போரினால் தன்மானத்தை இழந்தது பாரிய இழப்பாகும் கிழக்குப் பல்கலைக்கழக முன்ளாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எஸ். மூக்கையா

0
187

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (9)கடந்த 30 வருட காலப் போரினால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளாதார அழிவுகளை விட தன்மானத்தையும் நம்பிக்கையையும் இழந்தது பெருத்த இழப்பாகும் என வளவாளரும் கிழக்குப் பல்கலைக்கழக முன்ளாள் உபவேந்தருமான பேராசிரியர் எம்.எஸ். மூக்கையா தெரிவித்தார்.

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்ற நிலைமாற்று நீதிக்கான பொறிமுறைகளைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு திங்கட்கிழமை (ஓகஸ்ட் 08, 2016) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் அதிகாரி ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், மற்றும் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மூக்கையா, சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் தொடங்கிய இனவாத நெருக்கடி 1983 இல் இடம்பெற்ற ஜுலைக் கலவரத்துடன் விஸ்வரூபமெடுத்தது.

அந்த இழப்புகளோடும், அழிவுகளோடும் இங்கு நிம்மதியாக வாழலாம் என்று சிறுபான்மையினருக்கிருந்த ஒரு சொட்டு நம்பிக்கையும் இழந்து போனது. கடந்த கால யுத்தத்தினால் உரிழப்பைத் தவிர அனைத்தையும் ஈடு செய்ய முடியும் என்று ஒரு சாக்குப் போக்குக் சொன்னாலும் கூட யுத்தத்தினால் இழந்த தன்மானமும் நம்பிக்கையும் பாரிய இழப்பாகும்.

இதனை ஈடு செய்வதற்கு இனி எல்லோரும் இணைந்து ஏதாவது வழி செய்தாக வேண்டும். ஆயுத யுத்தம் என்பது அநாகரிகமானது. அது மனித குலத்திற்கு எதிரானது. கலகம் பிறந்தால்தான் நீதி பிறக்கும் என்பதெல்லாம் காட்டுமிராண்டித் தனமான கதைகள்.

கலகமே வேண்டாம் என்பதுதான் நல்லவர்களின் நவீன சிந்தனைப் போக்கு. இதனையே இலங்கையர்களாகிய நாம் கைக்கொண்டாக வேண்டும்.

தமிழர்களின் தலைவிதியை முள்ளி வாய்க்காலில் முடித்து வைத்து சாதனை படைத்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்த இனவாதிகள் அடுத்த சிறுபான்மையினரான முஸ்லிம்களின் முள்ளிவாய்க்காலாக அலுத்கமவை இலக்கு வைத்தது.

ஆனால், இதன் மூலம் அவர்கள் ஒன்றும் சாதித்து விடவில்லை. பொருளாதாரத்தையும், உயிர்களையும், தன்மானத்தையும், நம்பிக்கையையும் இழக்கச் செய்து சிறுபான்மை இனங்களைத் தலைகுனிய வைக்கலாம் என்று நினைப்பது வெற்றியல்ல.

இந்த நாட்டிலே ஏற்பட்ட அத்தனை இழப்புக்களுக்கும் இந்த நாட்டிலே கோலோச்சிய அரசியல் அதிகாரத்தை தம் வசம் வைத்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சி ஆகியவையே காரணமாகும் என்பதை வரலாறு சொல்கிறது.

எவ்வாறாயினும், ஆயுத முரண்பாடு முடிவுக்கு வரவேண்டும் என்ற சிந்தனை வலுத்ததால்தான் இந்தியா சர்வதேச ஆதரவுடன் இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவர உதவியது. கடந்த காலம் என்பது ஒருபோதும் மறந்து விட முடியாத ஒன்று. அதனால், இலங்கையில் நடந்த அநீதிகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். அதன் மூலமாக பரஸ்பரப் புரிந்துணர்வுடன் இனப்பிரச்சினைக்கும் இழப்புக்களுக்கும் பரிகாரம் காணப்பட வேண்டும். நிரந்தர சமானதானத்திற்கு அதுவே வழியாகும். சிறுபான்மையினர் ஒற்றுமைப்படவேண்டியது காலத்தின் தேவையாகும்” என்றார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி. அரியநேத்திரன், பொன். செல்வராசா, மாகாண சபை உறுப்பினர் ஞா. கிருஸ்ணபிள்ளை, சமாதானப் பேரவையின் செயற்திட்ட நிகழ்ச்சி இணைப்பாளர் சமன் பெரேரா, வடக்கு கிழக்கு இணைப்பாளர் சி. கிருபாகரன், மட்டக்களப்பு இணைப்பாளர் ஆர். மனோகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY