(Article) ஐ.எஸ்.இயக்கம்: இனியாவது விழிப்பூட்டுக!

0
84

(எம்.ஐ.முபாறக்)

unnamedஒரு காலத்தில் அல்-கைதா அமைப்புதான் அதிபயங்கரவாத அமைப்பாக உலகத்தால் கருதப்பட்டது. அதன் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடன் உலகம் பூராகவும் மிகவும் பிரபல்யமடைந்தவர். ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது. ஐ.எஸ் இயக்கம்தான் அதிபயங்கரவாத இயக்கமாகக் கருதப்படுகின்றது. இன்று உலகம் முழுவதும் பேசப்படுகின்ற- எல்லோரையும் அச்சமடையச் செய்கின்ற இயக்கமாக இது உருவெடுத்துள்ளது.

அதன் அசூர வளர்ச்சியும் பிரமாண்டமான தாக்குதல் நடவடிக்கைகளும் ஐரோப்பிய நாடுகள் மீது அது நடத்தி வரும் பயங்கரவாதத் தாக்குதல்களும் உலக நாடுகளை ஆட்டங் காணச் செய்துள்ளன. உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த இயக்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட பலமிக்க பல நாடுகள் ஒன்றிணைந்து வெறும் கண் துடைப்புக்காக இந்த அமைப்புக்கு எதிராக இரண்டு வருடங்களாகத் தாக்குதல் நடத்தி வருகின்றபோதிலும், அந்த இயக்கம் அவ்வளவு தூரம் பலமிழக்கவில்லை.

இஸ்லாமியப் பேரரசு [கிலாபத் ] என்ற சுலோகத்தோடு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த இயக்கம் தங்களை அறிமுகப்படுத்தியது. சிரியாவின் ஒரு பகுதியையும் ஈராக்கின் ஒரு பகுதியையும் கைப்பற்றி சுயாட்சியைப் பிரகடனப்படுத்தியது. இஸ்லாமிய பேரரசு என்ற பதத்தால் கவரப்பட்ட-ஏமாந்துபோன அதிகமான முஸ்லிம்கள் இளைஞர்கள் அந்தப் பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்டனர்.

சுன்னி முஸ்லிம் பிரிவாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட ஐ.எஸ் இயக்கம், ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஷிஆ அரசுகளை எதிர்த்துப் போராடி வருகின்றது. இந்த இயக்கத்துக்கு எதிராக விமானத் தாக்குதல்களை அமெரிக்கா 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கி இப்போது வரை நடத்திச் செல்கின்றது. ஆனால், எந்தப் பயனும் இதுவரை கிட்டவில்லை.

சிரியாவில் போராடும் ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்காக சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் உலக நாடுகளின் உதவியை நாடினார். ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உதவிக் கரங்களை நீட்டின. ஐ.எஸ். இலக்குகள் மீது விமானத் தாக்குதல்களை நடத்துகின்றன.

இதற்குப் பலி வாங்கும் விதமாக ஐ.எஸ் இயக்கம் ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்றைக் குண்டு வைத்து அழித்ததோடு பிரான்ஸ் தலைநகர் பரீஸிலும் குண்டுத் தாக்குதலை நடத்தியது. அதனைத் தொடர்ந்து அண்மையிலும் பிரான்ஸ்மீது தாக்குதல் நடத்தியது. திருவிழா ஒன்றின்போது பஸ் ஒன்றால் மோதியும் சுட்டும் மக்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொலை செய்திருந்தனர்.

இவ்வாறான ஒவ்வொரு சம்பவத்தின்போதும் ஐ.எஸ்கள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. இருந்தாலும்,இவ்வாறான தாக்குதல்கள் மூலம் ஐ.எஸ். இயக்கத்தை முற்றாக ஒழித்துக்கட்ட முடியுமா என்ற கேள்வி இப்போது எழுகின்றது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டு விமானத் தாக்குதல்கள் மூலம் ஐ.எஸ் இயக்கத்தை முற்றாக ஒழித்துக்கட்ட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா 2014 ஓகஸ்ட் முதல் இப்போது வரை ஐ.எஸ் அமைப்பு மீது 8000 இற்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதுபோல், ஏனைய நாடுகளும் கணிசமான எண்ணிக்கையில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்களால் ஐ.எஸ். அமைப்பு பலவீனமடைந்ததாகத் தெரியவில்லை.

ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் ஐ.எஸ் இயக்கம் கணிசமான அளவு தோல்வியைக் கண்டிருக்கின்றமை உண்மை. ஈராக்கில் அந்த அமைப்பு கைப்பற்றி இருந்த ராமதி, சிஞ்சார் மற்றும் பலூஜா போன்ற பல முக்கிய நகரங்கள் அவர்களிடம் இருந்து ஈராக்கிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேபோல் சிரியாவிலும் பல நகரங்களை அவர்கள் இழந்துள்ளனர். அந்த வகையில், ஈராக்கில் 40 வீதத்துக்கு மேற்பட்ட நிலத்தையும் சிரியாவில் 20 வீதத்துக்கு மேற்பட்ட நிலத்தையும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இழந்துள்ளனர்.

இருந்தாலும் அவர்கள் லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் காலூன்றி வருகின்றனர். கடந்த வாரம் லிபியாவில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு எல்லாநாடுகளிலும் கால் பதிக்க முற்படுவதும் தாக்குதல்களை நடத்துவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் இலங்கையில் அவர்கள் நுழையப் போகின்றனர் என்றும் 40 மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் அந்த அமைப்பில் இணைத்துள்ளனர் என்றும் அண்மைக் காலமாக செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். ஆனால்,ஐ.எஸ் இயக்கம் தொடர்பிலும் அது தொடர்பிலான முஸ்லிம்களின் நிலைப்பாடு இந்த நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் அமைப்புகளினதும் கட்டாய பணியாகும். ஆனால், அந்தப் பனி சரிவரைச் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

ஐ.எஸ் இயக்கம் இஸ்லாத்துக்கு விரோதமானது என்று அகில இலங்கை உலமா சபை இப்போதுதான் அறிவித்திருக்கின்றது. இந்த அறிவிப்பை விடுப்பதற்கு அந்த அமைப்புக்கு இரண்டு வருடங்கள் எடுத்திருக்கின்றன. இருந்தாலும், இதை வரவேற்க வேண்டும்.

வெறுமனே ஓர் அறிக்கையின் மூலம் இந்த விவகாரத்தை விட்டுவிட முடியாது. இந்த இயக்கம் இஸ்லாத்துக்கு முரணானது என்பதையும் இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காகவும் அகன்ற இஸ்ரேல் கனவை நிறைவேற்றுவதற்காகவும் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் இந்த ஐ.எஸ் இயக்கம் என்பதையும் அதற்கு ஏற்ப முஸ்லிம் நாடுகள் ஐ.எஸ் இயக்கத்தால் பலவீனப்படுத்தப்டுகின்றன என்பதையும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை உலமா சபை உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு ஆபத்து விழைவிக்கக்கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கடந்த காலங்களில் மௌனமாக இருந்ததுபோல் இந்த விடயத்திலும் மௌனமாக இருப்பது நல்லதல்ல. முடியுமானவரை ஐ.எஸ் இயக்கம் தொடர்பில் முஸ்லிம்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அத்தோடு, முஸ்லிம்களுக்கு இந்த அமைப்புடன் எந்தத் தொடர்பும் இல்லை; உடன்பாடும் இல்லை என்பதும் மாற்று மத மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்ட வேண்டும்.

LEAVE A REPLY