(Poem) சுவனத்து சுகந்தம்.!!!

0
21

(எம்ரிஎம்.யூனுஸ்)

03.08.1990
நினைத்துப் பார்க்கையில்
இதயம் கனதியாக
விம்மி வெடித்து…
கண்ணீரை கட்டியாக
கொட்டி நிற்கிறது…!

என் வயதுக்கார உறவு
#இம்தியாஸ் கண்களுக்குள்
அடிக்கடி
வந்து போகிறான்…
வியாழனன்று அவன்
பள்ளி சிற்றுண்டியகத்தில்
வாங்கித் தந்த
மரவள்ளி அவியல் போல…!

இடைவேளை வந்தால்
எனக்கும் அவனுக்கும்…
இடைவெளியே இருந்ததில்லை…
புசிப்பதில் பாதியை
பங்கு போட்டான்…!

என்னை தேடிப்பிடித்து
இறை இல்லத்துக்கு
இழுத்துச் சென்று…
தொழுகைப் பாடம் நடத்தியவன்…
சுஜுதின் முகவரியை
சின்ன வயதிலேயே
சீராய் பெற்றவன்…!

அவன் சின்னச் சிரிப்பு…
அலாதியான பேச்சு…
குசும்பபுப் பார்வை…
கம்பீர நடை…
சின்னத்தனமான சீண்டல்…
தடாவுகிறது இதயத்தை…!

அவனுக்கு
மூத்தம்மா முத்தம்
எப்போதும் பிடிக்கும்…
துப்பாக்கி முத்தம்
எப்படி அவன்
உயிரை எடுத்தது
எட்டு வயதில்…!

கபன் கட்டில்கூட
சிரிப்போடே பூத்திருந்தான்…
உன் கை… கால்… நாடி…
கட்டுப்போட்டு வளர்த்தியது…
நீயும் நானும் கண்கட்டி
விளையாடிய மீட்டலுக்கா..!

உன் புன் சிரிப்பை
என்னால் எப்போதுமே
மறக்க முடியவில்லை…
நீ நிச்சயம்
சுவனத்து சுகந்தங்களை
சுவாசிப்பாய்…
நானோ இப்போதுகூட
சலனங்களோடே
சயனிக்கிறேன்…!

ஒருநாள் வருவேன்
சந்திப்பிற்காக…
அதுவரை சுவனத்து
சுகந்தங்களை சுவைத்திரு…!

LEAVE A REPLY