(Photos) “நரியைக் கைது செய்” மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து இரவோடிரவாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

0
248

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

3‘பொலிஸாரே! இதுவா உங்கள் நியாயம்? பணமிருந்தால் எதுவும் செய்ய முடியுமா?’ என்ற பதாதையைத் தாங்கியவாறு நேற்று (11) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திரண்ட மட்டக்களப்பு திராய்மடு பிரதேச பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழமைக்கு மாறாக இரவு ஒன்பது மணியளவில் அதிகளவான பெண்கள் திரண்டு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொலிஸாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதனால் மட்டக்களப்பு மாநகரின் மையப் பகுதியான பொலிஸ் நிலையம் அமைந்துள்ள சனசந்தடி மிக்க சந்தியில் சிறிது நேரம் பதற்றமும் நிலவியது.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு திராய்மடு எனும் பிரதேசத்தில் உள்ள ‘நரி’ எனும் புனைப்பெயரால் அழைக்கப்படும் பிரபல வர்த்தகப் புள்ளியொருவர் நீண்டகாலமாக அடாவடித்தனம் புரிவதில் ஈடுபட்டுவந்துள்ளார்.

நேற்றும் குறித்த வர்த்தகரின் அடியாட்களான குழுவொன்றுக்கும் அதனை எதிர்க்கும் மற்றொரு குழுவிற்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

1இந்நிலையில் சில இளைஞர்கள் இந்த அடாவடித்தன வர்த்தகரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், பற்றி பொலிஸாருக்குத் தெரியவந்ததும் இளைஞர்களைத் தாக்கிய வர்த்தகர் உட்பட அவரது ஆதரவாளர் ஒருவரும் மற்றும் எதிர்ப்பு அணியிலுள்ள இளைஞர் குழுவைச் சேர்ந்த ஆறு பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்ட வர்த்தகர் காயமேற்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் காணாமல் போயுள்ளார்.

இதுபற்றி அறிந்து கொண்ட பிரதேச மக்கள் பொலிஸார்தான் அவரை வேண்டுமென்றே தப்பிச் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர் எனக் கூறி இரவோடிரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தப்பிச் செல்லவிடப்பட்ட வர்த்தகர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் ஆக்ரோஷமாகவும் உறுதியாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் உடனடியான பொலிஸ் அணியொன்று தலைமறைவாகிய வர்த்தகரைத் தேடும் பணியில் திராய்மடு கிராத்திற்கு அனுப்பப்பட்டபோதும் இன்று வெள்ளிக்கிழமை காலை வரை வர்த்தகரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பொலிஸார் மீது கடுப்பில் உள்ளார்கள்.

2 4 5

LEAVE A REPLY