முஸ்லிம் சேவைக்கு பணிப்பாளர் நியமிக்க நடவடிக்கை எடுப்பேன்: அமைச்சர் மனோகணேசன்

0
296

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

unnamed (1)இலங்கை வானொலி முஸ்லிம் சேவைக்கு பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். அதற்கான தீர்வைப் பெற்றுத் தருவேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட். அஹ்மத் முனவ்வரின் “இலங்கை வானொலி முஸ்லிம் சேவை” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) முற்பகல் நடை பெற்ற இந்த நிகழ்வில், தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

இலங்கை வானொலியிலே முஸ்லிம் பிரிவு காப்பாற்றப்பட வேண்டும். தொடர்ந்து வலுவாக்கப்பட வேண்டும். இந்த நல்லாட்சியில் கூட அதற்கான ஒழுங்கான கவனிப்பு இல்லை என்ற விடயங்களை எல்லாம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் எல்லோருடைய கவனத்துக்கும் கொண்டு வரவேண்டும் என்ற ஆதங்கத்தில் எனக்கு முன்னால் உரையாற்றிச் சென்ற நண்பர் என். எம். அமீன் தனது மன ஆதங்கத்தைச் அழுத்தமாக எடுத்துச் சொன்னார். அவரை நான் பாராட்ட விளைகின்றேன். இதுதான் பொருத்தமான இடம். வந்தோம் பேசினோம் போனோம் என்று இல்லாமல் சமூகத்துக்குரிய இனத்துக்குரிய மக்களுக்குரிய பிரச்சினைகளை துன்பங்களை கஷ்டங்களை கண்ணீரை எல்லாம் வரிசையாக எடுத்து விட்டுச் சென்றால்தான் அது பயன்பெறும் என்று நினைக்கின்றேன்.

ஆகவே இன்று குறிப்பாக, முஸ்லிம் பிரிவின் பணிப்பாளர் பதவி இன்னும் நிரந்தரம் செய்யப்படவில்லை. பதில் பணிப்பாளர் பதவி தான் இருக்கின்றது. என்று தனது ஆதங்கத்தைச் சொல்லி இருந்தார். இது பற்றி முஜிபுர் ரஹ்மானிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அது என் மனதில் பதிந்து விட்டது. நிச்சயமாக நான் அதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன் என்று உறுதி படச் சொல்லுகிறேன்.

ஏனென்றால் எமது நாடு ஒரு காலத்தில் ஒரே இனத்துக்கு ஒரே மதத்திற்கு ஒரே மொழிக்கு மாத்திரம் சொந்தமான நாடாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த தோற்றப்பாட்டை ஜனநாயக ரீதியாக நாங்கள் அழித்து ஒழித்திருக்கின்றோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அழித்து ஒழித்திருக்கின்றோம். அது உண்மை. இன்று ஒரே நாடு உண்மை. ஒரே நாடு என்றால் ஒரே மொழி அல்ல, மூன்று மொழிகள் இருக்கின்றன. சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகள் என்று 3 மொழிகள் இருக்கின்றன. ஒரே நாடுதான் ஆனால் ஒரே இனமல்ல சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று மூன்று பிரதான இனங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல, எனது சகவாழ்வு அமைச்சிலே 21 இனங்கள் பதிவு செயப்பட்டிருக்கின்றன.

பொதுவாகப் பேசும் போது நாங்கள் பிரதான இனங்களைப் பேசுகின்றோம். எமது பிரதான 3 இனங்கள் போக மேலதிகமாக 18 இனங்கள் எமது நாட்டில் வாழுகின்றார்கள். அதே போல் ஒரே நாடுதான் ஆனால் ஒரே மதம் அல்ல, பௌத்த இந்து இஸ்லாமிய கத்தோலிக்க மதம் என்று பிரதான 4 மதங்கள் இருக்கின்றன. ஆகவே எதிர்காலம் என்பது பலமொழி , பலஇனம், பலமதம் என்று பன்மை சார்ந்ததாகத்தான் இருக்க முடியுமே தவிர ஒரே நாடு என்று சொன்னால் ஒரே மதம், ஒரே இனம் என்ற அந்த ஓரே காலகட்டம் இன்று முடிவுக்கு வந்திருக்கின்றது.

அப்படி இருக்கின்ற பொழுது பலஇனங்கள் பலமொழிகள் பலமதங்கள் வாழுகின்ற நாடு என்று சொல்லும் பொழுது எல்லா மொழிகளுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சகிப்புத்தன்மை என்று சொல்லுகின்றோம். அந்நிய மதத்தவர்களை, மொழிகளை, இனங்களைப் பார்த்து அந்நியர் என்று சொல்லாமல் சகோதர மதம் , சகோதர இனம் சகோதர மொழி என்று சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கின்றேன். ஆகவே சகோதரர்களை அரவணைக்கின்ற பாங்கு இருந்தால்தான் அது உண்மையான பன்மைத்தன்மையை தொடர்ந்து கட்டிக்காக்க முடியும் என்பதை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற ரீதியிலே நான் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே அந்த நாட்டிலே சிங்கள மொழி பேசும் இனம் இருக்கின்றது. இந்த இனத்துக்குள்ளே பௌத்த மதத்தவர்கள் இருக்கின்றார்கள், கத்தோலிக்க மதத்தவர்கள் இருக்கின்றார்கள். தமிழ் பேசும் மக்ககளில் தமிழர்கள் இருக்கின்றார்கள் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம் மக்கள் தங்களை ஒரு இனமாக நீண்ட காலம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அதனை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும். அது உண்மை. ஒரே மொழி பேசுவதற்காக ஒரே இனமாக வாழ முடியாது. தனி இனமாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற முஸ்லிம் மக்களை அங்கீகரிக்க வேண்டிய கடப்பாடு தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.

அது உண்மை. அப்படி அங்கீகரிப்பதன் மூலமாகத்தான் உண்மையான அரவணைப்பு ஏற்படும். உண்மையான அந்தஸ்து கிடைக்கும் அதன் மூலமாகத்தான் உண்மையான ஐக்கியம் ஏற்படும். தவிர எல்லா மொழிகளையும் எல்லா இனங்களையும் எல்லா மதங்களையும் ஒன்றாகக் கலக்கி ஒரு கூட்டுக் கலவை கலாசாரத்தை உருவாக்கி விட முடியாது. அப்படியல்லாமல் எல்லா மொழிகளும் எல்லா மதங்களும் எல்லா இனங்களும் அங்கீகரிக்கும் போதுதான் அது அழகாக இருக்கும். பல இனங்கள் பல மொழிகள் பல மதங்கள் என்பது ஒரு பலவீனமல்ல, அது எமது சக்தி என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY