இனவாத செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு முட்டுக்கட்டை: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
207

zajil add Hizbullah in Parliamentபொருளாதார ரீதியில் சுபீட்சமான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்திட்டங்களுக்கு, முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக அமைச்சின் திருத்த யோசனைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

“இன்று முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சில பௌத்த குருமார் – அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் – பேசி வரும் பேச்சுக்கள் மிக மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் வர்த்தக – பொருளாதார துறையை மேம்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளது. நாங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு கொண்டு வந்து அவர்களை இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

இந்நிலையில், ஒரு சில தீய சக்திகள் இந்நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றமடையக் கூடாது என எண்ணுபவர்கள் மீண்டும் இனவாதம் – மதவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தி நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே, மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் இனவாத செயற்பாடுகள் – அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொருளாதார ரீதியில் அரசு எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியாது போகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY