சட்டவிரோதமான முறையில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் துப்பாக்கியை வைத்து எங்களுடைய மாடுகளை சுட்டுள்ளனர்

0
168

unnamed (20)(வாழைச்சேனை நிருபர்)

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் சட்டவிரோதமாக காடழிக்கின்றனர், கசிப்பு தயாரிக்கின்றனர், சட்டவிரோத துப்பாக்கியும் வைத்துள்ளனர் என மயிலத்தமடு, மாதவனை கால் நடையாளர் சங்க பொருளாளர் சீ.நிமலன் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அங்கு கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு தனது அபிலாஷைகளை வெளியிட்ட நிமலன்!

1974ம் ஆண்டிற்கு முன்பிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் எந்தவித குடியேற்றமோ, விகாரையோ, மேய்ச்சல் தரைக்கு இடையூறான விடயங்களோ இடம்பெறவில்லை.

ஆனால் 2012ம் ஆண்டிற்கு பிற்பாடு இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 2012 தொடக்கம் இன்று வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளை சுட்டும், கடத்தியும் உள்ளனர்.

இவ்விடயமாக மாவட்ட அரசாங்க அதிபர், பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜர் அனுப்பினோம். அங்கு வருகை தந்து பார்வையிட்டார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் இங்கு சட்டவிரோதமான முறையில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் சட்டவிரோதமாக காடழிக்கின்றனர், கசிப்பு தயாரிக்கின்றனர், சட்டவிரோத துப்பாக்கியும் வைத்துள்ளனர். துப்பாக்கியை வைத்து எங்களுடைய மாடுகளை சுட்டுள்ளனர். இதற்கான ஆதரங்களும் எங்களிடம் உள்ளது.

இவர்களை விட்டு எழுப்பினால் தான் நாங்கள் மேய்ச்சல் தரையில் மாடுகளை வளர்க்க முடியும், இல்லையேல் அரசாங்கத்திற்கு எங்களால் ஒரு நாளைக்கு பத்தாயிரம் லீற்றருக்கு மேல் பால் வழங்கி வருகின்றோம். அதனை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இவர்களுக்காக மகாவலி ஆற்றுக்கு அப்பால் மேய்ச்சல் தரை உள்ளது. அவர்களுடைய பிரதேத்திற்குள் தான் தற்போது மாடுகளுக்கான நீர் உள்ளது. எங்களை காட்டுப் பகுதியில் மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால் எவ்வாறு வளர்க்க முடியும்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட பண்ணையாளர்கள், பராமரிப்பாளர்கள் மாட்டை நம்பியே வாழ்கின்றோம். எங்களுக்கென ஒரு இடம் இருந்தால் நாங்கள் யாரிடமும் கையேந்த தேவையில்லை.

அரசாங்க அதிபர் வருகை தந்து பார்த்து இது மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய எல்லை, மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டது. சட்டவிரோத பயிர்ச்செய்கை, குடியேற்றம் என எங்களிடம் கூறி விட்டு பின்னர் இது இடைத்தரக பயிர்ச் செய்கையாளர்கள் என கூறுகின்றார். இது ஒரு அநிதீயாக கருத்து.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நினைத்தால் அவர்களை வெளியேற்றி எங்களுக்கு இந்த நிலத்தை பெற்றுத் தரமுடியும். இதனை பெற்றுத் தருவதால் அரசாங்கத்திற்கு எங்களால் பல நன்மைகள் உண்டு.

நாங்கள் அரசாங்கத்திற்கு பால் தருகின்றோம், காடுகளை பாதுகாக்கின்றோம், மாடுகளின் எருவால் காடுகள் வளர்கின்றது.

எனவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் எங்களுக்கு இந்த மேய்ச்சல் தரையை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்வதோடு, இதனை பெற்றுத் தந்தால் மூவின மக்களும் மேய்ச்சல் தரையை பயன்படுத்த முடியும் என்றார்.

LEAVE A REPLY