பிறர் மூளையில் இயங்கும் மஹிந்த

0
178

(எம்.ஐ.முபாறக்)

unnamedகாற்றுள்ளபோது மாத்திரம் தூற்றிப் பழக்கப்பட்டவர்கள் காற்றில்லாதபோது தூற்றிக்கொள்ளமாட்டார்கள். இன்னொரு தடவை கற்று வரும்வரைக் காத்திருப்பார்கள். காற்றில்லாதபோதும் தூற்றுவதாக இருந்தால் அதற்கென்று ஓர் ஆளுமைப் பண்பு இருக்கின்றது. இல்லாவிட்டால் பிறர் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க வேண்டி வரும். மஹிந்தவின் அரசியலில் இதுதான் இப்போது நடக்கின்றது.

யுத்த வெற்றி என்ற காற்று அடித்தபோது நன்றாகத் தூற்றிக்கொண்ட மஹிந்த அந்தக் காற்று ஓய்ந்ததும் தூற்றுவதை நிறுத்திக்கொண்டார். அதற்கு பதிலாக பிறரின் வலையில் வீழ்ந்து ஆட்சியை இழந்தார். இன்றும் அதே நிலைதான் தொடர்கின்றது.

ஆளுமையற்றவர்கள் அதிக ஆலோசகர்களை நியமித்துக் கொண்டும் பிறர் மூலையைப் பாவித்துக் கொண்டும் நிர்வாகம் செய்வர் என்பதற்கு மஹிந்த சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றார்.

மஹிந்த அவரது ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் அவரது இரு சகோதரர்களான கோட்டாபேயும், பஸிலுமாகும். இவர்களின் துணையால் தம்பிகள் உடையான் படைக்கு அஞ்சான் என்பதுபோல் மஹிந்த நடந்துகொண்டார். இறுதியில் அந்தத் தம்பிமாரே அவரின் ஆட்சிக்கு ஆப்பாக அமைந்துவிட்டனர்.

2005 இல் மஹிந்த ஜனாதியாகப் பதையேற்றபோது அவரது அரசு அவ்வளவு பலமானதாக இருக்கவில்லை. ஏனைய கட்சிகளில் இருந்து ஆட்களை இழுத்து வந்து ஆட்சியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், 2006 இல் தொடங்கப்பட்ட புலிகளுக்கு எதிரான யுத்தம் மஹிந்தவுக்கு அதிஷ்ட காற்றைக் கொண்டு வரத் தொடங்கியதும் அதைக் கொண்டு அவர் ஆட்சியை பலப்படுத்தினார்.

யுத்த விவகாரத்தை கோட்டபேயும் அரசியல் விவகாரத்தை பசிலும் கையாளத் தொடங்கினர். யுத்தமும் வெற்றி பெற்று அரசியலும் நல்லமுறையில் பயணித்துக்கொண்டு சென்றதால் இந்த நல்ல நிலைமைக்கு காரணம் சகோதரர்கள் இருவரும்தான் என்று மஹிந்த நம்பத் தொடங்கினார். தொடர்ந்தும் அவர்களை நம்பி அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் மஹிந்த வளைந்து கொடுக்கத் தொடங்கினார். மஹிந்த அவர் பாட்டில் இருக்க சகோதரர்கள் இருவரும் நாட்டை ஆட்சி செய்தனர்; சீரழித்தனர்.

சகோதரர்கள் இருவரினதும் மோசமான நிர்வாகத் திறமை காரணமாக அரசு வீழ்ச்சியை நோக்கிச் சென்றதால் அதை ஈடு செய்வதற்காக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாட்டை சகோதரர்கள் முன்னெடுத்தனர். அதுவும் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் பாட்டிலேயே அதையும் விட்டுவிட்டார்.

இறுதியில் மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்தது. அதற்கு காரணம் அவரது சகோதரர்கள்தான் என்பதை மஹிந்த இறுதியில் உணர்ந்துகொண்டார். இதை மஹிந்த வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பி இருக்கின்றார்.

மஹிந்தவின் புதல்வர் நாமல்கூட தனது தந்தையின் ஆட்சி வீழ்ந்தமைக்கு சித்தப்பாக்களே காரணம் என்று பல தடவைகள் கூறி இருக்கின்றார். ஆட்சியில் இருந்தபோதுகூட நாமளும் பசிலும் முரண்பட்டுக்கொண்டே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாரு தனது தவறுகளை உணர்ந்தும்கூட-தனது தோல்விக்கு தம்பிமார்களே காரணம் என அறிந்தும்கூட மஹிந்த அவரைத் திருத்திக்கொள்வதாக இல்லை. அன்று பஸில் மற்றும் கோட்டா ஆகியோரின் வலையில் சிக்கிய மஹிந்த இன்று விமல் வீரவன்ஸ மற்றும் உதயகம்மன்பில ஆகியோரின் வலையில் சிக்கியுள்ளார். இன்று இவர்கள் இருவரும்தான் மஹிந்தவை முற்றுமுழுதாக இயக்கி வருகின்றனர்.

மஹிந்த, மஹிந்த என்ற நாமத்தை உச்சரித்து எவ்வளவு தூரம் மக்களின் செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளமுடியுமோ அவ்வளவு தூரம் பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் இருவரும் காய் நகர்த்தி வருகின்றனர்.

மஹிந்தவின் பெயரால் மஹிந்தவுக்குத் தெரியாமலேயே இவர்கள் பல வேலைகளை செய்து வருகின்றனர். நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்து அதற்கு மஹிந்தவை பிரதமராக நியமித்து அவரை டம்மியாக்கியது முதல் பல கீழ்த்தரமான வேலைகளை இவர்கள் செய்து வருகின்றனர்.

மஹிந்தவின் ஆட்சி கவிழ்வதற்கு இனவாதம் பிரதான காரணமாகும். கோட்டாபேயால் உருவாக்கப்பட்ட இனவாதம் இப்போதும் மஹிந்த தரப்பால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றது; வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது.

மஹிந்த ஆட்சியில் இருக்கும்போது அவர் எவ்வாறு மௌனமாக இருந்தாரோ அவ்வாறே இப்போதும் இருக்கின்றார். இந்த அரசு முன்னெடுக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் இனவாதக் கண்கொண்டு பார்க்கும்-அதற்கு இனவாதச் சாயம் பூசும் நடவடிக்கையை மஹிந்த தரப்பு அதிகம் அதிகமாகச் செய்து வருகின்றது.

தனது ஆட்சி அதிகாரத்தின் ஆயுளைத் தீர்மானிக்கும் பொறுப்பை அன்று பஸில் மற்றும் கோட்டாபேயிடம் ஒப்படைத்த மஹிந்த இன்று தனது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை விமல் மற்றும் உதய கம்மன்பிலவிடம் ஒப்படைத்துள்ளார். அன்று அவர்கள் இருவரும் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். இன்று இவர்கள் இருவரும் மஹிந்தவின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்வுக்கும் மணி அடிக்கப் போகிறார்கள்.

அரசியலில் மீண்டெழுவதற்கான ஆளுமை தன்னிடம் இல்லை என்பதை மஹிந்த இதன்மூலம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றார். தொடர்ந்தும் பிறர் மூளையில்தான் இயங்குகின்றார். இன்று விமல் மற்றும் கம்மன்பில ஆகியோரின் நெறிப்படுத்தலால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் முதிர்ச்சியற்றதாகவும் சிறுபிள்ளைத்தனமானதாகவும் இருக்கின்றன.

ஒரு முன்னாள் ஜனாதிபதி-முதிர்ச்சியான அரசியல்வாதி எப்படிப்பட்ட பக்குவமான அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமோ அப்படிப்பட்ட செயற்பாட்டை இன்று மஹிந்த தரப்பு அரசியலில் காணக்கூடியதாக இல்லை. அவரது அரசியல் வாழ்க்கையை முழுக்க முழுக்க இந்த இருவரிடமும் ஒப்படைத்துள்ளமையே இதற்கு காரணம்.

மஹிந்த எப்போது பிறர் மூளையில் இருந்து அவரது மூலைக்குத் திரும்புகிறாரோ அன்றுதான் அவருக்கு வெற்றி. இல்லையேல் அவரது அரசியல் வாழ்வு இனி அவ்வளவுதான்.

LEAVE A REPLY