தகவல் அறியும் சட்டமூலத்தின் நன்மைகளைப் பற்றி முஸ்லிம் சமூகம் அறிவூட்டப்பட வேண்டும்

0
342

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (1)தகவல் அறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

இலங்கையின் இந்த சட்டமூலம் உலகின் ஏழாவது இடத்தையும், தெற்காசியாவில் இந்தியாவுக்கு பின்னரான பிரதான இடத்தையும் பெற்றுள்ளமை இலங்கை அடைந்துள்ள கௌரவம் என்று கருதப்படுகின்றது.

நாட்டிலே உள்ள ஏனைய சட்டங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கே ஏதுவாக உள்ளன. ஆனால், தகவல் அறியும் சட்டமூலமோ அதிகாரிகள் மீது பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பதற்கு உதவுகின்றது.

எனவே, இந்த சட்ட மூலத்தை சரியாக அமுல்படுத்துவது பொதுமக்களின் கைகளிலேயே உள்ளது.
அதேவேளை, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இந்த விடயத்தில் மிக்க பொறுப்பு உள்ளது.

தகவல் அறியும் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தி அதன் பலாபலன்களை நாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் நாடுபூராகவும் உள்ள அலுவலகங்களில் கடமையாற்றுவதற்காக 8000 அதிகாரிகள் பயிற்றுவிக்கப்படவுள்ளார்கள்.

இவர்கள் ஒவ்வொரு மாவட்டச் செயலகங்கள், மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், பொலிஸ் நிலையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட ஒவ்வொரு அரசாங்க அலுவலகங்களிலும் தகவல் அதிகாரிகளாகப் பணியாற்றுவார்கள்.

எனவே, பொது மக்களும், ஊடகவியலாளர்களும் தமக்குத் தேவையான தகவல்களைப் இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும். இலங்கை வாழ் மக்களின் தகவல் அறியும் உரிமையை பலப்படுத்தும் நோக்கில் கடந்த காலத்திலும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு அவை தோல்வியில் முடிந்த வரலாறுகள் உண்டு.

இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு காலஞ்சென்ற ஊடக அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா முயற்சி மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்டும் இருந்தன.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தின் நன்மைகளைப்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது அவசியமாகும்.

ஏனெனில், மக்களே இந்த சட்டத்தை உயிரோட்டமுள்ளதாக ஆக்க வேண்டும். மக்களை அறிவூட்டவேண்டுமென்றால், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஊடகவியலாளர்கள். ஆகையினால் முதன்முறையாக இந்த சட்டமூலம் பற்றிய தெளிவூட்டல் ஊடகவியலாளர்களுக்குத் தேவை.

ஊடகவியலாளர்ள் சரியான, நம்பகமான தகவல்களை வெளியிடுவதற்கு இந்த சட்டமூலம் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குவதுடன் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் கவனமாக செயற்பட வேண்டியதை வழியுறுத்து நிற்கின்றது.

தகவல் அறியும் சட்டமூலத்தின் நன்மைகளைப் பற்றி முஸ்லிம் சமூகம் அறிவூட்டப்பட வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். அலி ஹஸன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த மாவட்ட இணைப்பாளர்களுக்கான கூட்டத்தில் தகவலறியும் சட்டமூலம்பற்றி முஸ்லிம் சமூகம் அறிவூட்டப்பட வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு மாளிகாகந்த அல் ஷபாப் கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் அவர் தகவல் அறியும் சட்டமூலம் பற்றிய பல முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அலிஹஸன், தகவல் அறியும் சட்டமூலத்தைப் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்ட வேண்டிய கட்டாயத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது. வழமையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்காக பொதுமக்களை அறிவூட்ட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுவதில்லை.

ஆயினும் தகவலறியும் சட்டமூலம் என்பது பொது மக்களுடைய சட்டமாதலால் அதன்பால் அதன்நன்மைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு பொதுமக்களைத்தான் அறிவூட்ட வேண்டியுள்ளது.

தகவலறியும் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டியவர்கள் பொதுமக்களாக உள்ளார்கள். இந்தச் சட்டம் குறித்து எந்நேரமும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியவர்களாக அரசாங்க அதிகாரிகள் உள்ளார்கள்.

மற்ற சட்டங்களுக்கு மக்கள் தான் பொறுப்புக் கூற வேண்டிய நிலை உள்ள அதேவேளை இந்தச் சட்டத்தின்பால் பொறுப்புக் கூறவேண்டிய கடமை அரசாங்க அதிகாரிகளுக்குத்தான் உண்டு. இலங்கையைப் பொறுத்தவரை இன்னமும் ஜனநாயகம் என்பதை மக்கள் சரிவர உணர்ந்து கொண்டார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது.

அதேபோல தற்போதைய நல்லாட்சியையும் மக்கள் சரிவர உணர்ந்து கொண்டதாக இல்லை. இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதி, இவையெல்லாம் மக்கள் கேட்டுப் போராடிப் பெற்றுக் கொண்டதல்ல. அவற்றையெல்லாம் அரசு விரும்பித்தான் கொண்டுவந்தது.

ஆனால், இந்தியாவில் மக்கள் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்தியே தகவல் அறியும் சட்ட மூலத்தக் கொண்டுவர வழிவகுத்தார்கள். நல்லாட்சி என்பதன் அர்த்தம் முதலில் சட்டத்தின் ஆட்சியாக அது அமைந்திருக்க வேண்டும். அதற்கான தேவைகள் சட்ட மூலங்களின் மூலம் நீதிவழிமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்

தகவல் அறியும் உரிமை என்பது அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்பாக இருந்தால்தான் இந்த சட்டமூலத்தை நாட்டில் சரிவர அமுல்படுத்த முடியும். அதன் மூலம் ஜனநாயக உரிமைகளை வலுப்பெறச் செய்ய முடியும். அரசியல் யாப்பின் 14 ஆம் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் தகவல் அறியும் சட்டமூலத்தை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் அடைந்து கொள்ள முடியும். தகவல் என்றால் என்ன என்பது இந்த சட்டத்தில் விளக்கப்பபட்டுள்ளது.

தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், குறிப்புக்கள், மின்னஞ்சல்கள், அபிப்பிராயங்கள், மதியுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றுநிருபங்கள், கட்டளைகள் சம்பவத் திரட்டுக்கள், ஒப்பந்தங்கள். புத்தகம், திட்ட வரைவு, வரைபடம், புகைப்படம், திரைப்பட்ம், குறும்படம், ஒளிப்பதிவுகள், ஒலி நாடா, இயந்திரம் மூலம் வாசிக்கக் கூடிய பதிவுகள், கணினிப் பதிவுகள் வேறு ஏதேனும் ஆவண வடிவங்கள் என்பனவற்றைக் குறிக்கும்.

ஒருவருடத்திற்குள் இந்த சட்ட மூலம் முழுமையாக அமுலுக்கு வந்து விட வேண்டும். இது ஒரு புறமிருக்க இந்த சட்ட மூலத்தின் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சமும் இன்னொரு புறம் நிலவி வருகின்றது. பாதை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட பணம் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டதா அல்லது மோசடி செய்யப்பட்டதா என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் உரிமை சாதாரண ஒரு பிரஜைக்கு உண்டு.

இந்தியாவில் இது சிறந்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தகவல் அறியும் சட்டமூலத்தை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அதனை அமுல்படுத்துவதற்கு உசாத்துணையாக இருப்பதிலும் சிவில் சமூக அமைப்புக்களின் பங்கு அவசியம் என்று உணரப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டமூலத்தைப் பிரயோகித்து ஊழல் எதுவும் நடக்காமிலிருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் ஒரு சிவில் பிரஜைக்கு ஊழல் புரியும் அதிகாரியால் எதுவித ஊறும் வந்து விடாதிருக்க வேண்டும் என்பது பற்றியும் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.

இதுவரை காலமும் தகவலை வழங்குவதற்கு மறுத்துக் கொண்டிருந்த அதிகாரிகள் இப்பொழுது தகவலை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.

பொதுமக்கள் கேட்குமிடத்து அவசரமான விடயமாக இருந்தால் மூன்று நாட்களுக்குள் தகவலை வழங்க வேண்டும். அதேவேளை அந்த தகவலை மூன்று மாதங்களுக்குள்ளும் அதிகாரி வழங்கலாம்.

ஆனாலும், அந்தத் தகவலை ஏன் மூன்று நாட்களுக்குள் வழங்காமல் இருந்தார் என்பதைத் தக்க காரணத்துடன் அந்த அதிகாரி தெளிவுபடுத்த வேண்டும். எல்லாத் தகவல்களையும் வேண்டுகோளின் பேரில்தான் வழங்க வேண்டும் என்பதல்ல, தகவல்களை சுயமாகவே வழங்க வேண்டும் என்பதும் இந்த தகவல் அறியும் சட்ட மூலத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே சரியற்ற, பூர்த்தியற்ற தகவல்களை வழங்குதல், வேண்டுமென்றே மறுத்தல் அல்லது ஒழித்தல், ஆணைக்குழுமுன் தோன்றுவதை மறுத்தல், (தகவல் வழங்காதது குறித்து ஆணைக்குழு அழைத்தால் அந்த அதிகாரி ஆணைக்குழு முன் சமுகமளிக்க வேண்டும்.) போன்ற நடவடிக்கைகள் சட்டமூலத்திற்கு எதிரானவையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த அதிகாரி ஆணைக்குழுமுன் சமுகந்தரவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரமுண்டு. இந்த சட்டத்தின் மூலம் அரச நிறுவனங்கின் செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத் தன்டையுடையதாக இருக்கும் என்பதே எதிர்பார்க்கப்படும் நன்மையாகும்.

அரச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு சட்டமாக தகவலறியும் சட்டமூலம் பார்க்கப்படுகின்றது. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ, தனிப்பட்டவர்களின் நலன்களுக்கு அபகீர்த்தி ஏற்படுகின்ற வகையிலோ, வைத்திய விடயங்களின் இரகசியத் தன்மைகளைப் பாதிக்கின்றதாகவோ உள்ள விடயங்களை தகவல் அறியும் சட்டமூலத்தைப் பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது.

சர்வதேச உடன்படிக்கைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்; கொண்டிருக்கும்போது அதுபற்றிய தகவல்களை வெளியிட முடியாது. ஆயினும், உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் அதன் தகவல்களைப் பெறுவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கின்றது.

தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் தகவலறியும் சட்டமூலத்தின் பலாபலன்களை சிவில் சமூகத்திற்குக் கிட்டச் செய்யும் வகையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் வாயிலாக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் அறிவூட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சட்டமூலம் முழுமையாக பொது மக்களுக்கு நன்மை தரக்கூடிய சட்டமூலமாகும் இதனை முழுமையாக அமுல்படுத்துவது மக்களை சார்ந்ததாகும்.

LEAVE A REPLY