விரட்டப்பட்ட மூதூர் தோப்பூர் முஸ்லிம்களின் ஒரு தசாப்த துன்பியல் வரலாறு

0
313

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (2)நினையாப் பிரகாரமாக புலிகளால் இராப் பொழுதில் ஒலிபெருக்கி மூலம் வெளியேறச் சொல்லி கால் நடையாக சுமார் 60 கிலோமீற்றர் தூரம் வெயிலில் விரட்டப்பட்ட மூதூர் மற்றும் தோப்பூர் முஸ்லிம்களின் வரலாறு இப்பொழுது ஒரு தசாப்தத்தை (10 வருடங்களை) நிறைவு செய்திருக்கின்றது.

கையிலும் மடியிலும் எதுவுமே இல்லை. நடந்;த களைப்பால் உடல் சோர்ந்து தளர்ந்திருந்தது. உள்ளமும் துயரத்தை எண்ணி உருகிக் கொண்டிருந்தது. பசி, தாகம், சோர்வு, மனதில் ஒரு விதமான விரக்தி! இவர்கள் தாங்கள் எங்களை வெளியேற்றப் போவதை கொஞ்சம் முன் கூட்டியே எங்களுக்கு அறிவித்திருந்தால் எங்களது பிள்ளைகளின் சாப்பாட்டுக்காவது எதையென்றாலும் எடுத்து வந்திருக்கலாம்?

மிருக வெறி கொண்டலைந்தவர்களைப்போல எங்களை ஒட்டுமொத்தமாக இனச்சுத்திகரிப்புச் செய்து ஏன் வெளியேற்ற வேண்டும்? அவர்கள் மனிதர்களாக இருந்திருந்தால் எங்களை இப்படி விரட்டியடித்திருப்பார்களா?

இனி எப்போது நமது சொந்த மண்ணில் கால் பதிப்போம்? இவ்வாறான பல நூறு கேள்விகளுடன் 2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி பகல் பொழுதில் கால் நடையாகப் புறப்பட்ட திருகோணமலை – மூதூர் மற்றும் தோப்பூர் முஸ்லிம்கள் ஏக்கப் பெருமூச்சுக்களுடன் கந்தளாய் வந்து சேர்ந்தார்கள்.

கொழும்பு- திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையில் இருக்கிறது கந்தளாய் நகரம். கந்தளாயிலுள்ள பாடசாலைகளும், அரச கட்டிடங்களும், வயல் வெளிகளும், வரப்புகளும், பாழடைந்த கட்டிடங்களும், மரநிழல்களும், விளையாட்டுத் திடலும், தெருவோரமும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் விரட்டியடிக்கப்பட்ட மூதூர் மற்றுமு; தோப்பூர் முஸ்லிம்களின் தஞ்சமளிக்கும் இடங்களாய் மாறின.

சுற்றுச் சூழலில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கோ அல்லது போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் ஆயுதத் தரப்புக்கோ எந்தத் தீங்கும் செய்யாத எங்களை ஏன் இப்படி விரட்டி வாழ்விடங்களை விட்டு வெருண்டோடச் செய்கின்றார்கள் என்று அந்த அப்பாவி மூதூர் முஸ்லிம்களுக்கு எதுவுமே புரிந்திருக்கவில்லை.

ஆமாம் இப்படியொரு கசப்பான வரலாறு இந்நாட்டின் கிழக்கு முஸ்லிம்களுக்கு இருந்தது என்பது இப்பொழுது மறந்த ஒன்றாக மாறிவிட்டிருக்கின்றது.

இக்கட்டுரை பிரசுரமாவதன் நோக்கம் அவ்வாறான ஒரு பெருந்துயரம் இனி இலங்கை மக்கள் எவருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதேயாகும். இன்னமும் இந்த உள் நாட்டு அகதிப் பிரச்சினை தொடரக் கூடாது என்றே அமைதியை விரும்பும் அனைவரும் எதிர்பர்க்கின்றார்கள். அந்த நல்லெண்ணத்தை அடிமனதில் கொண்டே இந்த துயர நிகழ்வை நினைவூட்டுகின்றோம்.

திருகோணமலை மாவட்டம் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நேற்று வியாழக்கிழமை (ஓகஸ்ட் 04, 2016) நினைவு கொண்டார்கள்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தமது உயிருக்கு அஞ்சி ஆயுததாரிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தரவை அடுத்து சுமார் 15 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் மக்கள் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி இரவு மூதூர் நகரிலுள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னர் அந்தப் பிரதேசம் பல மணித்தியாலயங்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.

ஓரிரு நாட்கள் இதே நிலை இருந்ததாக கூறப்படுகின்றது. அவ்வேளையில் தான் தங்களை வெளியேறுமாறு விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்டதாக முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இக்காலப் பகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சுக்களில் அகப்பட்டு 54 முஸ்லிம்கள் பலியானதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றார்கள்.

மூதூர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேறுமாறு ஓலிபெருக்கி மூலம் அறிவித்ததன் பின்னர் முஸ்லிம்கள் சாரிசாரியாக அங்கிருந்து கால்நடையாக வெளியேறியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜே.எம். லாஹீர் தெரிவித்தார்.

அங்கிருந்த வேறு வெளியேறும் வழிகளைத் தடை செய்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் கிணாந்திமுனை (மூன்றாம் கட்டை) ஊடாக மட்டுமே வெளியேற அனுமதியை வழங்கியிருந்த நிலையில் அவ்வழியாக வெளியேறும் போது விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட முஸ்லிம்கள் சிலர் காணாமல் போயிருந்ததாகவும் லாஹிர் தெரிவித்தார்.

மக்கள்; உடுத்த உடையுடன் சுமார் 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தளாய் பகுதியை சென்றடைந்து ஒரிரு மாதங்கள் அங்குள்ள நலன்புரி மையங்களில் தங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தாங்கள் தமது பூர்வீக பழைய வசிப்பிடங்களில் தொந்தரவின்றி வாழ்வதாகக் குறிப்பிட்ட சமூக சேவையாளரும் முன்னாள் கிராம சேவகருமான ஏ.எஸ்.ஏ. ஐனுதீன் இப்பொழுது தாங்கள் முன்னர் எவ்வாறு இந்தப் பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்களுடன் ஐக்கியத்துடன் வாழ்ந்தோமோ அதே சகவாழ்வுடன் நல்லுறவைப் பேணி வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மூதூர் ஆக்கிரமிப்பின்போது பலமான பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே ஊருக்குள் நுழைந்த எல்ரீரீஈ இனர் ஊரிலுள்ள முஸ்லிம் இளைஞர்களையும் முக்கியமான சேவையாளர்களையும் கடத்திச் செல்ல ஆரம்பித்தனர்.

எனவே, தம்முடைய பிள்ளைகளை எவ்வாறு புலிகள் இயக்கத்திடமிருந்து காப்பாற்றுவது என்ற ஏக்கம் பெற்றோருக்கு ஏற்பட்டது. எனினும் புலிகள் ஒரு தொகை முஸ்லிம்களை எவ்வாறோ கடத்திச் சென்றுவிட்டனர். தாக்குதல்கள் காரணமாக 54 முஸ்லிம்கள் உயிரிழந்து விட்டனர். சடலங்களைக் கூட எடுத்து அடக்கம் செய்ய முடியாத நிலையிலேயே அவற்றைக் கைவிட்டுச் செல்லவேண்டிய துயரம் ஏற்பட்டதாக மாகாண சபை உறுப்பினர் லாஹிர் தனது கவலையை இதுபற்றி விவரிக்கும்போது வெளியிட்டார்.

மூதூர் முஸ்லிம்கள் வழமையாகவே எந்தவிதமான வன்டமுறைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள். அதனால் தமிழ் மக்களோடு எப்பொழுதும் அந்நியோந்யம் இருந்தது. இந்த இரு சமூகத்தாரும் நன்மை தீமைகளில் பரஸ்பரம் பங்கு கொண்டவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைத் தாக்கியதையும் அநியாயம் புரிந்ததையும் தமிழ் மக்களுடனான பிரச்சினையாக தாங்கள் பார்க்கவில்லை என லாஹிர் மேலும் தெரிவித்தார். இப்பொழுது இந்தப் பிரதேசத்தின் தமிழ் முஸ்லிம் உறவு மீளக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சமூக சகவாழ்வு, விருந்தோம்பல், வர்த்தகம், மற்றும் சேவைகளினூடாக இது பழைய நிலைமைக்குத் திரும்பி பலம் பெற்றிருக்கின்றது.

இது தங்களுக்கு ஒரு நம்பிக்கையையும் நிம்மதியையும் தோற்றுவித்திருப்பதாக தெரிவிக்கும் அப்பகுதிகளிலுள்ள சமூக ஆர்வலர்கள் இருப்பினும், ஒரு சில மூளைச் சலவை செய்யப்பட்ட வன்முறையாளர்களால் சமூக விரிசலுக்கான உணர்வுகள் அவ்வப்போது தூண்டி விடப்படுவதாகவும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY