புகையிலை வரியை அதிகரித்து மருந்துகளுக்கான வரியை நீக்க நடவடிக்கை

0
209

tax-imageபுகையிலை வரியை 90 வீதமாக அதிகரிக்கவும் அதன் மூலம் கிடைக்கும் நிதியிலிருந்து மருந்து உட்பட சுகாதாரத் துறையில் உள்ள ஏனைய வரிகளை நீக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதற்கிணங்க புகையிலை வரியை 90 வீதமாக அதிகரிப்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மது பாவனை ஒழிப்பு தொடர்பான தேசிய மாநாடு நேற்றுமுன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதி அமைச்சர் பைசல் காசிம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ஜேகப் குமரேசன் உட்பட துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ;

நாட்டின் வரலாற்றில் முக்கியமானதொரு நாளாக மது பாவனை ஒழிப்பு தொடர்பான தேசிய கொள்கையை வெளியிடும் இத்தினத்தை குறிப்பிட முடியும். நீண்டகால ஆய்வுகளின் பின் இந்த தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகில் பிரதி வருடமும் மது பாவனையினால் மில்லியன் கணக்கில் மரணமடைகின்றனர். அத்துடன் பல்வேறு நோய்களுக்கும் விபத்துக்களுக்கும் ஆளாகின்றனர்.

மது மற்றும் புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகள் யாவரும் அறிந்ததே, இலங்கையில் மட்டுமன்றி உலகில் எங்கும் மதுபாவனை இன்றும் இடம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்த பெருமானின் காலத்திலும் அதற்குப் பின்னர் மன்னர்கள் காலத்திலும் கூட மது பாவனை இருந்துள்ளது. எமது மன்னர்கள் 7 கலம்கள் அருந்தியே காலையில் தமது அன்றாட அலுவல்களை ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் இது தற்போது சமூகத்தில் பெரும் தொற்றுநோயாகியுள்ளது. இதனால் இது தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எமது அரசாங்கம் மதுபான வரி மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானத்துக்கு அதிகமாக மதுபாவனையினால் ஏற்படும் நோய்களுக்கு அரசாங்கம் செலவிட நேர்ந்துள்ள நிதி மிக அதிகமாகியுள்ளது.

முழு உலகிலும் தொற்றா நோய் பெரும் பிரச்சினையாகியுள்ளது. சர்க்கரை வியாதி, இரத்தக் கசிவு, இருதய நோய் மற்றும் புற்று நோய்களுக்கும் திடீர் விபத்துக்களுக்கும் மதுபாவனை முக்கிய காரணமாகியுள்ளது. எமது நாட்டில் 100 ற்கு 70 வீத மரணங்கள் தொற்றா நோயினால் ஏற்படுவனவையே. தொற்றா நோய்களில் அநேகமானவை மதுப் பாவனையினால் ஏற்படுபவையே. இது உலகிற்கே பெரும் சவாலாகியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கமானது இதுபோன்ற செயற்பாடுகளில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. தேர்தலின் போது உணவுப் பொருட்களின் விலை பற்றி மக்கள் எம்மோடு பேசவில்லை. சமூக பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலேயே பேசினர். எதிர்காலத்தில் வரும் அரசாங்கங்களுக்காக இதனை விட்டு வைக்காமல் நாமே மேற்கொள்ள வேண்டும் என சிந்திப்பதே நல்லாட்சியின் முக்கியத்துவமாகும்.

இதற்கிணங்க மது ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளில் பொலிஸ் துறை மற்றும் கலால் துறையினரின் பூரண ஒத்துழைப்பு மிக அவசியமாகும். தேசிய கொள்கையினூடாக நாம் தேசிய வேலைத்திட்டங்களை விஸ்தரிப்பதுடன் இதற்கெதிராக செய்படுவோருக்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

தேசிய அரசாங்கம் புகையிலை மற்றும் மதுபாவனை தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. புகையிலை வரியை 90 வீதமாக அதிகரிக்கும் அமைச்சரவைப் பத்திரத்தை நானும் ஜனாதிபதியும் இணைந்து சமர்ப்பிக்கவுள்ளோம்.

அதேபோன்று அவுஸ்திரேலியா போன்று சிகரட் பெட்டியில் விளம்பரங்களற்ற ‘ப்ளேவ்’ பகுதி நடைமுறைக்கு வசதியாக மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரம் அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இம் மாநாட்டின் போது மது ஒழிப்பு தொடர்பான தேசிய கொள்கை உத்தியோகபூர்வ வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#Thinakaran

LEAVE A REPLY