100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசம் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

0
193

201608040430071914_Besant-Nagar-in-Chennai--Ruined-houses-burnt-in-fire_SECVPFசென்னை பெசன்ட்நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

சென்னை பெசன்ட்நகர், வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே உள்ள ஓடைக்குப்பம் பகுதியில் இருக்கும் வீடுகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. முதலில் 2 வீடுகளில் பிடித்த தீ அதன் பிறகு மளமளவென எரிய தொடங்கியது.

இதையடுத்து அடையாறு, திருவான்மியூர், கிண்டி, தேனாம்பேட்டை உள்பட 8 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 2 மெட்ரோ குடிநீர் லாரிகளும் கொண்டுவரப்பட்டன. தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட தயாராகும் போது, வீடுகளில் இருந்த ‘கியாஸ்’ சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தூக்கி வீசப்பட்டன.

இதனால் தீ கட்டுக்கடங்காமல் அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவ தொடங்கியது. தீ வேகமாக பரவுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். இதையடுத்து, அருகில் உள்ள வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் எழுப்பி ஓடத்தொடங்கினார்கள்.

சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின. வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள், வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட் கள் எரிந்து நாசமாயின.

பாதுகாப்பு கருதி, தீ விபத்து ஏற்பட்டதும், ஓடைக்குப்பம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து தான் தீ விபத்து ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் வசித்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தீ விபத்தில் வெடித்த கியாஸ் சிலிண்டர்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. வீடுகளில் பீரோக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “நள்ளிரவு அய்யோ! அம்மா! என்ற அலறல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தோம். இதேபோல், எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த அனைவரும் தங்களுடைய பிள்ளைகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்கள். அப்போது ஏராளமான வீடுகளில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தும், காலதாமதமாக தான் அவர்கள் வந்தார்கள். இந்த விபத்தில் அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகிவிட்டன”, என்றனர்.

LEAVE A REPLY