அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க மும்முன்னை கிராமத்துக்கு 60 விசேட அதிரடிப்படையினர்

0
181

(ஷபீக் ஹுஸைன்)

Rauf hakeemஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அவசர வேண்டுகோளை அடுத்து குருநாகல் மும்மன்ன கிராமத்துக்கு 60 விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் இன்று (10) மாலை நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் ஒன்றில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இதனை தவிர்த்து, ஞானசார தேரரின் வருகையைத் தடுத்துக் கொள்ள ஊர்ப்பிரமுகர்கள் பொலிசாரை வலியுறுத்திய போதிலும் ஞானசார தேரர் கலந்து கொள்ளும் நிகழ்வானது, தர்மோபதேச நிகழ்வு என்ற காரணம் காட்டி அதை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

அப்பிரதேச மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தொடர்புகொண்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொண்டதற்கமைய அமைச்சர் ஹக்கீம் சட்டம் மற்றும் ஒழுங்கு தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவை தொடர்புகொண்டு அப்பிரதேசத்துக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.

இதற்கமைவாக கொமாண்டர் கட்டளையிடும் தளபதி லத்தீப் அவர்கள் அப்பிரதேசத்துக்கு சுமார் 60 விசேட அதிரடிப்படையினரை அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்க பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றபோது குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், துசார இந்துநில் அமரசேன ஆகியோரும், அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிஷாத், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிமுர் ரஹ்மான், அப்துல்லா மஹ்ரூப் ஆகியோரும் இப்பிரச்சினை பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

மேலும் நேற்று நடைபெற்ற அமைச்சரை கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்விடயம் பற்றி அமைச்சரவைியின் கவனத்துக் கொண்டுவந்தார்.

இக்கூட்டம் நடத்த அனுமதித்தால் பாரிய விளைவுகள் ஏற்படலாம் என அப்பிரதேச மக்கள் அஞ்சுவதாகவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

அத்துடன் நிலைமைகளை உடனுக்குடன் தெரியப்படுத்த மாகாணசபை உறுப்பினர்களான சட்டதரணி ரிஸ்வி ஜவஹர்ஷா , நியாஸ் ஆகியோரை களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பன்னல பிரதேசத்திலிருந்து நிலைமைகளை அவதானித்த வண்ணம், ஒருங்கிணைப்பு பணிகளை மேற் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY