“நல்லாட்சிக் காலத்தில் கோழிக் கொட்டிலுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்” நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனைக் குழுவிடம் துயரப் பகிர்வு

0
101

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (1)“தற்போயை நல்லாட்சிக் காலத்தில் கோழிக் கொட்டிலுக்குள் வாழ்வதற்கான தெரிவைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை” என கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருக்கும் தனது கணவனை இழந்த விதவைப் பெண் துயரம் வெளியிட்டார்.

மட்டக்களப்பு ஏறாவூர்- மயிலம்பாவெளியைச் சேர்ந்த செபமாலை இராஜேந்திரம் (வயது 59) நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் முன்னால் தோன்றி தனது துயரங்களை வெளியிட்டார்.

இந்த செயலணியின் கிழக்கு மாகாண அமர்வு செவ்வாய்கிழமை (ஓகஸ்ட் 09, 2016) மட்டக்களப்பு வாழைச்சேனையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றபோது அவர் தனது யுத்தகாலப் பாதிப்புக்களையும் தற்போதைய நிர்க்கதி நிலையையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து செயலணிக்குழுவினரிடம் துயரத்தைப் பகிர்ந்து கொண்ட செபமாலை, “1991ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி பிற்பகல் 5 மணியளவில் நாம் வீட்டில் இருக்கும்போது படையினர் வந்து எனது கணவரைக் கைது செய்தனர். எனினும் சில மணித்தியாலங்கள் படையினரிடமிருந்து எனது கணவரை விடுவிக்க நான் போராடிப் பார்த்தேன் அது முடியவில்லை.

அன்று படையினர் கைது செய்து கொண்டு சென்ற கணவர் இப்பொழுது 25 வருடங்கள் கழிந்து விட்ட போதும் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. கணவனை இழந்த எனக்கு மரணப் பதிவும், 20 பேர்ச்சஸ் வளவும், 25 ஆயிரம் ரூபா பணத்தையும் அரசாங்கம் தந்தது.

விபுலாநந்தபுரம் எனும் அகதிகள் வாழும் எமது கிராமத்தில் எவருக்கும் சமுர்த்திக் கொடுப்பனவுகளும் இல்லை. காரணம் அந்த வளவுத் துண்டொன்றை அரசாங்கம் தந்திருப்பதனாலேயாகும்.

எனக்கு வசிப்பதற்கு ஒரு வீடு கூட இல்லை. எனது வாழ்வாதாரத்திற்கு கோழிகள் வளர்த்தேன். அவைகளும் நோயினால் செத்துமடிய இப்பொழுது கோழிக் கூண்டு இருந்த கொட்டிலை நான் வாழும் கொட்டிலாக மாற்றியிருக்கின்றேன். கை கால் நீட்டித் தூங்க எனக்கு ஒரு இடம் வேண்டும். புதிதாக குடிசை அமைக்க என்னிடம் வசதி வாய்ப்புக்கள் இல்லை.

எனது கணவன் உயிரோடு இருந்திருந்தால் நான் கோழிக் கொட்டிலை வீடாகப் பயன்படுத்தி அதிலே சீவிக்க வேண்டி வந்திருக்காது. எனது கணவரை படையினர் கைது செய்து கொண்டு செல்லும்போது நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்தேன். ஒரு உதவியும் இல்லாமல் அகதி வாழ்க்கையுடனேயே எனது வாழ்நாழ் முடிந்து விட்டது.

காணாமல்போனோரை விசாரணை செய்யும் அலுவலகம் அமைக்கப்படும் பொழுது அதிலே உள்ளுர் நிலவரங்களை நன்கு அறிந்த என்னைப்போல நன்கு பாதிக்கப்பட்டவர்கள் பணியில் இருக்க வேண்டும்.

உள்ளுர் நிலைமைகளும், பாதிக்கப்பட்ட அனுபவங்களும், மொழிவழக்கும், பூகோள அமைவிடமும் எதுவுமே தெரிந்தராதவர்களைப் பணிக்கமர்த்தினால் காணாமல் போனோர் பற்றிய விசாரணையும் கொஞ்சக் காலத்தில் காணாமலே போய் விடும்”என்றார்.

LEAVE A REPLY