மட்டக்களப்பு நகரை மாத்திரம் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை கொண்டு வருவதற்காக பிரதமரிடன் பேசியுள்ளேன்: முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்

0
21

Hafiz nazeer ahamad(வாழைச்சேனை நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும், அவ்வாறு செய்கின்ற போது ஏறத்தாழ 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் மட்டக்களப்பு நகரை மாத்திரம் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை கொண்டு வருவதற்காக பிரதமரிடன் பேசியுள்ளேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கான இரண்டாம் கட்ட வேலைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்!

பல ஆண்டுகள் செய்யப்படாத வேலைகளை நாங்கள் செய்து சாதித்துள்ளோம். மாகாணத்திலுள்ள ஒட்டுமொத்த அரசியல் அதிகாரங்களுக்கு நாங்கள் தீர்வுகண்டுள்ளோம். பாரிய வேலைத் திட்டங்களை நிறைவு செய்துள்ளோம். இனி என்ன வேலைகள் செய்ய வேண்டுமென தேடிப் பார்க்க வேண்டிய நிலைக்கு வேலைத் திட்டங்களை பூர்த்தி செய்துள்ளோம்.

நாங்கள் ஆட்சியமைத்ததன் பிற்பாடு முதல்கட்டமாக முதலமைச்சர்கள் எல்லோரையும் ஒன்றிணைந்து மாகாணங்களுக்கு அதிகாரம் வேண்டுமென்ற அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றியும் கண்டு, அதிகாரப்பகிர்வு வெறுமனே எழுத்துக்களால் மாத்திரம் தரப்படுகின்ற விடயமல்லாமல், நிதி ஒதுக்கீட்டுடன் கொடுக்கப்பட வேண்டிய தேவையை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எடுத்துக்கூறி கல்வித்துறையிலே பெற்றுக் கொண்டோம்.

கிழக்கு மாகாணத்தில் கல்விக்காக ஏறத்தாழ 1600 மில்லியன் ரூபாய் நிதியும், 7200 மில்லியன் ரூபாய் நிதியும் கிழக்கு மாகாணத்தில் கல்விக்காக பெற்றுக் கொண்டுள்ளோம். இருபது வருடங்களுக்குள் ஒட்டுமொத்த மாகாண சபைக்கும் கொடுக்கப்பட்ட பணத்தை விட கிழக்கு மாகாண சபைக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

13வது அரசியல் சட்ட திருத்தத்தில் சுகாதாரம் அதிகாரப் பரவலாக்கப்பட்ட விடயம். அதனால் தான் எங்களுக்குள் வைத்தியசாலை வந்துள்ளது. நிதி ஒதுக்கீடுகளை மத்திய அரசாங்கம் வைத்துக் கொள்வது நியாயமற்ற விடயமென்பதை மத்திய அரசாங்கத்திற்கு சொல்லி வருகின்ற போராட்டத்தில் இந்த வருடம் வெற்றி காண்போம்.

இப்போராட்டத்தின் காரணமாக ஏறத்தாழ 1100 மில்லியன் நிதிகளை மாகாண நிதிக்கூடாக கொண்டு வந்துள்ளோம். கடந்த வருடம் அரைவாசி நிதியே கிடைக்கப்பெற்றது. மாகாணத்தில் அதிகாரத்தை எவ்வாறு, எங்கு பயன்படுத்த வேண்டும். அந்த அதிகாரத்தின் மூலமாக எவ்வாறு செயற்படுத்த வேண்டும், அதனை மாகாணத்தில் பரவாக்கப்பட்ட ரீதியில் ஒதுக்கீடு செய்து வருகின்றோம்.

திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல கோடிக் கணக்கில் துறைமுகத்தை சிங்கப்பூர் மெரினா துறைமுகம் போன்று மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையும் பாரிய அபிவிருத்தியை நோக்கியதாக எங்களது திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. வாகரைப் பிரதேசத்தில் இரண்டு சுற்றுலா வலயங்களை அமைப்பதற்காக நானும், பிரதமரும் கடல்மார்க்கமான சென்று பார்வையிட்டோம். இதற்காக பாரிய நிதிகளை கொண்டு வேலைத் திட்டங்களை செய்வதற்கு மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் கல்வித் துறையில் 3600 மேற்பட்ட வேலைத்திட்டங்கள் நிரப்பப்படாமல் காணப்படுகின்றது. இதனை நிரப்புவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். சுகாதார துறையில் குறிப்பிட்ட காலத்தினுள் 348 வேலைகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

எங்கெல்லாம் ஓட்டை உடைசல்கள் உள்ளதோ அதையெல்லாம் இனம்கண்டு அதனை அடைப்பதற்கு வழிகளை தெரிந்தவர்களாக காய்களை நகர்த்திக் கொண்டு வருகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாணத்திலே ஒரு நல்லாட்சியை உருவாக்கியுள்ளோம். எங்களுக்குள் உறவுகளை பலப்படுத்தி வருகின்றோம்.

கிட்டத்தட்ட அறுபது வருடங்களில் அபிவிருத்தியில் பின்தங்கிய மாகாணமாக கிழக்கு மாகாண சபை காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய எங்களுக்குள் இன ஒற்றுமை தேவைப்பட்ட விடயம். இனத்தை நோக்கிய பார்வையாக பார்ப்பதை விடுத்து நாங்கள் முயற்சிக்க வேண்டும்.

விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரத்தம் தேவை எனில் அங்கு தமிழ், முஸ்லிம், சிங்கள இரத்தம் என்று கேட்பதில்லை. இன்னொரு மதத்தினுடைய இரத்தத்தை உள்வாங்க இருக்கின்ற எங்களது உள்ளங்கள் மனிதர்களாக பிரிந்து வாழ்கின்ற அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

யாராவது பசி என்று வந்தால் தமிழ் பசியா, முஸ்லிம் பசியா, சிங்கப் பசியா என்று கேட்காது வழங்குங்கள். எங்களுக்குள் உண்மையான உள்ளங்களை திறந்து பார்க்கின்ற போது இனவேறுபாடுகள் எங்களுக்குள் இருக்கும். வெறுமனே அரசியல் இலாபங்களுக்காக திணிக்கப்பட்ட விடயங்களை நாங்கள் தலையில் தூக்கிக் கொண்டு பிரித்தாடுகின்ற அரசியல் கலாச்சாரத்தை மாற்றவேண்டிய தேவைப்பாடு ஒட்டுமொத்த அரசியல் தலைமைகள், அதிகாரிகள், மக்களுக்கும் உண்டு. அவற்றையெல்லாம் மாற்றுகின்ற பொறுப்பை சுமந்தவர்களாக நாங்கள் இன்று மாகாணத்தில் வழிகாட்டியுள்ளோம்.

வடமாகாணத்தின் யாழ்ப்பாண நகரை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று அரசாங்கம் தேர்தலுக்கு திரிகின்றது போன்று திரிகின்றது. நான் மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும், அவ்வாறு செய்கின்ற போது ஏறத்தாழ 65 ஆயிரம் மில்லியன் ரூபாய் மட்டக்களப்பு நகரை மாத்திரம் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை கொண்டு வருவதற்காக பிரதமரிடன் பேசியுள்ளேன் என்றார்.

இங்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். நசீர் உரையாற்றுகையில்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியாலைகளுக்கு 50 தாதியர்கள் தேவையாக காணப்படுகின்றது. அம்பாறை கல்முனை போன்ற பிரதேசங்களில் தாதியர்கள் மேலதிகமாக காணப்படுகின்றார்கள் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். நசீர் தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்!

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் ஐம்பது வீதமான அபிவிருத்திகள் இன்னும் இடம்பெறவில்லை. அத்தோடு ஆளனிப் பிரச்சனைகள் அதிகமாக காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாதியர்கள் குறைந்தளவில் காணப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியாலைகளுக்கு 50 தாதியர்கள் தேவையாக காணப்படுகின்றது. அம்பாறை கல்முனை போன்ற பிரதேசங்களில் தாதியர்கள் மேலதிகமாக காணப்படுகின்றார்கள்.

ஆனால் ஆளனி தேவைகளை நிரப்ப வேண்டிய தேவைப்பாடும் அம்பாறை கல்முனையில் தான் உள்ளது. பொத்துவில் வைத்தியசாலைகளுக்கும், வைத்தியர்கள், தாதியர்கள் தேவைப்பாடக உள்ளது.

ஆனால் கட்டாயமாக தாதியர்கள் வழங்கப்பட வேண்டியது மட்டக்களப்பு மாவட்டத்திற்குத்தான். இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த மாகாண சுகாதாரப் பணிப்பாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதாரத் துறையில் இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியர்கள், தாதியர்கள் இல்லாத ஒரு நிலைதான் இந்த மாகாணம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அவசரமாக தாதியர்கள் தேவை தொடர்பாக மத்திய அரசுடன் பேசவுள்ளோம். அவர்கள் உடனடியாக வழங்கும் பட்சத்தில் மிறாவோடை வைத்தியசாலைக்கு ஒரு தாதி வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன்.

வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் கடமையில் உள்ளார்களான என்று மாகாண உயர் அதிகாரிகள் பார்கின்ற போது நாளேட்டில் கையொப்பம் உள்ளது. ஆனால் கடமையில் அவர்கள் இல்லை. இதனை தட்டிக் கேட்டால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இவ்வாறான நிலைகளால் தான் வைத்தியசாலைகள் பெரிதும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறானவர்கள் பிழை செய்வதால் மக்களுக்கு எவ்வாறு சேவைகளை வழங்கி முடியும். இதனால் மக்கள் எங்களுக்கு தகாத வார்த்தைகளால் தொலைபேசியில் பேசுகின்றார்கள்.

அதிகாரிகள் சேவைகளை சரியாக செய்கின்ற போது எங்களுக்கு இவ்வாறான பேச்சுகளை கேட்க வேண்டிய தேவை ஏற்படாது. மக்கள் தந்த ஆணையின் பிரகாரம் எதுவித பாகுபாடுமின்றி மாகாணம் முழுவதும் சேவைகளை செய்து வருகின்றோம்.

வைத்தியர்கள், தாதியர்கள் வழங்குகின்ற ஒத்துழைப்பில் தான் வைத்தியசாலைகளில் நிலவுகின்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய முடியும். முதலமைச்சர் மத்திய அரசிடம் இருந்து சுகாதார துறைக்கு பல நிதி உதவிகளை பெற்று தருகின்றார்கள். நான் இந்த அமைச்சின் பெயரலவில் தான் இருக்கின்றேன். மறைமுகமாக முதலமைச்சர் எனக்கு பக்கபலமாக இருந்து செயற்படுகின்றார் என்றார்.

மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உரையாற்றுகையில்.

வைத்தியர்கள் வெளி கிளினிக்கில் கடமையாற்றாது வைத்தியசாலையில் முழுமனதுடன் கடமையாற்றினால் வைத்தியசாலையை முன்னேற்ற முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

மீராவோடை வைத்தியசாலையில் காணப்படும் அம்புலேஸ் வண்டியானது மோசமான முறையில் காணப்படுகின்றது. இங்கிருந்து ஒருவரை வேறு வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்வது மிகவும் கஷ்டமாக காணப்படுகின்றது.

அத்தோடு தாதியர் இங்கு முழுநேரமும் சேவையாற்ற வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதன் காரணமாக தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், அம்புலேஸ் வண்டியையும் வழங்க வேண்டிய தேவைப்பாடாக காணப்படுகின்றது. இப்பிரதேசத்திலும், அண்மையிலும் தமிழ் முஸ்லிம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள்.

முதலமைச்சரினால் கல்குடா பிரதேசத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதில் இரண்டு துறைகளில் மேற்கொள்கின்றோம். பாடசாலை மற்றும் வீதிகளை அபிவிருத்தி செய்கின்றோம். குறிப்பாக முஸ்லிம் பகுதிகளைப் பொறுத்த மட்டில் காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களை விட கல்குடா பிரதேசத்தில் அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்குடா பிரதேசத்தில் அமைச்சர் இருந்தும் முழுமையான சேவைகள் இடம்பெறவில்லை என்பது மிகக் கவலையாக உள்ளது. அரசியல் பழிவாங்கல் காரணமாக மீராவோடை வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் நன்றாக கவனித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையூடாக என்ன வேலைத் திட்டங்களை செய்ய முடியுமோ அனைத்தையும் கல்குடாப் பிரதேசத்தில் மேற்கொள்வோம். எதிர்வரும் காலங்களிலும் எந்தவித வேறுபாடுமின்றி முஸ்லிம் பகுதிக்கு வழங்குவது போன்று தமிழ் பகுதிக்கும் மூன்று மடங்காக நிதிகள் வழங்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் மக்களின் ஏகபோக பிரதிநிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து இரு சமூகமும் ஒன்றுமையாக வாழவும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயத்திலும், பிழை செய்து விடக்கூடாது என்ற விடயத்திலும் காணப்படுகின்றோம்.

எதிர்காலத்தில் இதனை விட பல்வேறு அபிவிருத்தி பணிகளை கல்குடா பிரதேசத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். வைத்தியசாலை அபிவிருத்திக் குழு ஒழுங்காக இயங்கும் பட்சத்தில் வைத்தியசாலை அபிவிருத்தியடையும்.

வைத்தியர்கள் தங்களுடைய வைத்தியசாலை போன்று கடமையாற்றுவதுடனும், வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெளி கிளினிக்கில் கடமையாற்றாது வைத்தியசாலையில் கடமையாற்றினால் வைத்தியசாலை முன்னேற்ற முடியும் என்றார்.

கிழக்கு மாகாண சபையின் “Pளுனுபு” திட்டத்தில் வெளி நோயாளர் பிரிவு கட்டிடத்தின் இரண்டாம் கட்ட வேலைகளுக்காக நாட்பத்தெட்டு லட்சம் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

LEAVE A REPLY