அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

0
406

UPSR_100914_TMINAZIRSUFARI_03இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் இஸ்லாமிய சன்மார்க்க அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்கள் சகல அஹதிய்யாப் பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அரச பாடசாலைகளில் 10, 11 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் தோற்றும் இப்பரீட்சை அகீதா, பிக்ஹு, ஸீரா, அக்லாக் ஆகிய நான்கு பாடங்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடாத்தப்படவுள்ளது.

இப்பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றும் பரீட்சாத்திகள் பரீட்சைக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவர். ஏனைய பரீட்சாத்திகள் முழுப் பரீட்சைக்கும் தோற்றுவதாயின் 150 ரூபா அல்லது நூன சித்தி பாடமொன்றுக்கு மாத்திரம் தோற்றுவதாயின் 50 ரூபா பரீட்சைக் கட்டணமாகச் செலுத்துதல் வேண்டும்.

வெளிவாரி பரீட்சாத்திகளுக்கு தனிப்பட்ட முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க இடமளிக்கப்படமாட்டாது. அவர்களது வதிவிடத்திற்கு அருகாமையிலுள்ள அஹதிய்யாப் பாடசாலை மூலமாக விண்ணப்பித்தல் வேண்டும். இவர்கள் பரீட்சைக் கட்டணம் செலுத்துதல் அவசியமாகும்.

விண்ணப்பப்படிவங்கள் இரண்டு பிரதிகளில் பூரணப்படுத்தப்பட்டு ஒரு பிரதியை மட்டும் பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், த.பெ. இல: 1503, கொழும்பு எனும் முகவரிக்கு 2016.08.26 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

மற்றைய பிரதியை பாதுகாப்பாக அதிபர்கள் தம்வசம் வைத்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
காலம் கடந்த அல்லது பூரணமற்ற விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும். எனவே திருத்தமாக விண்ணப்பப்படிவங்களைப் பூரணப்படுத்தி குறித்த திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார சகல அஹதிய்யாப் பாடசாலை அதிபர்களையும் கேட்டுள்ளார்.

-ET-

LEAVE A REPLY