ஊக்கமருந்தில் சிக்கியவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பதா?: ரஷிய வீராங்கனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நீச்சல் நட்சத்திரம்

0
138

201608100958574270_Fallen-doping-participate-in-Olympic-swimming-star-raised-to_SECVPF31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சி வரும் நிலையில், அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பதக்கங்களை அள்ளி குவிக்கின்றன.

நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்டிரோக் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை லில்லி கிங் 1 நிமிடம் 04.93 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை கபளகரம் செய்தார். ரஷியாவின் யுலினா எபிமோவா (1 நிமிடம் 05.50 வினாடி) வெள்ளிப் பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை கேட்டி மெய்லி வெண்கலப் பதக்கமும் (1 நிமிடம் 05.69 வினாடி) கைப்பற்றினர்.

வெள்ளிப்பதக்கம் வென்ற 24 வயதான யுலினா எபிமோவா ஊக்கமருந்து சர்ச்சையில் இரண்டு முறை சிக்கியவர். 2013-ம் ஆண்டு அவருக்கு 16 மாத கால தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த மார்ச் மாதம் ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக மீண்டும் சிக்கினார்.

இதனால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முதலில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் மெல்டோனியத்தை தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் சேர்ப்பதற்கு முன்பாகவே பயன்படுத்தினேன். எனவே என் மீது தவறு இல்லை என்று வாதிட்ட எபிமோவா சர்வதேச நீச்சல் சங்கத்திடம் மீண்டும் முறையிட்டு கடைசி நேரத்தில் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

என்றாலும் அவர் நீச்சல் குளத்திற்குள் பாய்வதற்கு வந்தபோதெல்லாமல் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். முன்னதாக எபிமோவா தகுதி சுற்றில் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்ததும், தான் ‘நம்பர் ஒன்’ என்பதற்கு அடையாளமாக விரலை உயர்த்தி காட்டினார். லில்லி கிங் தனது பிரிவு போட்டி முடிந்ததும் எபிமோவாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது விரலை உயர்த்தி காண்பித்தார். மேலும் இறுதி சுற்று முடிந்ததும் எபிமோவாவுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்க லில்லி கிங் மறுத்து விட்டார்.

இது குறித்து 19 வயதான லில்லி கிங்கிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘நீங்கள் (எபிமோவா) நம்பர் ஒன் என்று விரலை அசைத்து காட்டுகிறீர்கள். ஊக்கமருந்து மோசடி செய்தவர்கள் நீங்கள்….இவ்வாறு காட்ட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இப்படிபட்டவர்களை நான் ரசிக்கமாட்டேன். நான் அப்பழுக்கற்றவளாக இருப்பதால் தான் அமெரிக்க அணிக்காக இந்த போட்டியில் பங்கேற்கிறேன்’ என்றார்.

அமெரிக்க 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் ஜஸ்டின் கேத்லின் கூட இரண்டு முறை ஊக்கமருந்தில் சிக்கியவர். அவர் உங்களது அணியில் அங்கம் வகிக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்ட போது, ‘யாராக இருந்தாலும் சரி…ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்க கூடாது’ என்று தைரியமாக பேசினார்.

லில்லி கிங்குக்கு, ‘சாதனை மன்னன்’ சக நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்சும் ஆதரவு தெரிவித்துள்ளார். பெல்ப்ஸ் கூறும் போது, ‘நீச்சல் மட்டுமல்ல, பொதுவாக எல்லா விளையாட்டுகளிலும் ஊக்கமருந்து கறை படிந்தவர்கள், குறிப்பாக பல முறை அந்த சர்ச்சையில் சிக்கியவர்கள் மீண்டும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது’ என்றார்.

எபிமோவா பேசும் போது ‘எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. முடிந்த வரை என்னை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

LEAVE A REPLY