மக்கள் விரும்பினால் துருக்கியில் மீண்டும் மரண தண்டனை: அதிபர் எர்டோகன்

0
128

TURKEY3துருக்கியில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அரசியல் கட்சிகள் அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டி வரும் என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் கூறினார்.

துருக்கியில் அண்மையில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மரண தண்டனையை மீண்டும் கொண்டு வர வேண்டும் அதிபர் கூறி வருகிறார்.

இந்த நிலையில், இஸ்தான்புல்லில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட பிரம்மாண்ட ஒற்றுமைப் பேரணியும், பொதுக்கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அதிபர் எர்டோகன் பேசியதாவது:

துருக்கி இறையாண்மை உள்ள தேசமாகும். நாட்டின் தேவைகளை அனுசரித்து நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றும். மக்களின் தேவைகள், கோரிக்கைகளுக்கு ஏற்ப சட்டங்கள் இயற்றப்படுகின்றன. துருக்கியில் மரண தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தீர்மானித்தால், நாட்டின் அரசியல் கட்சிகள் அதனை செயல்படுத்த கடமைப்பட்டவர்கள். நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டால் நான் அதற்கு ஒப்புதல் அளிப்பேன்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் மரண தண்டனை உள்ளது. அமெரிக்கா, ஜப்பான், சீனாவில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. துருக்கியில் 1984-ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றாலும் கூட, 2004-ஆம் ஆண்டு வரை அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தது.

சட்ட ரீதியாக நாட்டின் எதிரிகளைக் களையெடுத்து தேசத்தை சுத்தப்படுத்துவோம் என்றார் அதிபர் எர்டோகன்.

துருக்கியில் பாதுகாப்புப் படையினரில் ஒரு பிரிவினர், கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயற்சித்து தோல்வி அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். முப்படைகளைச் சேர்ந்த மூத்த தளபதிகள் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கல்வி, நீதித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நாடு முழுவதும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

தேசத் துரோக குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அதிபர் எர்டோகன் கூறி வருகிறார்.

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உறுப்பினர் ஆவதற்கு துருக்கி விண்ணப்பித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் மரண தண்டனை இருக்கக் கூடாது என்று அந்த அமைப்பு கூறி வருகிறது. மரண தண்டனையை துருக்கி மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தால் அந்த நாடு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடாக முடியாது என்று அதன் தலைவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், மரண தண்டனைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதை ஆதரித்து அதிபர் எர்டோகன் பேசியுள்ளார்.

LEAVE A REPLY