(Article) கலாசார அடையாளமும் இனவாதப்பார்வையும்: ஜுனைட் நளீமி

0
302

junaid-naleemiஅண்மையில் இலங்கையின் தென் புலத்தில் முஸ்லிம் ஒருவருக்குச்சொந்தமான முச்சக்கரவண்டியில் ஒட்டப்பட்டிருந்த லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத்துர்ரஸூலுல்லாஹ் என்றவாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒன்றினை பெரும்பாண்மை இன சகோதரர்கள் கழட்டிவிடுமாறு பணிக்கின்ற காணொளி வைரலாக சமூகவலைத்தளங்களில் பரவியிருந்தது.

யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் முஸ்லிம் சமூகம் மீதுமேற்கொள்ளப்படும் இனவாதநடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையினை இது காட்டிநின்றது. என்ற போதும், இது தொடர்பிலான ஆழ்ந்த கலந்தாய்வுகள் சமூகமட்ட புத்திஜீவிகள் மேற்கொள்ளவேண்டுமென்ற செய்தியையும் அது இட்டுச்சென்றுள்ளதெனக் கருதவேண்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமானசவால் தமது சமய கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதில் எவ்வாறு பெரும்பான்மை சமூகத்தின் சந்தேகப்பார்வையிலிருந்து விடுவித்துக்கொள்வதென்ற அம்சமாகும். இதுகுறித்து இங்கு நோக்குவது பொருத்தமாக அமையும்.

முஸ்லிம் தேசியம் தொடர்பான எண்ணக்கரு

இலங்கையின் பிரதான இனங்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் தமதுதேசம் தேசியம் தொடர்பான நிறுவுதல்களை மேற்கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளன. தேசம் என்ற ஆட்புல எல்லையை வரையறுப்பதில் நிலப்பரப்பு, தனியானமொழி,குடிப்பரம்பல் என்பவற்றுடன் இன, மதஅடையாளம் என்ற அம்சமும் சர்வதேசத்தில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டிருப்பதனால், இலங்கையின் தமிழ் சமூகம் வரலாற்று ரீதியாக நிலத்துவ அடையாளத்தையும் மொழியையும் முன்னிறுத்தி தாம் தனியான தமிழ் தேசமக்கள் என்ற வாதத்தினைமுன்வைத்து தனியழகுக் கோரிக்கையினை முன்வைத்தனர்.

மதமும் கலாசாரமும் பௌத்தர்களுடன் இரண்டறக்கலந்திருப்பதால் தாம் தனியான தேசியம் மற்றும் தேசத்தவர் என்ற நிறுவுதலுக்குமொழியையே ஆயுதமாகக் கொண்டனர். இதனால் இரு மொழிக்கொள்கைசமர் வலுப்பெற்றது.

ஆனால்,எதுவித தனியழகுக் கோரிக்கையும் இல்லாமல் யுத்தத்தினால் பாதிப்புற்ற முஸ்லிம் சமூகத்தினை முஸ்லிம் தேசியம் என்றே தமிழ்,சிங்கள தரப்பு குறிப்பிட்டுவந்தது. ஏனெனில், இனப்பிரச்சினைத்தீர்வு முயற்சியின் போது, முஸ்லிம்களுக்கான தீர்வுப்பொறி முறை தனியாக வழங்க முடியாதென்ற நிலைப்பாட்டினை இவ்விரண்டு சமூகமும் கொண்டிருந்தன.

யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் முஸ்லிம் தேசம் என்றகோசம் வலுப்பெற்றது. அரபுத்தமிழ் என்ற வாசகங்களுக்கப்பால் தனியான கலாசார அடையாளம் என்ற பகுதி கூடுதலாக சமூகத்தில் வலுப்பெற்றது. பட்டி தொட்டியெங்கும் அபாயாக்கள்,மத்திய கிழக்குஅரபுக்களின் நீண்ட ஜூப்பாக்கள்,மசூதிகளின் நிர்மாணம்,அரபு எழுத்துக்கள் கொண்டபதாதைகளை, இயக்க மோதல்கள், இஸ்லாமிய வங்கி அமைப்புக்கள் எனப்பல அம்சங்கள் விரிவாக்கம் பெற்றன.

இவற்றுக்கப்பால் முஸ்லிம் அரசியல் கடசிகளின் தோற்றம்,வளர்ச்சி மற்றும் ஆட்சி நிர்ணயசக்தி என்பன முஸ்லிம் தேசம் குறித்த நியாயப்பாட்டினை பேசுவதற்கு ஏதுவாகின. முஸ்லிம் தேசியம் என்ற பதத்தினை கசப்புடன் ஏற்றுக்கொண்டபெரும்பான்மைச் சமூகம்,தேசம் குறித்த சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனால் முஸ்லிம் சமூகம் குறித்த சந்தேகப்பார்வையினை பேரின வாதக்குழுக்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் மீது திணிக்கமுற்பட்டது. இதன் உச்சகட்டநிலையே அழுத்தகமை வன்முறையாகப் பரிணமித்ததைக் காணமுடியும்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில்,பேரினவாதசக்திகள் இனவாதம் பேசி ஆடசிக்கதிரையில் அமர்ந்துவிடுமோ என்ற அச்சம் சிறுபான்மைச் சமூகத்திடம் ஏற்பட்டுள்ளது.

அத்தகைய நிலைக்கு வாய்ப்பாக முஸ்லிம் சமூகம் மீதான திட்டமிட்ட வன்முறைக் கட்டவிழ்ப்பு மேற்கொள்ளப்படலாமென யூகம் கொள்ளவேண்டியுள்ளது. எனவே, முஸ்லிம் சமூகம் தனது கலாசார அடையாளம் குறித்த மீள்வாசிப்பினைச் செய்ய வேண்டியுள்ளது.

அரபு மொழி மயமாக்கல்

கடந்த காலங்களில் எந்தவொரு அரபுப்பதங்களும்,எழுத்துக்களும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்படவில்லை. ஆனால், இஸ்லாத்தின் பெயரால் சர்வதேசத்தில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னர் இலங்கை சமூகமும் முஸ்லிம் சமூகம் மீது சந்தேகப்பார்வை கொண்டுள்ளதென்பதனை விளங்கிக் கொள்ளவேண்டும்.

குறிப்பாக,ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர் உள்ளனர் என்ற செய்திகள் பெரும்பான்மைச் சமூகத்தை விழிப்படையச் செய்துள்ளது. அண்மையில்,முச்சக்கர வண்டியிலிருந்த ஸ்டிக்கர் கூட சஹாதாகலிமாவை அரபியில் கொண்டுஅதன் கீழ் வாழ் ஒன்றும் பொறிக்கப்பட்டிருந்தது.

அதனைக்குறிப்பிட்டு பெரும்பான்மை சகோதரர் இது என்ன வாள் எனச்சந்தேகத்துடன் வினவுகிறார். இஸ்லாம் வாளினால் பரப்பப்பட்ட மார்க்கமென குற்றச்சாட்டுக்கள் உள்ளநிலையில்,அவ்வாறல்ல எனக்குறிப்பிடும் நாம்,ஏன் கலிமாவுடன் வாளினைப் பொறிக்க வேண்டுமெனச் சிந்திக்கவேண்டியுள்ளது. சின்ஹலே ஸ்டிக்கர் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட சமூகம் நாம் என்பதை மறந்து செயற்படுவது எவ்வகையில் நியாயப்பாடானது என்ற வினாவும் உள்ளது.

சில முஸ்லிம் பிரதேசங்களில் வீதிகளின் பெயர்களும்,பதாதைகளைஅரபு எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியினைக் கிளப்பியுள்ளது. யாரைத் திருப்திப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள். எங்கிருந்தோ வருகின்ற சில அரபுக்களைத் திருப்திப்படுத்துவதா? அல்லது எம்முடன் காலாகாலம் வாழும் சகோதர இனத்தினைத் திருப்திப்படுத்துவதா? என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது.

ஆடைக்கலாசாரம்

முஸ்லிம்களது உடை தொடர்பில் இஸ்லாமிய அறிஞர்கள் வழிகாட்டல்களை முன்வைக்கவேண்டும். கருப்பு நிற அபாயாக்கள் தான் இஸ்லாமிய உடை என பாமரமக்கள் கருதுமளவுக்கு நிலைமை மாறியுள்ளது. பல நிற அபாயாக்கள் அணியமுடியுமா? அவுரத்தை மறைக்குமளவு அபாயா தவிர்ந்த வேறுஆடைகளும் அணியமுடியுமா? என்ற விடயங்கள் சமூகத்தளத்தில் பேசப்படவேண்டும். உதாரணமாக மலேசிய, இந்தோனேசிய முஸ்லிம்கள் தமக்கான தனியான கலாசார உடைகளை அணிந்து கொள்ளும் போது, நாம் ஆடை தொடர்பில் இஸ்லாமிய நிலைப்பாட்டினை வலியுறுத்த வேண்டியுள்ளது.

மஸ்ஜிதுகள் உருவாக்கம்.

இலங்கையில் புதிய மஸ்ஜிதுகளில் உருவாக்கமும் முஸ்லிம்கள் மீதான சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விஸ்தீரணம் செய்யப்பட வேண்டிய பல பள்ளிவாசல்கள் இருக்கும் நிலையில்,அவற்றை முதன்மைப்படுத்தாது புதிய பள்ளிவாசல் அமைப்பதற்கான இடம் தேடி அலைகின்ற நிலை குறித்தும் சிந்திக்கவேண்டியுள்ளது. ஒலி பெருக்கிப் பாவனை எந்தளவு மாற்று சமூகத்தை வெறுப்புக்குள்ளாக்குகின்றது என்பதனை ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது.

அதான் தவிர ஏனைய பலவிடயங்கள் ஒலிபெருக்கி மூலம் மேற்கொள்ளப்படுவதனால்,பலமுறைப்பாடுகளை பிணக்குக்களும் ஏற்பட்டுள்ளன. ஒரு முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசத்தில் உயர் தரப்பரீட்சசை காலத்தில் ஒலிபெருக்கி மூலம் இரவு முழுக்க தொடர்ந்தும் மஸ்ஜித்கள் இடம்பெறுவதால் தனது பிள்ளை படிக்க முடியாத சூழல் எனஒரு முஸ்லிம் சகோதரரே பொலீசில் முறைப்பாடு செய்தமை அண்மைய கால நிகழ்வுகள்.

இவற்றுக்கெல்லாம் அப்பால் பள்ளிவாசல்கள் அமைக்கின்ற போது,உயர்ந்த மினாராக்களை பெரும்பான்மைச்சமூகம் வாழ்கின்ற பிரதேசங்களில் அமைப்பது இனமுறுகளை ஏற்படுத்துமாயின்,அது குறித்த தீர்வுகள் குறித்து அறிவுபூர்வமாக ஆராய வேண்டியுள்ளது.

உண்மையில்,உமையா,அப்பாஸிய காலக்கட்டடக்கலை வடிவமே உயர்ந்தமினாராக்கள். நபி (ஸல்) காலப்பகுதியில் அமைக்கப்பட்ட மஸ்ஜிதுகள் எதுவும் மினாராக்களை கொண்டிருந்ததாக காணமுடியவில்லை. மக்கா மதினா சிறந்த சான்றாகும்.

பள்ளிவாயல்களை கட்டடக்கலை கொண்டு அலங்கரிப்பது கூடாது என்று சொல்லவரவில்லை. மாறாக,எமது தொழுகைக்கு கூடத்தடையாக அமைந்துவிடுமோ என்ற சூழ்நிலையில் குறித்தவிடயம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ ஆலயங்களை விலை கொடுத்து வாங்கி சில மாற்றங்களுடன் பள்ளிவாசலாகப் பயன்படுத்தும் நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் இது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

அரேபிய எழுச்சிகளை உள்ளூர் நிகழ்ச்சிகளாக்கள்

முஸ்லிம் உலகில் ஏற்படும் நிகழ்வுகளை அதீத முக்கியத்துவம் கொடுத்து சிலாகித்து மாநாடுகளை,பிராணிகளையும் நடாத்துவது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. சில வேளை தமது சிந்தனை முகாம் ஏற்படுத்தும் சாதக,பாதகங்களுடன் உள்ளூர் முஸ்லிம் சமூகத்தையும் கோர்த்துவிடும் நிலையும் முஸ்லிம்கள் மீதான சந்தேகப்பார்வைக்கு காரணமாகின்றது.

காசாயுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எதிர்த்து பேரணி செய்ய முற்படுகின்றபோது, ஏனைய சமூகப்பிரதிநிதிகள் அமைப்புக்களையும் சேர்த்துக்கொள்ள என்ற அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டியது. ஏனெனில்,தனியாக முஸ்லிம் சமூகம் இத்தகைய பேரணியை மேற்கொள்ளும் போது, இனவாத கண்ணோடடத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துவிடும்.

அண்மையில் துருக்கிய இராணுவ சதிப்புரட்சி தொடர்பில் ஒருவர் துருக்கிய அரசுக்கெதிராக இலங்கையில் சதி என்ற தலைப்பில் உண்மைக்குப்புறம்பான விடயத்தை முன்வைத்திருந்தார். துருக்கிய அரசின் சிந்தனை முகாம் மீதான அதீத பற்றினால் உந்தப்பட்டு, இலங்கையிலுள்ள ஐ.டி.எப்,லேனியம் போன்ற நிறுவனங்கள் இலங்கையில் பயங்கரவாதத்தைப் போதிக்கின்றன என்று எழுதியதுடன் உண்மைக்குப்புறம்பான பல விடயங்களை குறிப்பிட்டிருந்தமை தமது சிந்தனை முகாம் சாந்தவர்களை திருப்திப்படுத்த முடியுமாக இருந்தபோதும்,பெரும்பான்மை சமூக மட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற பிழையான எண்ணக்கருவினை உருவாக்க வாய்ப்பாக அமைந்துவிடும்.

முஸ்லிம் ஊடகங்கள் எனக்குறிப்பிடும் சில ஊடகங்களும் இத்தகைய செய்திகளின் பின்விளைவுகள் தெரியாது உண்மைத்தன்மையைஆராயாமல் பிரசுரம் செய்வது நடுநிலை ஊடகதர்மமாக ஆகாதென்பதுடன்,எமது சமூகத்தை பிழையாக வழி நடாத்த வாய்ப்பாக அமைந்துவிடும்.

மேற்குறிப்பிட்டது போன்ற பல்வேறு கலாசார விழுமியங்கள் குறித்த மீள்பார்வை இஸ்லாமிய புத்திஜீவிகள் மட்டத்தில் பரிசீலனைக்குட்படுத்தப்படவேண்டிய தேவையுள்ளது. சிறுபான்மை முஸ்லிம்களாகவாழும் நாம் அண்மையில் துருக்கிய நிகழ்வு குறித்து மாற்றினச கோதரர் முன்வைத்த கருத்தினை நோக்க வேண்டியுள்ளது.

துருக்கி இஸ்லாமிய நாடாக இருக்கவேண்டுமென வாதிடும் முஸ்லிம் சகோதரர்கள் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியா மதச்சார்பற்ற பல்லின கலாசாரம் கொண்ட நாடாக இருக்கவேண்டுமென வாதிடுவது எவ்வாறு நியாயமானது? எனக்கேள்வியெழுப்பி இருந்தார்.

எனவே இஸ்லாமிய கலாசாரம், இஸ்லாமிய அரசியல்,மதச்சார்பற்ற அரசியல் யாப்பு என்பன குறித்த பல்வேறு விடயங்களை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்து,பேசு பொருளாக்கி தீர்வினையும் முன்வைக்க வேண்டிய கட்டாயத் தேவையில், முஸ்லிம் புத்திஜீவிகளும் இஸ்லாமிய அமைப்புக்களும் தள்ளப்பட்டுள்ளன. இதனுடாகத்தான் முஸ்லிம் தேசியம், முஸ்லீம் தேசம் தொடர்பான வாதங்களை நியாயப்பாடுகளுடன் ஏற்புடையதாக முன்வைக்கமுடியும்.

LEAVE A REPLY