நகரசபைச் செயலாளரின் சொந்த வீட்டின் கட்டுமானப்பணிகளுக்காக நகர சபை வாகனங்களும் உபகரணங்களும் சில வேளைகளில் ஆளணிகளும் கூட பயன்படுத்தப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கொள்வனவுகளில் நடைபெறும் மோசடிகள்:

நகர சபையினால் மேற்கொள்ளப்படும் கொள்வனவுகளிலும் பாரிய நிதி மோசடிகள் நடை பெறுவதாக தகவலகள் கிடைத்துள்ளன. கடந்த மாரி காலத்தின் போது நகர சபைத்தொழிலாளிகளுக்கென 110 மழை அங்கிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதன் வழமையான சில்லறை விற்பனை விலை1690 ரூபாய் ஆகும். இதனை 25மூ விலைக்கழிவுடன் வழங்குவதற்கு சில விற்பனை முகவர்களினால் கூறுவிலை (Quotation) வழங்கப்பட்டுமிருந்தன. முறையான கேள்வி மனு மூலம் மொத்தமாக கொள்வனவு செய்யப்படும் பொழுது இன்னும் குறைவான விலையில் அதனை கொள்வனவு செய்யமுடியும். ஆனால் 25மூ கழிவுடன் கிடைத்த கூறு விலைகளையும் புறக்கணித்து விட்டே இவற்றை நகர சபை கொள்வனவு செய்திருக்கிறது. இதில் மாத்திரம் ரூபா 48000 க்கும் மேற்பட்ட பண மோசடி நடந்திருக்கிறது. (இன்னுமொரு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த RAINCO மழை அங்கிகளை விற்பனை செய்யும் உத்தியோகபூர்வ முகவர் நிலை யும் காத்தான்குடியிலேயே இருக்கும் போது இவை மட்டக்களப்பிலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன)

அது போலவே சாதாரண சிறிய பொருட்களை வாங்குகின்ற விடயங்களிலும் கூட தொடர்ச்சியான மோசடிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உதாரணமாக ஊகுடு மின்குமிழ்களின் அச்சடிக்கப்பட்ட விலை 550 ரூபாய் ஆகும். ஆனால் விலைக்கழிவோடு அதனை இன்னும் வகுறைவான விலைக்கு சாதாரணமாக 450 ரூபாவுக்கு வாங்க முடியம். இந்நிலையில் அச்சடிக்கப்பட்ட விலையிலேயே இந்த கொள்வனவுகளை நகர சபை மேற்கொண்டுள்ளது.

அது போன்று பிரின்டர்களுக்கான டோனர்கள் கொள்வனவு செய்வதிலும் தொடர்ச்சியான மோசடிகள் இடம்பெற்றுள்ளன. பாவிக்கப்பட்ட பழைய டோனர்களுக்கு மை நிரப்பிவிட்டு புதிய டோனர்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இவை நகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொள்வனவு மோசடிகளுக் கான சில உதாரணங்கள் மட்டுமேயாகும்.

காத்தான்குடி நகரில் பல கொள்வனவுகளை குறைந்த விலைகளில் செய்வதற்கு தாராளமான வாப்புக்கள் இருக்கின்ற போதிலும் அவற்றை கூடுதல் விலைகளுக்கு தொடர்ச்சியாக மட்டக்களப்பிலிருந்தே நகரசபை கொள்வனவு செய்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மடுவத்திற்கு அருகிலுள்ள சில காணித்துண்டுகளை நகரசபை செயலாளர் கொள்வனவு செய்துள்ளார். இதிலிலும் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் தொகைப் பணம் செயலாளரினால் மோசடியாகப் பெறப்பட்டுள்ளது.

‘டெண்டர்’ மோசடிகள்:

கொள்வனவுகளில் மோசடிகளை தடுப்பதற்காகவே ‘டெண்டர்’ எனப்படும் கேள்வி மனுக்கோரும் நடை முறை கள் அமுல்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த டெண்டர் நடைமுறைகளிலேயே பல மோசடிகளை செய்கின்ற சபையாக நகர சபை காணப்படுகின்றது. உதாரணமாக ஒவ்வொரு கொள்வனவிற்கும் தனித்தனியான கேள்விமனு கொரப்பட்டு பதிவுத்தபால் மூலம் கூறு விலைகள் பெறப்பட்டு, அவை கொள்வனவுக்குழுவினால் ஒரே நேரத்தில் பார்வையிடப்பட்டு, தரம் உறுதிப்படுத்தப்பட்ட குறைந்த விலை பொருட்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும். ஆனால் நமது நகர சபையின் நடவடிக்கைகள் தலை கீழானது.

ஒரே தபாலகத்திலிருந்து ஒரே வகை தொடரிலக்கத்தைக் கொண்ட சில கடித உறைகள் பதிவுத்தபால் மூலம் நகர சபையின் அதிகாரிகளினாலேயே அனுப்பி வைக்கப்படும். அவை வெற்றுக் கடித உறைகளாக இருக்கும் அல்லது கேள்வி மனு வழங்கப்பட வேண்டிய வெற்று கடிதத் தலைப்புகளாக இருக்கும். அவ்வாறு வரும் கடிதங்களைப் பதிவு செய்து விட்டு அவர்களே அவற்றை பிரித்து தமக்குத் தேவையான விலைகளை அதிலே குறிப்பிட்டு விடுவார்கள். அதன் பின்னர் தாம் ஏற்கனவே தீர்மானித்த கூடிய விலை களில் தாம் ஏற்கனவே தீர்மானித்த கடைகளிலிருந்து கொள்வனவுகள் மேற் கொள்ளப்படும்.

இதனைச் செய்வதற்கு தமக்கேற்ற ஒரு கொள்வனவுக்குழுவை நகரசபைச் செயலாளர் தயார் நிலையில் வைத்திருக்கிறார். இந்த மோசடிகளுக்கு ஒத்துழைக்காத சில ஊழியர்கள் அதிலிருந்து செயலாளரினால் அப்புறப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

டெண்டர் நடைமுறையினையே தமக்கு ஏற்றாப்போல் எப்படி நகர சபை மோசடியாக கையாள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. இன்னும் பல இது போன்ற மோசடிகள் நடை பெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஆளணி விடயங்களில் நடைபெறும் துஷ்பிரயோகம்:

நகர சபையின் கிரமமான பணியினைச் செய்வதற்கு அவசியமான ஆளணியாக 128 பேர் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதில் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் உட்பட சகல மட்ட தொழில் நுட்ப மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர். இருந்த போதிலும் தற்போதைய நகர சபையில் நிரந்தர ஊழியர்களாக 155 பேர் கடமை புரிகின்றனர். இதற்கான கொடுப்பனவுகள் அரசாங்கத்தினால் நேரடியாக வழங்கப்படுகின்றன. இந்த ஆளணியை வைத்துக்கொண்டு எவ்வித குறைபாடுகளுமின்றி மிக நேர்த்தியாக சபை நிர்வாகத்தினை செய்திருக்க முடியும். ஆனால் அதற்கு மேலதிகமாக 41 பேரை ஒப்பந்த அடிப்படையில் நகர சபை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, இதனை உள்ளுர் அரசியல்வாதிகளே செய்வதாகவும் தம்மால் இதனைக்கட்டுப்படுத்த முடியாதுள்ளது எனவும் நகர சபை செயலாளர் கைவிரிக்கிறார்.

வெளித்தோற்றத்தில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்படுவது போன்ற ஒரு தோற்றப்பாடு தெரிந்தாலும் மக்களின் ஒட்டு மொத்த நலனில் நின்று பார்க்கும் போது இதுவும் ஒரு பாரிய துஷ்பிரயோகமாகும். ஏனெனில் எந்தவித நியாயமுமின்றி மக்களின் வரிப்பணமே இங்கு வீண் விரயம் செய்யப்படுகின்றது. இப்படியான அவசியற்ற நியமனங்களின் காரணமாக வருடமொன்றுக்கு 1 கோடி ரூபாய் வரையில் மக்களின் வரிப்பணம் வீண்விரயமும் துஷ்பிரயோகமும் செய்யப்படுகிறது. இது மக்கள் நலனுக்கு விரோதமான தெட்டத்தெளிவான ஒரு நடவடிக்கையாகும்.

நகரசபைக்கு வரி செலுத்துகின்ற பொதுமக்களில் பெரும் பான்மையானவர்கள் நடுத்தரவர்க்கத்தினரும் ஏழைகளு மாவார்கள். தமது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யத்தக்க சேவைகளை நகர சபை வழங்கும் என்ற நம்பிக்கையுடனேயே பல சிரமங்களுக்கு மத்தியிலும் நகர சபைக்கு அவர்கள் வரி செலுத்துகின்றனர். இதனை ஒரு சில தனி நபர்களின் நன்மைக்காக செலவிடுவதென்பது மோசடியான நடவடிக்கையேயாகும். இன்னுமொரு பக்கத்தில் காத்தான்குடி நகர சபையைப் பொறுத்தவரையில் தேவையான ஆளணிக்கு மேலதிக மாக 27 பேர் கடமையாற்றுகின்றபோது அதற்கும் மேலதிகமாக 41 பேரை நியமிப்பதென்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத முறைகேடாகும்.

ஆக, மொத்தத்தில் தற்போது நகர சபையில் தேவைக்கு அதிகமாக 68 பேர் கடமை புரிகின்றார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் அலுவலகத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இப்படித் தேவையெதுவுமின்றி நியமிக்கப்பட்டவர்களின் காரணமாக ஒருவர் செய்கின்ற வேலையை 3 அல்லது 4 பேர் செய்கின்ற பரிதாபமான நிலை தோன்றியுள்ளது. இது மக்களுக்கு சேவை வழங்குவதிலுள்ள வினைத்திறனையும் கடுமையாக பாதித்திருக்கிறது. நகர சபைக்கு செல்கின்ற பொது மக்கள் அங்கு நிலவும் இந்த ஆளணி நெருசலினை கண்கூடாகக் கண்டு கொள்ளலாம்.

அது போலவே மேலதிக நேரக் கொடுப்பனவு விடயங்களிலும் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மோசடிகளைச் சகித்துக் கொள்ள முடியாத சில ஊழியர்கள் உள்ளுராட்சி ஆணையாளருக்குக் கூட இவை பற்றி முறையிட்டிருக்கிறார்கள். ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

நேர்மையான ஊழியர்களின் எதிர்ப்பு:

நகர சபை நிர்வாகத்தின் இந்த மோசடியான துஷ்பிரயோகம் நிறைந்த செயற்பாடுகளுக்கு அங்கு கடமையாற்றும் அத்தனை ஊழியர்களும் பொறுப்பல்ல. நகரசபைச் செயலாளரின் முழு ஒத்துழைப்புடனும் ஏனைய சில ஊழியர்களின் ஒத்துழைப்புடனுமே இவை நடைபெற்று வருவதாக தெரிகிறது. இவற்றைக் கண்டு வேதனைப்படுகின்ற பல ஊழியர்கள் தமது வேதனைகளை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக புழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்னும் சில துணிச்சலான ஊழியர்கள் நகர சபை செயலாளரிடம் மிகத் தெளிவாகவே தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கின்றனர். அவர்களது அந்த முயற்சிகளும் கூட எதுவித பலனையும் அளிக்கவில்லை.

உதாரணமாக மோசடியான சில கொடுப்பனவுகளுக்கான காசோலைகளில் கையெழுத்திட முடியாது என ஒரு ஊழி யர் மறுப்புத் தெரிவித்த போது நகர சபைச் செயலாளர் அந்த ஊழியரின் கையெழுத்து அதிகாரத்தை நீக்கிவிட்டு அந்தக் கொடுப்பனவைச் செய்திருக்கிறார். அதுபோலவே மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான ஊழல்களை சகித்துக் கொள்ள முடியாத மற்றுமொரு ஊழியர் உள்ளுராட்சி ஆணையாளருக்குக் கூட இதனை முறையிட்டிருக்கின்றார்.

இப்படியாக மக்களுக்கு நேர்மையாக சேவை வழங்க விரும்பும் ஊழியர்கள் அத்தனை பேரையும் ஓரங்கட்டிவிட்ட நிலையில்தான் நகர சபை செயலாளரின் தலைமையில் இந்த மோசடிகளும் தில்லுமுல்லுகளும் நடை பெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

08பொது நிறுவனங்களிடம் முறைப்பாடு:

நகர சபையில் நடைபெறுகின்ற இந்த ஊழல் மோசடிகள் தொடர்பாக நகர சபை ஊழியர் ஒருவரினால் பல தரப்பினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. நமது பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத் திடமும் இந்த முறைப்பாடு கொடுக்கப்பட்டிருந்தது. இது பற்றி உடனடியாக கவனமெடுத்து உடனடியான சில நடவடிக்கைகளில் அவர்களும் இறங்கினர்.

இதில் பிரதானமாக நகரசபை செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்து பொருத்தமான ஒருவரை நியமிக்கு மாறு ஒரு உறுதியான கோரிக்கையினை முதலமைச்சரிட மும் முன்வைத்தனர். நிலைமையின் பாரதூரத்தை புரிந்து கொண்ட முதலமைச்சரும் இதனை உடனடியாக செய்வதாக உறுதியளித்திருந்ததோடு நமதூரைச் சேர்ந்த திறமையும் நேர்மையும் கொண்ட தகுதி வாய்ந்த ஒருவரை நியமிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அவையெது வும் பின்னர் நடக்கவில்லை.

முதலமைச்சருக்கு நெருக்கமான உள்;ர் மாகாண சபை அரசியல்வாதியொருவரே நேரடியாகத் தலையிட்டு இதனை தடுத்து நிறுத்தியுள்ளார் என்பது பின்னர் நம்ப கமாக தெரியவந்துள்ளது. சம்மேளனத்திடம் முறை யிடுவதற்கு முன்பாக இந்த உள்ளுர் அரசியல் வாதியி டம் நகர சபை ஊழியர்கள் சிலர் பலமுறை நேரடியாக முறையிட்டும் இருக்கின்றார்கள். அவர் இந்த பாரதூரமான விடயங்களை கணக்கெடுக்காத நிலையில்தான் பொது நிறு வனம் என்ற அடிப்படையில் சம்மேளனத்திடமும் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. தமது சக்திக்கு உட்பட்ட நிலையில் சம்மேளனம் மேற்கொண்ட உடனடியான நடவடிக்கைகள் எதிர்பார்த்த விளைவுகளைத் இதுவரை தரவில்லையாயினும் அவை பாராட்டுக்குரியதுமாகும்.

தொடரும் மோசடிகளும் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதமும்:

காத்தான்குடி நகர சபையில் நடைபெறுகின்ற ஊழல் மோசடிகள் என்பது புதிய விடயங்கள் அல்ல. 2006 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடங்களாக இது பற்றி நாம் தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்பூட்டி வந்திருக்கின்றோம். பொதுமக்கள் கூட இந்த மோசடிகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தை தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்திருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த மோசடிகள் வெவவேறு கால கட்டங்க ளில் வெவ்வேறு அரசியல் வாதிகளின் ஆதரவுடனேயே நடந்து வந்திருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட கடந்த நிர்வாக சபைக் காலத்தின் போது நடைபெற்ற பல்வேறு மோசடிகளை நாம் தொடர்ச்சியாக அம்பலப் படுத்தி வந்திருந்தோம். கடந்த 2011 இல் புதிய நகரசபை நிர்வாகம் பொறுப்பேற்று நடைபெற்ற முதலாவது மற்றும் இரண்டாவது அமர்வின் போதே பாரிய நிதி மோசடி யொன்றினைக் கண்டு பிடித்து அம்பலப்படுத்தினோம்.

மக்கள் பிரதிநிதிகள் பெரும்பான்மையோர் அதனை ஏற்றுக்கொண்டு அக்கொடுப்பனவு நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் எடுத்தனர். ஆனால் அந்த சபைத் தீர்மானத்தையும் மீறிய வகையில் அக்கொடுப்பனவு நகர சபையினால் செய்யப்பட்டது.

இது பற்றிய முறைப்பாடுகளை உள்ளூராட்சியுடன் தொடர்புபட்ட சகல மேலிடங்களுக்கும் அறிவித்திருந் தோம். ஆனால் எவ்வித விளைவுகளும் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் அப்போது பிரதியமைச்சராக இருந்த ஒரு அரசியல்வாதி நகர சபையின் இந்த மோசடிகளுக்கும் தில்லுமுல்லுகளுக்கும் வழங்கிய ஆசீர்வாதமும் அடைக்கலமுமாகும். பழைய நிர்வாகம் முடிந்துள்ளது. முழு நாட்டிலும் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்ற ஆணையினை மக்கள் பெரும்பான்மையாக வழங்கியிருக் கின்றனர். இந்நிலையிலும்கூட நமது நகர சபையில் மோசடிகள் தொடர்கின்றதென்றால், அதற்குப்பின்னால் இன்னுமொரு அரசியல் வாதியின் ஆசீர்வாதமும் பாதுகாப்பும் இருக்கின்றது என்பதனை மறுக்க முடியாதுள்ளது.

நாம் மேற் கொண்ட நடவடிக்கைகள்:

நகர சபையின் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் சில மாதங்களுக்கு முன்னரே ஆதாரபூர்வமாக எமக்குக் கிடைத்திருந்தன. இந்த மோசடிகளுக்கு காரணமானவர்கள் மாகாண அதிகாரம் கொண்ட உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் சொந்த அரசியல் தேவைகளுக்காக பாதுகாக் கப்பட்டு வருகிறார்கள் என்பதனை பலரும் எம்மிடம் உறுதியாக தெரிவித்திருந்தனர். இதில் உடனடியாக தலை யீடு செய்யாது நாம் சிறிது காலம் எடுத்து நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வந்தோம்.

முதலாவதாக, சம்மேளனம் போன்ற பொது நிறுவனங்கள் இந்த விடயத்தை முறையாகக் கையாண்டு தீர்வு காணமுடியுமெனின் அது சமூகத்திற்கு நன்மையானதாகும். எனவே, அதற்கான கால அவகாசத்தை முதலில் வழங்க விரும்பினோம்.

இரண்டாவதாக , குறித்த அந்த உள்ளுர் அரசி யல் வாதிக்கும் இந்த விடயங்களின் பாரதூரத்தினை எடுத்து ணர்த்தி அவரது ஒத்துழைப்புடனேயே இதற்குத் தீர்வைக் காண்பது மற்றுமொரு சிறந்த வழி யெனக் கருதினோம். அதற்கான சில முயற்சிகளையும் மேற் கொண்டோம். குறித்த அந்த அரசியல் வாதிக்கு நெருக்கமான ஒரு தரப்போடு தொடர்பு கொண்டு அவர்களைச் சந்தித்து நகர சபையின் விடயங்களின் பாரதூரத்தை எடுத்துரைத்தோம். அவரிடம் இந்த விடயங்களை எடுத்துக்கூறி சமூகரீதியான பொறுப்புணர்வை அவருக்குணர்த்தி எல்லோருமாக அமர்ந்திருந்து கலந்தாலோசித்து கூட்டாக நடவடிக்கையொன்றினை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்திருந்தோம்.

சில நாட்களின் பின்னர் அவர்கள் எமக்கு அனுப்பிவைத்திருந்த பதிலில் அந்த அரசியல் வாதியிடமிருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லையெனத் தெரியவந்தது. அதன் பின்னர் நேரடியாகவே அவரோடு தொடர்பு கொண்டு இந்த விடயங்களை கலந்துரையாட முயற்சித்தோம். அதுவும் இதுவரை சாத்தியப்படவில்லை.

இந்நிலையிலேயே இதனை பொதுமக்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்:

எமக்குக் கிடைத்த குற்றச்சாட்டுக்கள் நம்பத்தகுந்தவை களாக இருந்த போதிலும் அவற்றை மேலும் உறுதிப்படுத்து வதற்காக சகல முயற்சிகளையும் இதற்கு முன்பாக நாம் மேற்கொண்டோம். அந்த வகையில் நகரசபைக்குச் சென்று நகர சபைச் செயலாளர், நகரசபைக் கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு உத்தியோகத்தர்களுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டு இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அவர்களது விளக்கங்களையும் பெற்றுக் கொண்டோம். இக்குற்றச்சாட்டுக்கள் பல தொடர்பில் அவர்களும் வழங்கிய ஒப்புதல்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலும் ஏனைய வழிகளில் எமக்குக் கிடைத்த சகல தகவல்களையும் தொகுத்துப் பார்க்கின்ற போது அவை நம்பக்கூடியதாகவே இருக்கின்றன.

இவ்வாறான ஆய்வுகளுக்கும் உறுதிப்படுத்தல்களுக்கும் பின்னரே பொதுமக்களின் முன்னிலையில் இந்த விடயத்தை சமர்ப்பிக்கின்றோம்.

இனியென்ன செய்வது..? நமது கடமை என்ன?

ஏற்கனவே இங்கு குறிப்பிட்டது போல் நகர சபையில் நடக்கின்ற ஊழல் மோசடிகள் என்பன புதிய விடயங்கள் அல்ல. ஆனால் ஊழலின் வடிவங்களும் பாரதூரத்தன்மை யும் புதிது புதிதாக வெளிவருகின்றன. நகர சபையின் நிதி அல்லது சொத்துக்கள் என்பன நமது சொத்துக்கள்; நமது மக்களின் சொத்துக்கள் என்பதனை நாம் தொடாந்தும் மனதில் வைத்திருக்க வேண்டும். இந்த அக்கறையும் விழிப்புணர்வும் இல்லாமல் போனதன் விழைவே இந்த மோசடிகள் தொடர்வதற்குக் காரணமாகும்.

எனவே இந்த மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற் கான முதல்வழி, பொதுச் சொத்துக்கள் மீதான நமது அக்கறையையும் அவதானிப்புக்களையும் அதிகரிப்பதாகும்.

இரண்டாவதாக, ஊழல் மோசடிகளுக்கு துணை போகும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும். அதில் பிரதானமானது அரசியல் வாதிகளினால் அல்லது கட்சிகளினால் ஊழல் மோசடிக்காரர்களுக்கு வழங்கப்படும் அடைக்கலமாகும். இந்த நிலைமையை இல்லாதொழிப்பதற்கான அழுத்தம் மக்களினால் மாத்திரமே அரசியல் வாதிகளுக்குக் கொடுக்கப்பட முடியும். ஏனெனில் அவர்களின் இருப்பும் அரசியல் வாழ்வும் மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது.

மூன்றாவதாக, நகரசபை நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் நகர சபைச் செயலாளரே அதற்குத் தலைமை தாங்குகின்ற அதிகாரமுள்ள அதிகாரியாக இருக்கிறார். இங்கே முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மோசடி குற்றச்சாட்டுக் களில் அவருக்கே பிரதான பங்கிருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் அப்பதவியில் இருக்கின்ற வரை அங்கு நடைபெறும் மோசடிகளை தடுத்து நிறுத்த முடியாதெனவும் விசாரணைகள் எதனையும் நடாத்த முடியாதெனவும் அக்கற கொண்டுள்ள அத்தனை பேரும் தெரிவிக்கின்றார்கள். எனவே இவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு திறமையும் நேர்மையும் கொண்ட புதிய செயலாளர் நியமிக்கப்பட வேண்டும்.

நான்காவதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நகர சபை நிர்வாகம் உருவான காலம் முதல் இது வரையும் நகர சபை ஊடாக மேற்கொள்ப்பட்ட நிதி நடவடிக்கைகள் அபிவிருத்தி வேலைகள் மற்றும் நியமனங்கள் தொடர்பில் ஒரு விரிவான விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

இதில் இரண்டு வகையான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். அதிலொன்று நகர சபையின் நிதி நடவடிக்கைகள் தொடர்பான கணக்காய்வாகும் (Financial Audit) ) மற்றையது நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான தொழில் நுட்ப ஆய்வாகும் (Technical Audit).

ஐந்தாவதாக, இந்த இரண்டு ஆய்வுகளும் ஒரு சுயாதீன நிபுணத்துவ குழுவொன்றினால் அல்லது நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படுவது கண்டிப்பான அவசியமாகும். இதனை நாம் இப்படி வலியுறுத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நகர சபையின் வெளிப்படையான பல மோசடிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கைகள் பல கடந்த காலங்களில் நடந்தேயிருக்கின்றன. ஆனால் அப்படி கணக்காய்வுக்காக வருகின்ற அதிகாரிகளே குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கின்ற ஆலோசனைகளையும் வழங்குகின்றார்கள் என்ற விடயமும் நம்பத் தகுந்த வகையில் எமக்குக் கிடைத்துள்ளது. அதனால்தான் இதுவரை அரசாங்க கணக்காய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு விசாரணைகளினதும் பலனாக எந்த வித மான நடவடிக்கைகளும் மோசடிக்காரார்களுக்கெதிராக மேற்கொள்ளப்படவில்லை.

எனவேதான் சுயாதீனமான ஒரு குழுவினால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது கண்டிப்பான அவசியமாகும்.

இறுதியாக, இங்கே மக்களின் பணமே கொள்ளையடிக்கப் படுகிறது. பொதுச் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. நிர்வாகம் சீர் குலைந்திருக்கிறது. இதனால் அடிப்படை சுகாதாரத் சேவைகளும் ஏனைய பல முக்கிய சேவை களும் சீரளிந்து வருகின்றன. ஏழை மக்கள் உட்பட பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவது அல்லது வீண் விரயம் செய்யப்படுவது பெரும் பாவமாகும். இதை செய்கின்றவர்கள் மாத்திரமன்றி இதைக் கண்டும் அமைதிகாப்பவர்கள் இந்த மோசடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் என அத்தனைபேருக்கும் இந்தப் பாவத்தில் பங்கிருக்கிறது.

இது வெறும் பொருளாதார மோசடி மாத்திரமல்ல. ஒரு சமூகத் துரோகமுமாகும் என்பதனை இதற்கு துணைபோகும் அல்லது இந்த மோசடிக் காரர்களை பாதுகாக்கும் அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் தப்பித்துக் கொண்டாலும் மறுமையில் இவர்கள் தப்பிக்கவே முடியாது என்பதனை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகப் பொறுப்பு என்கின்ற அமானிதத்தினைப் பறை சாற்றும் இஸ்லாமிய மார்க்கத்தை நம்புகின்ற மக்கள் 100 வீதம் வாழுகின்ற நமது பிரதேசத்தில் இது போன்ற மோசடிகளை இனிமேலும் அனுமதிப்பதா? சமூக அக்கறையுள்ள அனைவரும் ஒன்று பட்டு இதற்கான தீர்வினை உடனடியாக காண முன்வர வேண்டும்.

01 Puthiya Nalai_Aug 07 06 05 04 03

LEAVE A REPLY