அத்துமீறிய குடியேற்றங்களால் எங்களுடைய மாடுகள் ஆயிரத்துக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளது: கு.பொன்னுத்துரை

0
94

unnamed (19)(வாழைச்சேனை நிருபர்)

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களால் எங்களுடைய மாடுகள் ஆயிரத்துக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளதாக மயிலத்தமடு, மாதவனை கால் நடையாளர் சங்க செயலாளர் கு.பொன்னுத்துரை தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அங்கு கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு தனது அபிலாஷைகளை வெளியிட்ட பொன்னுத்துரை!

1974ம் ஆண்டிற்கு முன்பிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாட்டன் மூப்பாட்டன் காலத்தில் இருந்து மேய்ச்சல் தரையை பயன்படுத்தி வருகின்றோம். அதனை பெறுவதற்கே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தற்போது அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இக்குடியேற்றமானது மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியின் ஆதரவில் தான் இக்குடியேற்றம் இடம்பெற்று வருகின்றது.

இவ்விடயமாக இரண்டு தடவை மாவட்ட அரசாங்க அதிபரை அழைத்துக் கொண்டு காட்டினோம். மகாவலி “வி” வலயமாக மாற்றப்பட்டுள்ளது எனவும், படத்தில் கூட எங்களுக்கு மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலத்தை தான் நாங்கள் கேட்கின்றோம். அதனை பெற்றுத் தரவேண்டும் என்றுதான் நாங்கள் இந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்விற்கு வருகை தந்துள்ளோம்.

ஆனால் இவ்விடயமாக அரசாங்க அதிபரோ அல்லது அரச அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தங்களுக்கு தெரியவில்லை. இதனால் எங்களுடைய மாடுகள் அதிகம் இறந்து காணப்படுகின்றது.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் கொலை செய்யப்பட்டும், பிடிக்கப்பட்டும், சித்திரவதைகளுக்கு உள்ளாகியும் காணப்படுகின்றது. இதனால் எங்களுடைய ஜீவனோபாயம் பாதிக்கப்படுகின்றது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு இந்த நல்லிணக்க சேவையை செய்ய முடியில்லையாயின், இந்த அரசாங்கம் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் எங்களது கேள்வி என்றார்.

LEAVE A REPLY